திருப்புகழ்க் கதைகள் 233 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தலைவலி மருத்தீடு – பழநி இராம சேது
இராம சேது அமைத்த வரலாற்றை ஏற்கனவே அண்மையில் பார்த்தோம். இப்போது சில கூடுதல் செய்திகளைக் காணலாம். இராமபிரான் கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி, வருணனை நினைத்து, கரத்தைத் தலையணையாக வைத்து, கிழக்கு முகமாகப் படுத்தார்.
அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்திலிருந்திருக்க வேண்டிய அவரது திருமேனி அங்கே தரையில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள் சமுத்திர ராஜன் நேரில் தோன்ற தவமிருந்தார். மூடனான சமுத்திரராஜன் இராமருக்கு முன் வரவில்லை.
இராமருக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று சமுத்திரத்தை வற்றச் செய்கிறேன்; மூடர்களிடத்தில் பொறுமை காட்டக்கூடாது; வில்லைக் கொண்டுவா; திவ்விய அஸ்திரங்களையும் எடுத்துவா. சமுத்திரத்தை வற்றச்செய்து வானரர்களைக் காலால் நடந்து இலங்கை செல்லச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள் நடுங்க, கோதண்டத்தை வளைத்து நாணேற்றிப் பிரளய காலாக்கினிபோல் நின்றார்.
அப்போது கடல் கொந்தளித்தது; சூரியன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது; வானில் எரிகற்கள் தோன்றின; நிலநடுக்கம் ஏற்பட்டு மலைகள் நடுங்கின; ஆங்கிலத்தில் “the bolt from the blue” என்று சொல்வது போல மேகங்களின்றியே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்தார். இலட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டதென்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள் “இனி உய்வு இல்லை”என்று அசைவற்றுக் கிடந்தன.
உடனே மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல், கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருண பகவான் “இராம இராம” என்று துதித்துக் கொண்டு தோன்றி, காலகாலரைப் போல் கடுங் கோபத்துடன் நிற்கும் இரகுவீரரிடம் வந்து பணிந்து, “இராகவரே! என்னை மன்னிப்பீர்” என வணங்கி நின்றான்.
அப்போது இராமர் மிகுந்த மரியாதையுடன் “நதிகளின் நாயகனே, எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது; இதை நான் எவ்விடத்தில் செலுத்தவேண்டும் சொல்லுக” என்றார்.
அதற்கு வருணன் “வடதிசையில் என்னைச் சேர்ந்த துருமகுல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை விட்டருள்வீர்” என்று வேண்டினான்.
இராமர், உடனே அக்கணையை அவ்விடம் நோக்கி விடுத்தார். அக்கணை சென்று அந்த இடத்தைப் பிளக்க ரஸாதலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரணகூபம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என வழங்கப்படுகிறது.
அதன் பின்னர் வருணன் தன் மேல் சேது கட்டிச் செல்லுமாறு இராமபிரானிடம் கூறினார். அதனை கம்பர் மிக அழகாக பின்வரும் இரண்டு பாடல்களில் உரைக்கிறார்.
ஆழமும் அகலம் தானும் அளப்ப அரிது எனக்கும், ஐய! ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை; வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறு காலம் எல்லாம் தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும் – தவத்தின் மிக்காய்!
கல்லென வலித்து நிற்பின், கணக்கு இலா உயிர்கள் எல்லாம் ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று ஒழுகா வண்ணம் எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென், இனிதின்; எந்தாய்! செல்லுதி, “சேது” என்று ஒன்று இயற்றி, என் சிரத்தின் மேலாய்.
பிறகு வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே, கடலை வற்றச் செய்து பின்னர் இந்த வானரப்படை இலங்கையை நடந்து செல்வது என்பது சரியல்ல. இந்தக் கடலின் ஆழம் எவ்வளவு என எனக்குத் தெரியாது. எனவே நீங்கள் என்மீது இரு சேது அமைத்து அதன் மீதேறி இலங்கை செல்லுங்கள்” என்றான். Source: தமிழ் தினசரி | dhinasari.com