திருப்புகழ்க் கதைகள் 223 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சுருளளக பார – பழநி திரிநேத்ர தசபுஜ ஹனுமன்
சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனுக்கு, அனந்தமங்கலம் நிரந்தர வாசஸ்தலம். ஆதலால் இங்கு இவரை வழிபட கால நேரம் வரையறை இல்லை. எனினும் அவர் அவதரித்த மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினத்திலும், பிரதிமாதம் அமாவாசை தினத்திலும், புதன், வியாழன், சனிக்கிழமைகளிலும், கேட்டை நட்சத்திரத்திலும், மற்றும் ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி திதி ஆகிய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கிக் கொள்ளலாம்.
இலங்கையில் யுத்தம் செய்து, சீதையை மீட்ட பின்னர், புஷ்பக விமானம் ஏறி இராமன், சீதை, இலட்சுமணன், அனுமன் முதலியோர் அயோத்திக்கு திரும்பினர். வழியில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி அனைவரும் விருந்து உண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர் இராமபிரானை வாழ்த்தினார். பின்னர் அவர் இராமபிரானிடம் ‘இராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் இரக்தபிந்து, இரக்தராட்சகன் ஆகிய இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணன் போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர். ஆதலால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.
இராமபிரான், ‘நாரதரே, தாங்கள் சொன்னபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க ஆற்றலுடைய மாவீரன் அனுமனை அனுப்புவோம்’ என்றார்.
அனைவரும் இதை ஆமோதிக்க அனுமனும் பணிவுடன் தன் ஒப்புதலைத் தெரிவித்தார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அட்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான அரக்கர்களை வெல்ல இது போதாது.
எனவே திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும் அளித்தனர். இராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கி அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார்.
கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் இராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் ‘ஆனந்தமங்கலம்’ என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி, திருக்கடவூர், தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கடவூர் – தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது. சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அருகாமை ரெயில் நிலையங்கள் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகியன ஆகும். Source: தமிழ் தினசரி | dhinasari.com