e0af8d-e0ae9ae0ae95e0af8de0ae95.jpg" style="display: block; margin: 1em auto">


திருப்புகழ்க் கதைகள் 121
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
படர்புவியின் – திருச்செந்தூர்
சக்கரத் தியாகர் – திருப்பைஞ்ஞீலி
திருச்சி அருகில் உள்ளதும் பாடல் பெற்ற திருத்தலமுமான திருப்பைஞ்ஞீலியில், ‘முத்துமலை’ என்ற பாறையில் உள்ள சோமாஸ்கந் தருக்கும் ‘சக்கரத்தியாகர்’ என்று பெயருண்டு. இங்கும் விஷ்ணுவுக்கு, சிவபெருமான் சக்கரமளித்தார் என்ப தால், இப்பெயர் பெற்றதாக தல புராணம் குறிப்பிடுகிறது.
இவ்வரலாற்றையெல்லாம் அருணகிரிநாதர் இப்பாடலில், மேற்சொன்ன வரிகளில் தருகிறார். ஒருசமயம் வலிமை மிகுந்த அசுரர்கள் திருமாலுடன் போர் புரிய, அவர்களை வெல்லும் ஆற்றல் இன்றி அவர் வாட்டமுற்றனர். அப்போது சிவபெருமானிடம் சலந்தரனைக் கொன்ற சக்கரம் இருந்தது. அதனைப் பெற்று அசுரர்களை அழிக்கவேண்டும் என்று திருமால் விரும்பினார்.
சலந்தரன் கங்கை வயிற்றில் சமுத்திர ராசனுக்குப் பிறந்தவன். அளவிட முடியாத ஆற்றல் படைத்தவன். இவன் மனைவி பிருந்தை. இவன் மிக்க இளைமையிலேயே தன் கைக்கு அகப்பட்ட பிரமதேவரைக் கழுத்திற் பிடித்து வருத்தி விட்டவன். இந்திரன் முதலிய இமையவர் இவனிடம் போர் புரிந்து தோற்றுப் புறங் கொடுத்து ஓடி ஒளிந்தார்கள். திருமால் இவனிடம் அமர் புரிந்து ஆற்றல் தேய்ந்து அல்லல்பட்டுத் தோற்றோடினார்.
இறுதியில் சலந்தரன் திருக்கயிலாய மலைக்குச் சென்றான். அங்கே சிவபெருமான், ஒரு முதுமறையவர் உருவில் கோபுர வாசலில் இருந்தார். “அப்பா எங்கே போகின்றாய்? என்று வினவினார். “சிவனுடன் போர் புரியப் போகிறேன்” என்றான். “அப்படியா! நல்லது” என்று அக்கிழவர் கூறித் தன் இடக்காலால் நிலத்தில் வட்டமாகக் கீறி, “இதை உன்னால் எடுக்க முடியுமா? என்றார்.
“ஓய்! இந்த உலகத்தையே எடுக்கும் ஆற்றல் படைத்த என்னால் இதனை எடுக்க முடியாதா?” என்று சலந்தரன் கூறி, வட்டமான அதனைப் பேர்த்துத் தலையில் வைத்தான். அது கூரிய சக்ராயுதமாகி அவன் உடம்பைப் பிளந்துவிட்டது. இந்தச் சக்ராயுதம் சிவபெமானிடம் இருந்தது. இதனைப் பெறுதல் வேண்டும் என்று கருதிய திருமால், திருவீழிமிழலை என்ற திருத்தலஞ் சென்றார். தாமரைக் குளம் அமைத்து, நாள் தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் சிவமூர்த்தியை மிகுந்த அன்புடன் உள்ளம் குழைந்து உருகி வழிபட்டு வந்தார்.

சிவபெருமான் ஒருநாள் அவருடைய அன்பை மற்றவர்கட்குக் காட்டும்பொருட்டு ஒருமலரைக் காணாமல் செய்துவிட்டார். அர்ச்சனைப் புரிந்துகொண்டு வந்த திருமால் ஒரு மலர் குறைவதைக் கண்டார். ஆயிரம் மந்திரங்களால் ஆயிரம் மலர்கள் அருச்சிப்பது அவருடைய நியதி. உடனே தமது அழகிய கண்ணைப் பிடுங்கி அரனார் அடி மலர் மீது அருச்சித்தார். உடனே சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றி, அவருடைய அளவற்ற அன்புக்கு மகிழ்ந்து சக்ராயுதத்தையும், கண்ணையும், கண்ணன் என்ற பெயரையும் வழங்கி அருள்புரிந்தனர்.
ஒரே ஒரு மலரைப் பிய்த்துப் பிய்த்து அர்ச்சிப்போரும், நான்கு, ஐந்து மந்திரங்கட்கு ஒரு மலரையிட்டு அர்ச்சிப்போரும், இந்த வரலாற்றை ஊன்றி நோக்கி உய்வு பெறுக. இந்தக் கதையை திருநாவுக்கரசர்,
நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன்கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
என்றும் மாணிக்கவாசகர், திருவாசகத்தில்
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தம்கண் இடந்துஅரன் சேவடிமேல் சாத்தலுமே,
சங்கரன் எம்பிரான் சக்கரமாற்கு அருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.
சலம்உடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலம்உடைய நாரணற்குஅன்று அருளியவாறு என்னேடீ,
நலம்உடைய நாரணண்தன் நயனம்இடந்துஅரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர்.
திருப்புகழ் கதைகள்: சக்கரத் தியாகர்… திருப்பைஞ்ஞீலி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.