e0af8d-e0ae85e0aeb5e0aea9e0aebf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 148
அவனிதனிலே பிறந்து – பழநி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிப் பத்தாவது திருப்புகழ் ‘அவனிதனிலே பிறந்து’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பெண் மையலில் அழியாமல், அடியார்களுடன் கூடிவாழ அருள்புரிவாயாக” என அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இப்பாடலில் வேண்டுகிறார். முகனூலிலும் பிற சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக உலா வரும் திருப்புகழ் இது. இனி திருப்புகழைக் காணலாம்.
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து …… இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து …… துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற …… னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த …… மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க …… வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த …… கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருள் – ஆலின் புடை அமர்ந்து அருந்தவர் நால்வர்கட்கும் ஆரண ஆகம சாரமாகிய அத்துவிதத்தின் உண்மையை மௌன முத்திரையைக் காட்டியே நன்கு விளங்குமாறு உபதேசித்தருளியவரும் சுக காரணரும், பிறைச் சந்திரனையும், அறுகம் புல்லையும், கங்கா நதியையும், தும்பை மலரையும் அழகிய சடைமுடியின் மீது தரித்துக் கொண்டுள்ள பெரிய தேவரும் ஆகிய சிவமூர்த்தியினுடைய திருவுள்ளமானது மகிழ்ச்சி அடையுமாறு கலந்து இடப்பாகத்தில் எழுந்தருளியவரும் மலைமன்னனது திருமகளாருமாகிய உமையம்மையாருடைய திருக்குமாரரே. வெற்றியை உடையதும் கூர்மையை உடையதுமாகிய வேலாயுதத்தைக் கரத்தில் தரித்தவரே. திரு உலாப் போந்து அருளத் திருவுளங் கொண்டு மரகத மயிலின் மீது ஊர்ந்து, மிகுந்த ஒளியுடன் விளங்கி உலகம் அதிரும்படி எழுந்தருளி வரும் வீரக்கழலை அணிந்த வீராதி வீரரே. பூதலத்தில் மோக்ஷ உலகம்போல் விளங்கும் செந்திலம்பதியில், அடியார்கள் முருகக்கடவுளே என்று வணங்கி உய்யுமாறு இருந்தும் பழநிமலையின்மேல் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே.
மண்ணுலகில் (அடியேன்) பிறந்து, மதலைப் பருவத்தில் தவழ்ந்து, பாலப் பருவத்தில் இளநடையுடன் அழகாக நடந்து, இளைஞனாய் அருமையான மதலைச் சொற்கள் மிகுந்து இனிய குதலை மொழிகளையே பேசி, பதினாறாம் ஆண்டு நிரம்பியபின், சைவ சமய சித்தாந்த நூல்களையும் சிவாகமங்களையும், வேதங்களையும் நன்கு உணர்ந்து, ஓதுகின்ற மெய்யன்பர்களுடைய திருவடிகளை உள்ளத்தில் நினைத்து, ஆவியீடேறும் பொருட்டு துதிக்காமல், பெண்களின் மீது பெரிய மயக்கமும் ஆசையும் கொண்டு அதனால் மிகுந்த கவலையை அடைந்து, பெண்களையடையும் பொருட்டு காற்றாடி போல் சுற்றித் திரிகின்ற அடியேனைத் தேவரீரது திருவடித் தாமரைகளில் சேர்த்து அருள்புரிவீர். – என்பதாகும்.
இந்தத் திருப்புகழ் மீண்டும் ஒரு முறை மனிதனின் வளர்ச்சி நிலைகளைப் பாடுகிறது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம், பதினாறு வயதை அடையும் பருவம் என பல பருவங்களை இப்பாடலில் அருணகிரியார் குறிப்பிடுகிறார்.
…… பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து ……
என்ற வரிகளில் பதினாறு வயதை அடைந்ததும் சிவகலைகள், மறைகள் கற்பதில் ஈடுபடவேண்டும் என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார். ஆன்மாக்களுடன் அநாதியே இருந்து, பதியை அடைய ஒட்டாது மறைத்து, தன்னையும் காட்டாது பிறவற்றையும் அறிய ஒட்டாமல் செய்யும் ஆணவ மலத்தினின்று நீங்கி, சிவத்தை அடையும் செந்நெறியை உணர்த்தி, உயிர்க்கு உறுதியை நல்கும் பதிநூல்களே சிவகலைகளாகும். அவை அடியிற்கண்ட பதினான்கு நூல்களாகும்.
உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தஅருட்
பண்புவினா போற்றி கொடிபாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று.
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், திருபாவிருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்பன.
இப்பதினான்கு நூல்களை நற்குணம் அடைந்த சற்குரு மூர்த்தியை அடுத்து, அவர்பால் ஓதியுணர்ந்து, “பொய் கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித” நிலையை அடைதல் வேண்டும். இந்நூல்களையே மெய்கண்ட சாத்திரம் என்பர். இச்சித்தாந்த சாத்திரங்களை ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெறுவார்களாக.
இதனை அடுத்து அருணகிரியார் ஆகமங்கள் பற்றிப் பேசுகிறார். ஆகமம் என்பதற்கு ஆ-பாசம், க-பசு, ம-மலநாசம்; முப்பொருள்களை உணர்த்துவது என்பது பொருள். ஆ-சிவஞானம், க-மோக்ஷம், ம-மலநாசம் மலத்தைக் கெடுத்து மோக்ஷத்தை அருளுவது என்றும் பொருள்படும். இறைவன் திருமுகத்தினின்றும் வந்தது என்றும் பொருள்படும்.
ஆகமம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பாதங்களையுடையது. “நாலாரு மாமகத்தின் நூல்” என்றார் பிறிதோரிடத்தில்; பதி பசுபாச இலக்கணங்களைத் தெளிவாகக் கூறுவது; சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்ரமார்க்கம், தாசமார்க்கம் என்ற நான்கு வழிகளையுடையது.
இவ்வாகமம் 28 வகை. அவையாவன காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விஜயம், நிச்சுவாகம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேச்சுரம், கிரணம், வாதுளம். – என்பனவாம்.
திருப்புகழ் கதைகள்: அவனிதனிலே பிறந்து..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.