திருப்புகழ் கதைகள்: அசையும் பொருளின் இசை!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் (237)
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நாதவிந்து கலாதீ – பழநி
அசையும் பொருளின் இசை

நாத விந்து கலாதி நமோநம என்று தொடங்கும் இத்திருப்புகழில் பல செய்திகள் உள்ளன. முதலில், முதல் வரியில் உள்ள இசை பற்றிய செய்தியக் காணலாம்.

இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர். எனவேதான் அருணகிரியார் நாத விந்து என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்.

இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும். தொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பல பொருட்களில் இருந்து, பண்டைய காலத்தில் இசை எவ்வாறு இருந்தது என்பதை ஊகித்தறிய முடிகிறது. பழைய கற்காலத்தில் மனிதர்கள் எலும்புகளில் துளைகளையிட்டு புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக அறியப்படுகிறது. மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது பண்ணிசைக்கு ஏற்பக் காலடி வைத்து ஆடும் ஆட்டம். நாடகம் என்பது கதை நிகழ்வைக் காட்டும் தொடர் கூத்து. சங்ககாலத்தில் கூத்து ஆடியவரைக் கூத்தர் என்றனர். நாடகம் ஆடியவரைப் பொருநர் என்றனர்.

இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்களையும் இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப்பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

தென்னிந்தியாவில் மிகப் பிரபலமானது கருநாடக இசை அல்லது பண்ணிசை. உலகின் தொன்மையான இசை வடிவங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. செம்மொழியான தமிழ் மொழியில் ஏழிசை எனப்படுவன குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இந்த ஏழு இசைகளை ‘ஸ்வரம்’ என்றனர். கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு ஸ்வரங்களும் ஸ – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

ஸ ரி க ம ப த நி, என்பவை ஏழு சுரங்களாகும். இவற்றை சப்தஸ்வரங்கள் என்பர். இவற்றை சிவபெருமான் படைத்தார் என்பதை நாம் முன்னரே பார்த்தோம். மனம் லயித்து இசையைப் பாடத்தொடங்கும்பொது நாம் பரமானந்த நிலையை அடைகிறோம். இசையைக் கேட்பவர்களும் பரமானந்த நிலையை அடைகிறார்கள்.

அறிவியல் கொள்கைகளின்படி இசை என்பது ஒரு freqyency. அதாவது ஒரு அசைவு. அசையும் பொருட்கள் ஒலியைத் தரும். அது ஒழுங்கான அசைவாக இருந்தால் அந்த ஓசை இசையாக மாறும். இதனைத்தான் நடிகர் திலகம் நடித்த திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பாடலொன்றில்

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

என்று கவியரசு கண்ணதாசன் பாடலெழுதியிருப்பார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply