திருப்புகழ்க் கதைகள் 236
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நாதவிந்து கலாதீ – பழநி
சிறுவயதில் என் வீட்டில் அனைவருக்கும் ஒரு பாட்டு நோட்டு இருந்தது. அதிலே அனைவரும் அவர்களுக்குப் பிடித்த பாடலை எழுதி வைத்துக்கொள்வார்கள். ஒருவேளை பாட்டு கிளாஸ் செல்பவராக இருந்தால் அதில் இசை கற்பது சம்பந்தமான பாடற் குறிப்புகள் இருக்கும். அப்படி என்வீட்டில் அனைவரது இடம் பெற்ற இரு பாடல் இந்தத் திருப்புகழ். இதன் மெட்டு எளிமையானது; என்வே பாடுவது மிகச் சுலபம்.
இது அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெழுபதாவது திருப்புகழ். ‘நாதவிந்து கலாதீ’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா, உன்னைப் பலமுறையும் வணங்குகின்றேன்; அருள் புரிவாய்” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம …… அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு …… மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக …… வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி …… லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – இல்லை என்று இரக்கும் இரவலருக்கு, இல்லை என்னாத ஈகையும், பற்பல விதமான சம்பிரமத்தோடு கூடிய பூசையும், வேதாகமாதி அறிவு நூல்களையும், தேவாரம் திருவாசகம் முதலிய முத்தி நூல்களையும் ஓதி உணர்தலும், நற்குணங்களும், நல்லொழுக்கமும், நல்ல நீதிநெறிகளும் உயிர்களிடத்தல் இரக்கமும், குருநாதனுடைய திருவடித் தாமரையை மறவாத தன்மையுமாகிய சிறந்த நற்குணங்களை உடையவர் வாழ்கின்றதும், சப்த தீவினர்களால் புகழப்படுகின்றதும் காவிரி நதியால் வளமுற்று விளங்குவதுமாகிய சோழ மண்டலத்தில், மனதைக் கவரும் வனப்புடைய ராஜகெம்பீர வளநாட்டினை அரசாளும் நாயகரே;
அந்நாட்டில் மிகவும் சிறப்புடன் விளங்கும் வயலூரில் வாழ்பவரே; தம்மிடத்து மிகவும் அன்பு பொருந்திய சுந்தரமூர்த்தி சுவாமிகளது நட்பைப் பெற்று, அப்பெருந்தகையார் திருக்கயிலாயத்திற்குப் புறப்பட்டபோது அவருடனேயே, முன்னாளில் ஆடுவதும் போருக்குரிய உக்கிரமுடையதுமாகிய குதிரையின் மீது ஏறி, பெருமை பொருந்திய திருக்கைலாய மலைக்குச் சென்று, திருக்கைலாய ஆதி உலா என்னும் பிரபந்தத்தை அங்கு ஆசுகவியாகப் பாடியருளிய சேரமான் பெருமான் நாயனார் அரசு செய்யும் பேற்றைப் பெற்ற கொங்கு தேசத்தில், நல்ல காவூர் நாட்டிலுள்ள திருவாவினன்குடி என்னும் திவ்விய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ளவரே; தேவர்கள் பெருமாளே;
நாதம் விந்து கலை என்பவைகட்கு முதல்வரே, நமஸ்காரம் நமஸ்காரம்; வேதமந்திர சொரூபரே! நமஸ்காரம் நமஸ்காரம். ஞான பண்டிதரே! நமஸ்காரம் நமஸ்காரம். அநேக கோடி திருநாமங்களை யுடையவரும், சுககாரணருமாகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே! நமஸ்காரம் நமஸ்காரம். வினைப் பயன்களைத் துய்க்கச் செய்யும் போகசக்தியாகிய சிவகாமி அம்மையாரது திருப்புதல்வரே! நமஸ்காரம் நமஸ்காரம். கால்களில் அரவங்கள் சுற்றப்பட்டுள்ள மயிலை வாகனமாக உடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம். பகைத்து வந்த சூரபன்மன் முதலிய அசுரசேனைகளை அழித்துத் தண்டித்தருளிய திருவிளையாடலைப் புரிந்தவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.
இனியவொலியையுடைய தண்டை சதங்கைகளை யணிந்துள்ள திருவடிக் கமலங்களை யுடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம். தீரமும் சம்பிரமும் வீரமு முடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம். மலைகளுக்கு நாயகரே! ஞான தீபகமாகத் திகழ்பவரே! நமஸ்காரம் நமஸ்காரம். அருள் வெளியில் ஆனந்தக் கூத்தாடுபவரே! நமஸ்காரம் நமஸ்காரம். தெய்வயானை யம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே! நமஸ்காரம் நமஸ்காரம். அடியேனுக்குத் தேவரீருடைய திருவருளைத் தந்தருள்வீர் – என்பதாகும்.
இனி இந்தத் திருப்புகழில் உள்ள அருட் செய்திகளை நாளை காணலாம்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com