e0af8d-e0aeb5e0aeb0e0af88e0aeaf.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 114
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நிறுக்கும் சூது அன – திருச்செந்தூர்
வரையினை எடுத்த தோளன்
கைலாய மலையை பெயர்த்தெடுத்த பெருமை அவன் தோள் வலிமைக்குச் சான்று கூறின. முதல் நாள் போரில் அனுமனுடன் போர் செய்த பிறகு இரண்டாம் முறையாக இராவணன் இலக்குவனுடன் போர் செய்கிறான். அப்பொது தோல்வியுற்று, மயங்கி கீழே சாய்ந்த இலக்குவனைத் தூக்கச் செல்கிறான். அவனால் இலக்குவனைத் தூக்க முடியவில்லை. அச்சமயத்தில் அனுமன் ஒரு குரங்கு தன் குட்டியைக் கவ்வி எடுத்துச் செல்வது போல மிக சுலபமாக எடுத்துச் சென்றபோது தன் தோள் வலி போய்விட்டது என்பதை உணர்ந்தான். இதனை கம்பர் இராமாயணத்தில் அழகாக எடுத்துச் சொல்லுவார்.
அஞ்சினான் அலன், அயன் தந்த வேலினும் ஆவி
துஞ்சினான் அலன்; துளங்கினான் என்பது துணியா
எஞ்சுஇல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென்‘ என்றெண்ணி
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார்மிசை நடந்தான்.
உள்ளி வெம் பிணத்து உதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி அம்கைகள் இருபதும் பற்றிப் பண்டு அரன் மா
வெள்ளி அம்கிரி எடுத்தது வெள்கினான் ஏனை
எள் இல் பொன்மலை எடுக்கல் உற்றான் என எடுத்தான்.
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன், அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின், ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கி வெண்பொருப்பை
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான்.
(கம்பராமாயணம், யுத்தகாண்டம், முதற் போர்புரி படலம், பாடல்கள் 7351 முதல் 7353 வரை)
“நாரத முனிவர்க்கேற்ப நயம் பட உரைத்த நாவு” எனும் பெருமையை, இராமன் இவனைப் பார்த்து “போர்க்கு இன்று போய் நாளை வா” என்றதும் நா உலர்ந்து, பேசவியலாமற் போனபோது அந்தப் பெருமையும் போயிற்று. “தாரணி மவுலி பத்து” என்பது மாலைகள் அணிந்த அவன் பத்துத் தலைகளிலும் அழகு செய்த கிரீடம். அவை அனைத்தையும் இராமன் ஒரே கணையினால் அடித்து வீழ்த்தி அந்தப் பெருமையை அழித்துவிட்டான்.
“சங்கரன் கொடுத்த வாள்” சந்திரஹாசம் அறத்தின்பாற்பட்ட எந்த போரிலும் வெற்றி தர வல்லது. ஆனால் இராவணன் அறத்திலிருந்து மாறுபட்டு தர்மவான் ஜடாயுவை அதனால் கொன்றதனால் அதன் வீரியம் போய்விட்டது. சந்திரஹாசத்தின் பெருமை அழிந்தது. இறுதியாக அவனிடம் இருந்தது வீரம் ஒன்றுதான். அதுவும் போரில் தோற்று குனிந்த தலையுடன், பூமித்தாயின் முகம் பார்த்து மெல்ல நடந்த போது போயிற்று.
எல்லா பெருமைகளுக்கும் சொந்தக்காரனாக இருந்த இராவணன் முதல் நாள் போர் முடிந்ததும், ஒரே நாளில் அத்தனைப் பெருமைகளையும் இழந்து மிகச்சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டான். பெருமையோடு தலை நிமிர்ந்து ஆணவத்தோடு ஆட்சி புரிந்த இராவணன் ஒரே நாளில் அத்தனை பெருமைகளையும் இழந்து தலை குனிந்து இன்று சாதாரண மனிதனாக நடந்து செல்லுகிறான்.
“வரையினை எடுத்த தோள்” என்பதற்கு விவரமான கதைகள் உள்ளன. எல்லாம்வல்ல சிவனாரிடம் அதீத வரங்களைப் பெற்ற இராவணன் அனைத்து உலகங்களையும் ஆட்சி செய்யும் வரம் பெற்றான்.. அதன் படி உலகை வலம் வந்து சுற்றிப் பார்க்க விரும்பிய இராவணன் ஒருமுறை திருக்கயிலாய மலை பக்கமாக வந்தபோது அந்த திருக்கயிலாய மலையை சுற்றிச் செல்வது நமது வீரத்திற்கு இழுக்கு என்று கருதி அம்மலையை அகற்றி வேறு பக்கமாக வைத்துவிட்டு செல்வதென முடிவெடுத்தான்.
அதன்படி, மலையை பெயர்க்க முற்பட்டபோது, மலையின் ஆட்டத்தைக்கண்டு உமையம்மை அஞ்ச, அதைக்கண்ட இறைவர், தனது கால் விரலால் சற்றே திருக்கயிலாய மலையை அழுந்தினாராம்.. அதில் இராவணனுடைய இருபது தோள்களும் மாட்டிக் கொண்டு அவன் பரிதவித்தான்.
அப்போது அந்த வழியாக வந்த வாகீசர் என்ற மாமுனிவர் (இவரே பின்னர் திருநாவுக்கரசராக அவதரித்தவர்) இராவணனது நிலை கண்டு இரங்கி, இராவணா, இறைவர் சாம கானப் பிரியர், நீ சாம காணம் பாடு என்று சொல்ல, இராவணன் தனது தலையில் ஒன்றை பிய்த்து, கைகளில் ஒன்றை பிய்த்து, நரம்புகளை பிய்த்து – அதன் வழி ஒரு வீணை செய்து சாம காணம் வாசித்தான் என்பதும், அதைக் கேட்டு மகிழ்ந்த இறைவர் இராவணனை மன்னித்து வரம் பல தந்து மகிழ்ந்தார் என்பதும் வரலாறு. அச்சமயத்தில் தான் இறைவன் இராவணனுக்கு – “சந்திரஹாசம்” எனும் எவராலும் வெல்ல முடியாத ஒரு வாளையும் தந்தான் என்பதும் வரலாறு.
இவ் வரலாற்றை நினைப்பிக்கும் வகையிலேயே திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தின் ஒவ்வொரு பதிகத்தின் 8 ஆவது பாடலிலும் இராவணன் குறித்துப் பாடியிருப்பார்.. திருநாவுக்கரசரும் இவ்வரலாற்றை தமது தேவாரத்திலும் பதிவு செய்திருக்கிறார்.. எடுத்துக்காட்டாக,
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் வடகயிலை
தன்னைப்பிடித்து எடுத்தான் முடி தடந்தோளிரவூன்றிப்
பின்னைப் பணிந்து ஏத்தப் பெருவாள் பேரொடும் கொடுத்த
மின்னில் பொலி சடையான் இடம் வீழிமிழலையே
என்பது சம்பந்தர் திருவீழிமலையில் இயற்றிய தேவாரம். மேலும்.
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்து அருள் செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.
(திருவதிகை வீரட்டானம், அப்பர் சுவாமிகள்)
என்பது அப்பர் சுவாமிகள் திருவாக்கு. இவ்விருப் பாடலில் மேற்சொன்ன கருத்துகள் யாவும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்..
திருப்புகழ் கதைகள்: வரையினை எடுத்த தோளன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.