ஒரிஸ்ஸாவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பாயும் சுபர்ணரேகா என்னும் நதி தீரத்தில் அமைந்துள்ள ரோகினி நகர் என்னும் ஊரில் 1590 ல் பிறந்தவர் ரசிக முராரி என்னும் அடியவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த ரசிக முராரி எப்போது பார்த்தாலும் அவர் பெயரையே உச்சரித்துக்கொண்டிருப்பார்.
வைஷ்ணவ குரு ஜீவ கோஸ்வாமி என்பரின் ஆணைக்கிணங்க, ஸ்ரீ சியாமானந்தா தாகூர் என்னும் அடியவர் பிருந்தாவனத்தில் தங்கி, அங்கு கிருஷ்ண கானங்களை ஆராய்ச்சி செய்து அவற்றை படித்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படி அவர் கீர்த்தனைகளை படித்துவிட்டு தியானத்தில் மூழ்கியிருக்கும்போது ஸ்ரீ மதனகோபால ஸ்வாமி அவரது முன் தோன்றி, “வத்ஸ, நீ உடனே உத்கலுக்கு புறப்படுவாயாக. அங்கு என்னையே சதா தியானித்துக் கொண்டிருக்கும் என் பக்தன் ரசிக முராரிக்கு ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தை உபதேசிப்பயாக” என்று கட்டளையிட்டு மறைந்தார்.
இதை ஏதோ கனவு என்று கருதிய சியாமானந்தர் இதை அலட்சியப்படுத்தவே, அவரது குருநாதர் ஜீவ கோஸ்வாமியின் கனவில் தோன்றிய புருஷோத்தமன், உடனே அவரது சீடர் சியாமானந்தரை உத்கலுக்கு அனுப்பி ரசிக முராரிக்கு ஸ்ரீ கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசிக்கும்படி ஆணையிட்டார். குருவின் கட்டளையையடுத்து உடனே உத்கலுக்கு புறப்பட்டார் சியாமானந்தர்.
சியாமானந்தர் உத்கலை அடைந்தது 1608 ஆம் ஆண்டு. அங்கு ரசிக முராரிக்கு கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
அவரது சமாதி இன்றும் ஒரிஸ்ஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு பாதுகாத்து வருகின்றனர்.
சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் சுபர்ணரேகா நதிக்கரையில் வாழ்ந்து வந்தார்.
பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒரிஸா மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்த சுபேதார் அஹமது பைக் என்பவருக்கு ரசிக முராரியின் இந்த கிருஷ்ணபக்தி பிடிக்கவில்லை. மேலும் ரசிக முராரியின் பேச்சும் உபதேசமும் பாடல்களும் பாமரரையும் கிருஷ்ணர் பால் ஈர்த்து எங்கெங்கு பார்க்கிலும் கிருஷ்ணனின் நாமாவே ஒலித்தது.
இது சுபேதார் அஹமதுவுக்கு மேலும் எரிச்சலை தந்தது. அப்போது அந்த ராஜ்ஜியத்தில் மதம் பிடித்த பட்டத்து யானை ஒன்று இருந்தது. எதற்கும் அடங்க மறுத்து அட்டகாசம் செய்து வந்தது.
ஒரு நாள் ரசிக முராரியை சந்தித்த சுபேதார் அஹமது அவரிடம், “மதம் பிடித்த எதற்கும் அடங்காத யானை ஒன்று என்னிடம் இருக்கிறது. அதனை அடக்கி உன் கிருஷ்ணனுக்கு உள்ள சக்தியை உன்னால் காட்ட முடியுமா? ஒருவேளை இதில் நீ தோற்றால் உனக்கு கடுமையான தண்டனைகள் தரப்படும்” என்றார்.
ரசிக முராரி சிறிது கூட தயங்காமல், “இதோ இப்போதே புறப்படுவோம் உன் யானையை பார்க்க” என்றார்.
யானையை அடைத்து வைத்திருக்கும் கொட்டிலுக்குள் தனியே சென்றார் ரசிக முராரி. உள்ளே சென்றதும் யானை இவரை நோக்கி ஆவேசமாக வந்தது. ஸ்ரீ கிருஷ்ணரை மனதுக்குள் தியானித்தவர், யானையின் இரண்டு காதுகளிலும் அந்த மஹா மந்திரத்தை உபதேசித்தார். அடுத்து யாருமே எதிர்பார்க்க வகையில் யானையின் குணம் மாறத் துவங்கியது. ஆக்ரோஷமாக பிளிறிக்கொண்டு வந்த யானை பரம சாதுவாகிப் போனது. அத்தோடு மட்டுமல்லாமல், காண்போர் அனைவரும் வியக்கும் வண்ணம் ரசிக முராரியை மண்டியிட்டு வணங்கவும் செய்தது.
இதை கண்ணெதிரே பார்த்த சுபேதார் அஹமது, ரசிக முராரியிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, தானும் பகவான் கிருஷ்ணரின் மகிமையை போற்றத் துவங்கினார்.
இதற்கு பிறகு தனது ஊரான கோபி பல்லவபூருக்கு புறப்பட்டு சென்றார் ரசிக முராரி. இதனிடையே பூரியின் பிரபல தேரோட்டம் வந்தது.
ரசிக முராரிக்கோ தேரை காணவேண்டும் என்று கொள்ளை ஆசை. உடனே பூரியை நோக்கி பாத யாத்திரையாகவே புறப்பட்டார் ரசிக முராரி. செல்லும் வழியில் பைதாரணி நதிக் கரையில் உள்ள பல்வேறு ஷேத்ரங்களையும் தரிசித்தவாறே சென்றார். ஆகையால் பூரியை சென்றடைய கால தாமதம் ஏற்பட்டது.
ஆனால் இங்கே பூரியில் தேரோட்டம் துவங்கிவிட்டது. சிம்மவாயிலில் இருந்து படாதண்டாவில் உள்ள குண்டீச்சா ஆலயத்தை நோக்கி தேர் ஓடத் துவங்கியது. இது எப்படியோ பூரியை நோக்கி வந்துகொண்டிருந்த ரசிக முராரிக்கு தெரிந்துவிட்டது.
“ஹே.. ஜகந்நாதா… இந்த எளியவன் வரும் வரை நீ காத்திருக்கக் கூடாதா? உன் தேரோட்டத்தை காணவேண்டும் என்று தானே நான் ஓடோடி வந்துகொண்டிருக்கிறேன்…?” என்று ஜகந்நாதரை நோக்கி பிரார்த்தித்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த மூன்று தேர்களும் அப்படியே நின்றுவிட்டன. ஒரு அடி கூட அதற்கு பிறகு நகரவில்லை. குதிரைகள், யானைகள் என்று வரவழைக்கப்பட்டு தேர்கள் இழுக்கப்பட்டன. ம்ஹூம்… ஒரு அடி கூட நகரவில்லை.
தேரோட்டம் திடீரெனெ நின்று போன விஷயம் மன்னன் கஜபதியை சென்றடைந்தது. அவன் என்னவோ ஏதோ என்று கவலைப்பட்டான்.
ஜகந்நாதரின் தீவிர பக்தன் அவன். “ஐயனே… என் ஆட்சியில் ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் பொருத்தருள வேண்டும். தேரை எப்படியாவது ஓடச் செய். இல்லையேல்… என்னைத் தான் எல்லோரும் பழிப்பார்கள்.” என்று மனமுருகி பிரார்த்தித்துக்கொண்டான்.
அன்றிரவு அவன் கனவில் தோன்றிய ஜகந்நாதர், “மன்னா… கவலை வேண்டாம். என் அடியவன் ரசிக முராரி என்பவன் என்னை காண ஓடோடி வந்துகொண்டிருக்கிறான். அவன் தற்போது துளசிசௌரா என்னுமிடத்தில் இருக்கிறான். இன்னும் சில மணிநேரங்களில் அவன் பூரிக்கு வந்துவிடுவான். அவன் வந்து என்னைக் கண்டவுடன் தேர் நகரத் துவங்கும் என்று கூறி மறைந்தார்.
உடனே திடுக்கிட்டு விழித்த கஜபதி, பொழுது விடிந்ததும் தனது பரிவாரங்களுடன் சென்று பூரியின் எல்லையிலேயே ரசிக முராரியை மேள தாளத்தோடு அரசு மரியாதையோடு வரவேற்றான். திடீரென பூரியின் அரசனே தன்னை வரவேற்க படை பரிவாரங்களோடு புறப்பட்டு வந்த காரணம் புரியாது விழித்த ரசிக முராரியிடம் ஜகந்நாதர் தனது கனவில் தோன்றி கூறியதை கஜபதி விளக்கினான். அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார் ரசிக முராரி.
அடுத்து இருவரும் தேர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு புறப்பட்டனர். ஜகந்நாதரின் தேரை கண்டவுடன் இருகரமும் கூப்பி கண்ணீர் மல்க தொழுதார் ரசிக முராரி. கஜபதியின் வேண்டுகோளுக்கிணங்க, தேர் வடத்தின் மீது ரசிக முராரி கை வைக்க, அடுத்த நொடி தேர் நகரத் தொடங்கியது.
ரசிக முராரியின் திருச்சமாதி
இந்த அதிசயம் 1640 ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஆலய பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரசிக முராரி ரசிகானந்தா என்றே அழைக்கப்படலானார்.
இவரது சமாதி ஒரிஸ்ஸாவில் பாலேஸ்வர் மாவட்டத்தில் ரெமுனா என்னும் ஊரில் உள்ள கிராசோரா கோபிநாதர் ஆலயத்தில் உள்ளது
பக்தருக்காக நின்ற ரதம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.