e0af8d-e0aeaae0af81e0aeb2e0aeb5.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 115
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
படர்புவியின் – திருச்செந்தூர்
புலவர்கள் அகந்தை தீர்ந்து அருள்நெறி நிற்க
அருணகிரிநாதர் அருளியுள்ள எழுபத்தியேழாவது திருப்புகழான ‘படர்புவியின் மீது’ எனத் தொடங்கும் இத்திருப்புகழ் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும்.
இப்பாடலில் அருணகிரியார் – மாலுக்குச் சக்ரமருளிய மகேசருடைய மதலையே, செந்திற்குமாரரே, புலவர்கள் அகந்தை தீர்ந்து அறநெறி நிற்க அருள் புரிவீர் – என வேண்டுகிறார். இனி, பாடலைக் காண்போம்.
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி …… சங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ……சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி …… சண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு லாவு மால கந்தைத …… விர்ந்திடாதோ
அடல்பொருது பூச லேவி ளைந்திட
எதிர்பொரவொ ணாம லேக சங்கர
அரஹர சிவாம ஹாதெ வென்றுனி …… அன்றுசேவித்
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோர மாச லந்தர …… னொந்துவீழ
உடல்தடியு மாழி தாவெ னம்புய
மலர்கள்தச நூறு தாளி டும்பக
லொருமலரி லாது கோவ ணிந்திடு ……செங்கண்மாலுக்
குதவியம கேசர் பால இந்திரன்
மகளைமண மேவி வீறு செந்திலி
லுரியஅடி யேனை யாள வந்தருள் …… தம்பிரானே.
இப்பாடலின் பொருளாவது – வலிமையுடன் எதிர்த்துப் போர் நிகழ, அப்போரில் எதிர்த்துப் போரிட முடியாமையால், திருமால் அந்நாளில் சிவபெருமானை வழிபாடு செய்து, “சங்கரா! அரஹர! சிவ சிவ! மஹாதேவா” என்று துதிசெய்து பூதலத்தில் நெடுங் காலமாகப் பூசித்து உள்ளம் உருகி, பாசக் கயிறுகளும் கவசமும் சிறப்பும் மிகுந்த வலிமையும் கொடுமையும் பெருமையும் உடைய சலந்தராசுரனுடைய உடம்பைப் பிளந்த சக்கராயுதத்தைத் தந்தருள வேண்டும் என்று, சிவபெருமானுடைய திருவடியில் ஆயிரம் தாமரை பூக்களால் நாடோறும் அருச்சனை புரிந்து வந்த போது, ஒரு நாள் ஒரு மலர் குறைந்தது கண்டு, உடனே தன் கண்ணை எடுத்து அர்ச்சித்தலும், அவருக்குச் சக்கரத்தை உதவிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!
இந்திரனுடைய புதல்வியாகிய தெய்வயானையைத் திருமணம் புரிந்துகொண்டு, பெருமை பொருந்திய திருச்செந்தூரில், அருள் பெறுவதற்கு உரிய அடியேனை ஆட்கொள்ளுமாறு எழுந்தருளிய பெருமை மிகுந்தவரே!
பரந்த உலகிலே மேம்பாடு பெற்று, வஞ்சகர்கள் புகழ்ந்துரையாக ’சூரியன் போன்றவர்’ என்று வியந்துரைக்க, குற்றமில்லாத உரையுடன் கூடிய ஒழுக்க நூல்களையும், தெரிய வேண்டிய சங்க நூல்களையும், வரலாற்று நூல்களையும், காவியங்களையும், அறுபத்துநான்கு கலைகளையும், திருவள்ளுவ தேவர் கூறிய பொய்யாமொழியாகிய திருக்குறளையும் ஓதியுணர்ந்து, பல சந்தங்களுடன் கூடிய மாலை, மடல் பரணி, கோவையார், கலம்பகம் முதலிய அநேக நயங்களைக் கொள்ளுகின்ற நூல்களை வகைவகையாகப் பாடி பெரிய “ஆசுகவி” “சண்டமாருதம்” மதுரகவி ராஜன்” என்று புலவர்கள் (தம்மைத், தாமே கூறிக் கொண்டு) வெண்குடை, விருது, கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலிய வரிசைகளோடு உலாவுகின்ற, மயக்கத்துடன் கூடிய அகந்தை அவர்களை விட்டு அகலமாட்டாதோ? – என அருணகிரியார் பாடுகின்றார்.
திருப்புகழ் கதைகள்: புலவர்கள் அகந்தை தீர்ந்து அருள்நெறி நிற்க! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.