e0af8d-e0aeaae0aeb2e0af8de0aeb5.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 140
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அதல விதல முதல் – பழநி
முரசு – பல்வகை முரசுகள்
முரசு ஓர் தோற்கருவி. தோல் கருவிகளுக்கு பறை ஒரு பொதுப் பெயராகும் இப்போது தோற்கருவிகளை நாம் எண்பது வகையாகப் பகுக்கலாம்.
அவையாவன: 1. அடக்கம். 2. அந்தரி, 3. அமுதகுண்டலி, 4. அரிப்பறை, 5. ஆகுளி, 6. ஆமந்திரிகை, 7. ஆவஞ்சி, 8. உடல், 9. உடுக்கை, 10. உறுமி, 11. எல்லரி, 12. ஏறங்கோள், 13. ஒருவாய்க்கோதை, 14. கஞ்சிரா, 15. கண்விடுதூம்பு, 16. கணப்பறை, 17. கண்டிகை, 18. கரடிகை, 19. கல்லல், 20. கல்லலகு, 21. கல்லவடத்திரள், 22. கிணை, 23. கிரிக்கட்டி, 24. குடமுழா, 25. குண்டலம், 26. கும்மடி, 27. கைத்திரி, 28. கொட்டு, 29. கோட்பறை, 30. சகடை, 31. சந்திரபிறை 32. சூரியபிறை, 33. சந்திரவளையம், 34. சல்லரி, 35. சல்லிகை, 36. சிறுபறை, 37. சுத்தமத்தளம், 38. செண்டா, 39. டமாரம், 40. தக்கை, 41. தகுணித்தம், 42. தட்டை, 43. தடாரி, 44. தண்டோல், 45. தண்ணுமை, 46. தபலா, 47. தமருகம், 48. தமுக்கு, 49. தவண்டை, 50. தவில், 51. தாசரிதப்பட்டை, 52. திமிலா, 53. துடி, 54. துடுமை, 55. துத்திரி, 56. துந்துபி, 57. தூரியம், 58. தொண்டகச் சிறுபறை, 59. தோலக், 60. நகரி, 61. நிசாளம், 62. படவம், 63. படலிகை, 64. பம்பை, 65. பதலை, 66. பறை, 67. பாகம், 68. பூமாடு வாத்தியம், 69. பெரும்பறை, 70. பெல்ஜியக்கண்ணாடி மத்தளம், 71. பேரி, 72. மகுளி, 73. மத்தளம், 74. முரசு, 76. முருடு, 77. முழவு, 78. மேளம், 79. மொந்தை, 80. விரலேறு என்பனவாகும்.
இவை நூல்களிலிருந்தும் வழக்காற்றிலிருந்தும் பெறப்பட்டவையாகும். சந்திர பிறை, சூரியபிறை, சந்திரவளையம், தபலா, பெல்ஜியக் கண்ணாடி, ஜமலிகா போன்ற தாளக் கருவிகள் பிற்காலத்தவையாகும்.
இக்கருவிகளுள் பல இலக்கியக் குறிப்புகளின் மூலமாக மட்டுமே அறிய முடிகிறது. தற்காலத்தில் இவை காணப்படவில்லை. இசையுணர்வுடன் இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் மிகுதியாக உள்ளன என்பது அனைவரும் அறிந்த உண்மை. இக்கருவிகள் யாவும் பறை எனும் சிறு கருவியிலிருந்து சிறிதுசிறிதாக தேவைக்கேற்றபடி, ஒலி வேறுபாடுகள் உடையனவாக அளவிலும், வடிவத்திலும் வேறுபாடுகள் உடையனவாக, பல்வேறு முழவுக் கருவிகளாக உருவாகியுள்ளன. கருவியின் தன்மைக்கேற்ப, கருவியில் எழும் ஒலியின் தன்மைக்கேற்ப கருவிகள் பயன்பட்ட காலங்களும், பொழுதுகளும் வேறுபட்டு விளங்குகின்றன.
ஆதி தமிழனின் கொண்டாட்டமான பறை இசை தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பதினெண்கீழ்கணக்கு நூல்கள், காப்பியங்கள், இடைக்கால, தற்கால இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது. முரசின் ஒலி அரைக் கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. ஆலயங்களில் ஒலிக்கக்கூடிய பஞ்ச வாத்தியங்களில் (திமிலை, மத்தளம், இந்தளம், உடுக்கை, கொம்பு) முரசு வகையிலான தாளக் கருவிகளும் உள்ளன.
அக்காலத்தில் வீரமுரசு கொட்டி மன்னர்கள் போருக்குப் புறப்படுவார்கள். முரசு கொட்டும் ஒலி கேட்டு வீரர்கள் போர்க்கோலம் கொள்வார்கள். செய்திகளை மக்களுக்கு அறிவிக்கவும் முரசு, பறை போன்ற இசைக் கருவிகள் பயன்பட்டன. இன்றும் பயன்படுகின்றன. பறை கொட்டும் ஒலி கேட்டு மக்கள் பொது இடங்களில் கூடுவார்கள். அவர்களுக்கு செய்தி அறிவிப்பவன் செய்தியைக் கூறுவான். இவ்வாறு தோல் இசைக் கருவிகள் தமிழர் வாழ்வில் ஒன்றாக இணைந்திருந்தன.
வெற்றிக்காக கொட்டுவது வீர முரசு அல்லது வெற்றிமுரசு. போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசமாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீரமுரசமாகும். கொடை முரசு அல்லது தியாக முரசு ஆகியவை வண்மையின் சின்னம் எனக் கருதப்படுகிறது.
தான தருமங்கள் செய்யும் போது கொட்டுவது கொடை முரசு. தியாக முரசு என்பது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசாகும். திருமணத்தில் ஒலிப்பது மண முரசு. திருமணம், கோவில் விழாக்களுக்கு அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் மணமுரசு இசைக்கப்படுகிறது. காவல் முரசு என்பது காவலர்கள் காவல் செய்யும் பொழுது அடிக்கப்படுவது.
நியாய முரசு என்பது செம்மையின் சின்னம். நீதி முரசம் என்பது நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது.). படை முரசம் போருக்குப் புறப்படும் முன்னர் ஒலிக்கப்படுவது.
பிள்ளைத்தமிழ் நூல்களில் கானப்படும் சிறுபறைப் பருவம் பகுதிகளில் இருந்து, குழந்தைப் பருவத்திலிருந்தே பறையொலித்தல் உண்டு என்பதை நாம் அறிகிறோம். குமரகுருபரர் அருளிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில்
வம்மி னெனப்புல வோரை யழைத்திடு வண்கொடை முரசமென
வடகலை தென்கலை யொடுபயி லுங்கவி வாணர்க ளோடிவர
அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்றவ ணங்கை மணம்புணரும்
அணிகிளர் மணமுர சென்னவெ மையனொ டம்மை மனங்குளிரத்
தெம்முனை சாயச் சமர்விளை யாடிச் செங்கள வேள்விசெயும்
திறன்முர செனவிமை யவர்விழ வயரச் செழுநகர் வீதிதொறு
மும்முர சமுமதிர் காவிரி நாடன் முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் முழக்குக சிறுபறையே …… 9
என்று குமரகுருபரர் கொடைமுரசு, மணமுரசு, திறன்முரசு என மூன்று முரசுகளைப் பற்றி தனது பாடலில் சொல்கிறார்.
திருப்புகழ் கதைகள்: பல்வகை முரசுகள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.