e0af8d-e0aeaae0af86e0aea3e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 87
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
குகர மேவு – திருச்செந்தூர்
அருணகிரிநாதர் அருளியுள்ள நாற்பத்தியெட்டாவது திருப்புகழ் குகர மேவுமெய் எனத் தொடங்கும் இந்தத் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழ் ஆகும். அருணகிரியார் இப்படலில் மாதர் மயல் கடல் விட்டு, முத்திக் கரை சேர, திருவடிப் புணை வேண்டிப் பாடுகிறார். இனிப்பாடலைப் பார்ப்போம்.
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித் …… தடமூழ்கிக்
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக் …… குழலாரோ
டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக் …… கடலூடே
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக் …… கழல்தாராய்
ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப் …… புனலாடும்
கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப் …… புகல்வோனே
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்போற் கம்பத் …… தளமீதும்
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப் …… பெருமாளே.
இத்திருப்புகழில் அருணகிரியார் – ஆகாய வெளியின் பெரிய அளவுக்கும் அடங்காத தூய கங்கை நீர் சடையில் அசைந்து ஆடுமாறு செய்தவரும், தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவனால் அளக்க முடியாதவரும் ஆகிய சிவபெருமானுக்கு, ஒப்பற்ற மொழியாகிய பிரணவப்பொருளை உபதேசித்தவரே, கலசங்களை உடைய கோபுரத்தின் மீதும், திருமதில்கள் மீதும் மேலான செம்பொன் மயமான தூண்களின் மீதுள்ள மாடிகளின் மீதும், வீதிகளிலும், முத்துக்களை எறிகின்ற, அலைகளின் கரையில் விளங்கும் திருச்செந்தூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானே, பெருமிதம் உடையவரே!
மகளிரை மறவாது நாடி, இன்ப மயமாகிய கடலில் முழுகி அழுந்துகின்றேன். அடியேனைப் பக்குவமாக ஒப்பற்ற முத்தியாகிய கரையில் சேர்த்து, அழகிய பொன்னாலாகிய தண்டைச் சூழ்ந்த திருவடியைத் தந்து அருள்புரிவீர்.
இந்தத் திருப்புகழில் பெண் மயக்கத்தில் திளைத்திருந்த ஒருவனை தவ வலிமை கொண்ட முனிவர் ஒருவர் நல்வழிப் படுத்திய கதை, அடி-முடி காணவியலா அருட்பெருஞ்சோதியின் கதை, கம்பரின் கதை ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதலில் கம்பரின் கதையக் காண்போம்.
கம்பரின் கதை
இத் திருப்புகழின்
ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப் …… புனலாடும்
கமல வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப் …… புகல்வோனே
என்ற வரிகளில் கம்பர்க் கொன்றை புகல்வோனே என்ற சொற்கள் இடம்பெறுகிறது. இங்கே கம்பர் என்ற சொல் சிவபெருமானைக் குறிக்கிறது. வீட்டையும் மண்டபத்தையும் தாங்குவது கம்பம். அதுபோல் அகில உலகங்களையும் கம்பத்தைப் போல் நின்று சிவபெருமான் தாங்குவதனால் கம்பர் என்ற பேர் பெற்றார். வடமொழியில் தாணு என்ற பேரும் இதே பொருளில் வழங்கப் பெறுகின்றது. தாணு என்றால் துண் என்று பொருள் அதாவது சிவபெருமான் தூண் போன்றவர்.
இராமாயணத்தைத் தமிழிலே தந்த சிறந்த தமிழ்ப் புலவராகிய கம்பர் இங்கு நினைவுகூறத் தக்கவர். கம்பர் என்பது சிவபெருமானுடைய பெயர். கம்பர் தமது மகனுக்கும் அம்பிகாபதி என்று சிவ நாமத்தை இட்டார். கம்பர் என்பது சிவனுக்குரிய நாமம் என்பதை அருணகிரியார் வேறு ஒரு திருப்புகழில்
சயில அங்கனைக்கு உருகி இடப்பக்கங் கொடுத்த கம்பர்
என்று பாடுவார். கம்பராகிய கண்ணுதற் கடவுளுக்கு நம்பர் என்றும் ஒரு பேருண்டு. கம்பத்தைப் பற்றிப் பிள்ளைகள் சுற்றிச் சுற்றியாடுவதுபோல், கம்பனாகிய இறைவனை நம்பி உலகில் சுற்றி உலாவவேண்டும். பற்றுதற்குரியவன் கம்பன்; நம்புதற்கு உரியவன் நம்பன்.
சதிதாண்டவத்தர் சடையிடத்துக் கங்கை வைத்த நம்பர் (திருப்புகழ்)
இனி ஒன்றைப் புகல்வோனே என்று சொன்னதன் மூலம் ஒருமொழியாகிய பிரணவத்தைச் சொன்னவனே என்று சிவபெருமானைப் புகழ்கிறார். ப்ர என்றால் விசேடம்; நவம் என்றால் புதிய ஆற்றலையளிப்பது; நினைப்பார்க்குப் புதிய புதிய சிறந்த ஆற்றலையளிப்பது பிரணவம். அது ஓரெழுத்து ஒருமறை. இதன் உட்பொருளை உம்பரறியாக் கம்பராகிய சிவபெருமானுக்கு எம்பெருமான் சிவகுருநாதன் உபதேசித்தார்.
திருப்புகழ் கதைகள்: பெண் மயக்கம் போக்கிய முனிவர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.