நவநீத நாட்டியம்…!

ஆன்மிக கட்டுரைகள்

navaneedha krishnan
navaneedha krishnan
  • கட்டுரை: கே.ஜி.ராமலிங்கம்

கண்ணனே நட்கட் என்றால் நான் அவனுக்கே அம்மா என்ன சும்மாவா ?

ஒரு நாள்… யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். ‘விரைவில் நமக்கு வெண்ணெய் கிடைக்கும்!’ என்ற எண்ணத்தோடு யசோதையின் அருகிலேயே படுத்திருந்தார் ஸ்வாமி.

அவள் கடைந்து முடிப்பதாகத் தெரியவில்லை. மெள்ள எழுந்த கண்ணன், தயிர்ப் பானையை எட்டிப் பார்த்தான். திரண்டு வந்த வெண்ணெய் மேலாகச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘‘எனக்குத் தா!’’ என்று வாயைத் திறந்து கேட்கவும் கூச்சம். சாதுரியமாகப் பேச்சைத் தொடங்கினான் கண்ணன்.

‘‘அம்மா! இந்தத் தயிர்ப்பானை நடுவில், ‘கும்கும்’ என்று ஏதோ வெள்ளையாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறதே! அது என்ன?’’ என்றான்.

யசோதை சிரித்தாள். ‘தயிர் கடைந்தால் வருவது வெண்ணெய் என்று தெரியாதவன் போல் கேட்கிறானே கண்ணன்!’ என்று நினைத்த அவள், ‘‘கிருஷ்ணா! இது ஒரு மாதிரி பூதம். சில நேரம் தயிர்ப்பானையிலும் தோன்றும். கண்ணா. நீ இங்கே பக்கத்தில் நிற்காதே. தள்ளி தூரமாகப் போய்விடு!’’ என பதில் சொன்னாள்.

கண்ணனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘நாம் சாதுரிய மாகக் கேட்கிறோம் என்றால், இவள் அதற்கும் மேலாக பதில் சொல்கிறாளே!’ என்று எண்ணிய ஸ்வாமி மேலும் தொடர்ந்தார்.

‘‘அம்மா! அது பூதம் என்றால் ஆளை விழுங்கி விடாதா? நீ மட்டும் அதன் பக்கத்தில் இருக்கலாமா? அது உன்னை விழுங்கி விட்டால், நான் என்ன செய்வேன்? அந்த பூதம் நம்மை விழுங்குவதற்குள் அதை எடுத்து என் கையில் கொடுத்து விடு. நான் விழுங்கி விடுகிறேன். நாம் இருவருமே தப்பிக்கலாம்!’’ என்றான் கண்ணன்.

‘இத்தனூண்டு வெண்ணெய்க் காக இப்படிக் கெஞ்சுகிறானே குழந்தை!’ என்று கொஞ்சம்கூட இரக்கம் இல்லை யசோதைக்கு. ஒரு நிபந்தனை போட்டாள்.

‘‘இதோ பார் கண்ணா, நான் தயிர் கடைந்து முடிக்கிற வரையில் நீ ஆடினால் வெண்ணெய் தருவேன். நான் இடக் கையால் மத்துக் கயிற்றை இழுக்கும்போது, நீ இடக்காலைத் தூக்க வேண்டும். நான் வலக் கையால் இழுக்கும் போது, உன் வலக் கால் மேலே இருக்க வேண்டும். மாற்றி மாற்றி இப்படித் தாளம் தப்பாமல் ஆடி னால் வெண்ணெய் தருவேன்!’’ என்றாள் யசோதை.

அகில உலகங்களையும் ஆட்டி வைக்கும் ஸ்வாமி, யசோதை போட்ட நிபந்தனைப்படியே ஆடினான். ‘குழந்தைக்குக் கால் நோகுமே’ என்ற எண்ணம் இல்லாதவளைப் போல, யசோதை தன் போக்கில் வேகவேகமாகக் கடைந்து கொண்டிருந்தாள்.

அந்த வேகத்துக்கும் ஈடு கொடுத்து ஆடினான் கண்ணன். அவன் கால்களை மாற்றுவது கண்ணுக்குத் தெரியவில்லை. எப்போதும் ஒரு கால் உயரத் தூக்கியபடியே தெரிந்தது. வியர்க்க, விறுவிறுக்கக் கண்ணன் ஆடிய அந்த நாட்டியத்துக்கு அபூர்வமான ஒரு பெயரைச் சூட்டினார்கள் மகான்கள்.
“ஆடலைக் காண தில்லை அம்பலத்து இறைவனும் தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார்….”

கண்ணன் ஆடியது பரத நாட்டியமோ, கதகளியோ, குச்சுப்புடியோ, மணிப்புரியோ அல்ல. அண்ட சராசரங்களை ஆட்டிப் படைக்கும் ஸ்வாமி, ஒரு கை வெண்ணெய்க்காக ஆடியதை ‘நவநீத நாட்டியம்’ என்கிறார்கள்.

யசோதை கடைந்து முடித்தாள். ஸ்வாமியும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, கோயிலில் பிரசாதத்தை எதிர்நோக்கும் பக்தனைப் போல, யசோதையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஒரு யானைத் தலை அளவுக்கு வெண்ணெய் தருவாள் அம்மா!’ என்ற எதிர்பார்ப்பு.

யசோதையோ ஒரு கடுக்காய் அளவுக்குச் சிறிய வெண்ணெய் உருண்டையுடன் கண்ணனை நெருங்கினாள்.

அதற்குள் ஸ்வாமி ஒரு தந்திரம் செய்தார். ‘அதை, குறைந்த பட்சம் இரண்டு கடுக்காய் அளவுக்காவது ஆக்கிவிடலாம்!’ என்ற எண்ணத்தில் ஒரு தூணின் பக்கத்தில் போய் நின்றார். அந்தத் தூண் அவ்வப்போது வெண்ணெய்க் கையைத் தடவித் தடவி, கண்ணாடி போலப் பளபளத்தது. அதில் தெரிந்த வடிவத்தையும் சேர்த்து, இரண்டு கண்ணன் நிற்பதைப் போல இருந்தது. ‘இரண்டு கண்ணனுக்கு இரண்டு வெண்ணெய் உருண்டை களைக் கொடுப்பாள் யசோதை!’ என்பது ஸ்வாமியின் எண்ணம்.

ஸ்வாமிக்கு இவ்வளவு இருந்தால், ஸ்வாமியை வளர்த்து அவன் லீலைகளையெல்லாம் அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற யசோதைக்கு எவ்வளவு இருக்கும்?

ஸ்வாமியின் லீலையில் தன்னை மறந்தாள் யசோதை. ‘நமக்கு இரண்டு கண்ணன்கள் போலிருக்கிறது. இந்த இருவருக்குமே வெண்ணெய் தர வேண்டும்’ என நினைத்தாள்.

‘ஆஹா! நமக்குத்தான் வெற்றி!’ என சந்தோஷப்பட்ட ஸ்வாமி ஆசை யாகக் கை நீட்டினார்.

எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள் யசோதை. தன் கையில் வைத்திருந்த கடுக்காய் அளவு வெண்ணெயை இரண்டு பங்காக்கி இருவருக்கும் கொடுத்தாளாம்…!!!!!

நவநீத நாட்டியம்…! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply