திருப்புகழ் கதைகள்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 85
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

களபம் ஒழுகிய – திருச்செந்தூர்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-1

நெல்லை-கன்னியாகுமரி புறவழிச் சாலையில் பெனிட்டா என்ற பெண்மணியின் புல்லாங்குழல் செய்யும் தொழிற்கூடம் ஒன்று உள்ளது. அதிலே இரகம் இரகமான புல்லாங்குழல்களை அவர் செய்து விற்பனை செய்கிறார்.

புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இக்கருவி காணப்படுகிறது. இது துளைக்கருவி வகையைச் சேர்ந்தது. கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன.

இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது. புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு கடவுளான கண்ணன் புல்லாங்குழலை இசைப்பவராகக் கருதப்படுகிறார்.

1150 – 1500 காலகட்டத்தில், ஆங்கிலத்தில் புல்லாங்குழல் முதன்முதலில் புளூட் எனவும், 9 முதல் 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட பழைய பிரெஞ்சு மொழியில் ப்ளாட் எனவும், பழைய ஆக்சிதம் மொழியில், அல்லது பழைய பிரெஞ்சு மொழியில் ஃபிளாட், ஃப்ளூட்டெ எனவும் அழைக்கப்பட்டது. இன்று, புல்லாங்குழல் குடும்பத்தைச் சார்ந்த எந்தவொரு கருவியையும் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர் ஆங்கிலத்தில் flutist அல்லது சாதாரணமாக ஒரு புளூட் பிளேயர் என அழைக்கப்படுகிறார்.

இதுவரையான காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆனால் இது பற்றி வரலார்று ஆய்வாளர்களிடம் ஒற்றுமையான கருத்து இல்லை. 2008ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது.

இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V-வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலகட்டத்தவையாக கருதப்பட்டன.

srikrishna - 1

இந்தியாவின் பழைய இலக்கியங்களில் இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என மூன்று வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.

முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் முருகன். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையில் குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் என வருகிறது. இங்கே குழல் என்றால் புல்லாங்குழல் என்று பொருள். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள். குறிஞ்சி நிலத்திலே வாழ்கின்ற தெய்வம்; மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டு முருகப் பெருமான் புல்லாங்குழல் வாசித்தார் எனக் கருதப்படுகிறது.

திருப்புகழ் கதைகள்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply