திருப்புகழ்க் கதைகள்: சேரமான்

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 239
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன் –

நாதவிந்து கலாதீ – பழநி
சேரமான் பெருமாள் நாயனார்

மலை நாட்டிலே மகோதை என்னும் பெயரை உடைய கொடுங்கோளூரிலே, சேரர் குடியிலே, பெருமாக்கோதையார் என்னும் சற்புத்திரர் ஒருவர் தோன்றினார். அவர் இளமையிலேயே வைராக்கியமுற்று சிவபக்தி மிகுந்து, இராஜ கருமத்தை வெறுத்து, திருவஞ்சைக்களத்திலேயே திருவாலயத் தொண்டினை அன்புடன் செய்வாராயினார். திருவஞ்சைக்களம் செல்ல கேரளா மாநிலத்தில் சென்னைகொச்சி இருப்புப்பாதையில் இரிஞாலக்குடா நிலையத்தில் இறங்கிச் செல்லவேண்டும். அங்கிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. திரிச்சூரிலிருந்து 32 கிமீ தூரத்தில் உள்ளது.

அக்காலத்தில் செங்கோற் பொறையன் என்னும், சேர மகாராஜன் துறவறத்தை மேற்கொண்டு, தவவனம் அடைந்தான். மந்திரிமார்கள் அவனிடம் திருவஞ்சைக்களம் சென்று, பெருமாக்கோதையாரை வணங்கி அரசராகும்படி வேண்டினர். எனவே போறையன் சிவ ஆணை மேற்கொண்டு, அறிவு, ஆற்றல், பெருங்கொடை, பற்பல படைகள், பக்தி நெறி வழுவாமல் அரசியற்றும் ஆண்மை, சிவபெருமான்பால் பெற்று, நல்ல சுப தினத்திலே முடிசூடப் புறப்பட்டார்.

சிவாலயத்தை வணங்கி, யானை மீதூர்ந்து வெண்கொற்றக் குடை நிழற்ற, வெண்சாமரமிரட்ட, சகல விருதுகளுடன் பவனி வந்தார். அப்போது ஒரு வண்ணான் உவர் மண்ணைச் சுமந்து வர, மழையினாலே கரைந்த உவர் மண் அவ்வண்ணான் உடம்பில் விபூதி பூசியதுபோல் தோன்ற, அதுகண்ட பெருமாக்கோதையார் என்னும் சேரமான் பெருமாள் நாயனார், உடனே யானையினின்றும் இறங்கி விரைந்து போய் வணங்கினார். அதுகண்டு வண்ணான் நடுநடுங்கி, அவரை வணங்கி, “அண்ணலே, அடியேன் அடி வண்ணான்” என்று சொல்ல, சேரமான் பெருமாள் நாயனாரும் “தேவரீர் திருநீற்று வடிவத்தை நினைப்பித்தீர், அடியேன் அடிச் சேரன், வருந்தாதீர் போம்” என்று சொல்லியருளினார். அவருடைய அடியார் பக்தியைக் கண்ட மந்திரிமார்கள் மிகவும் மகிழ்வுற்றனர்.

சேரமான் பெருமாள் நாயனார் நாள் தோறும் செய்யும் பூசை முடிவிலே நடராஜப் பெருமானுடைய திருச் சிலம்பொலி கேட்கும். ஒருமுறை பாணபத்திரருக்கு பொருள் கொடுக்குமாறு சிவபெருமான் திருமுகப்பாசுரம் கொடுத்தனுப்பினார். அதனைச் சென்னிமேற்கொண்டு வணங்கி, அத்திருமுகங் கொண்டு வந்த பாண பத்திரருக்கு அளவில்லா செல்வங்களை நல்கி உபசரித்தார்.

ஒரு நாள் பூஜை முடிவிலே சபாநாதருடைய சிலம்பொலி கேட்கவில்லை. சேரமான்பெருமாள் நாயனார் மனம் மயங்கினார். “அடியேன் யாது பிழை செய்தேனோ? இனி இந்த உடம்பை ஒழிப்பேன்” என்று வாள் கொண்டு உயிர்விடத் துணிந்தனர். உடனே சபாநாயகர் சிலம்பொலி கேட்கச் செய்து “அன்பனே! சுந்தரமூர்த்தியின் பாடலைக் கேட்டு வந்ததால் தாமதமானது” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய பெருமையை வெளிப்படுத்தினார்.

சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தெரிசிக்கும் ஆவல்கொண்டு, திருவாரூர் சென்று வன்தொண்டரை வணங்கி, வன்மீகநாதர் மீது மும்மணிக் கோவையையும், சபாநாதர் மீது பொன்வண்ணத்து அந்தாதியையும், வேதாரணியர் மீது திருவந்தாதியையும் படி வழிப்பட்டார். பல நாட்களுக்குப் பின் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தம்முடைய கொடுங்கோளூருக்கு அழைத்துச் சென்று, மிகவும் உபசரித்து அவருடன் மிக்கதோர் நட்பு கொண்டு, தமது செல்வமுழுவதையும் கொடுத்து ஆரூருக்கு அனுப்பினார்; அவரை மறவாது அரசு செய்து வந்தார்.

பின்னர் ஒரு சமயம் சுந்தரமூர்த்தி நாயனார் கொடுங்கோளூருக்கு வந்து சேரமான் பெருமாள் நாயனாருடன் தங்கியிருந்தார். பல நாளாயின. பின் சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களஞ் சென்று சுவாமி தரிசனஞ் செய்தபோது, திருக்கைலாயத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளை யானையின்மேல் ஏறி, இந்திரன், மால், பிரமன், எழிலார் மிகு தேவர் எல்லாரும் வந்து எதிர் கொள்ளச் செல்லும் போது, தனது அருமைத்தோழராகிய சேரமான் பெருமாள் நாயனாரை நினைத்தார். நீராடிக் கொண்டிருந்த சேரமான் பெருமாள் நாயனார், தம்பிரான் தோழருடைய நினைவை உணர்ந்து உடனே அருகிலே நின்ற குதிரைமீது ஏறி, திருவஞ்சைக்களம் சென்று, ஐராவதமூர்ந்து ஆகாயத்திற் செல்லும் ஆரூரடிகளைக் கண்டார்.

அடுத்து நடந்தது என்ன? நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply