பழனி, திருத்தணியில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

செய்திகள்

மலைக்கோயிலில் நடைபெறும் இவ்விழா, சனிக்கிழமை காப்புக்கட்டுடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

உச்சிக்காலத்தின் போது மூலவர், உற்சவர், விநாயகருக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து சண்முகர், துவாரபாலகர், கொடிக்கம்பம், மயில்வாகனம், நவவீரர்களுக்கு காப்புக்கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை  துவக்கினர்.

ஆறாம் நாளான 11-ம் தேதி மலைக்கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும். பகலில் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை  பூஜை நடத்தப்பட்டு, சூரர்களை வதம் புரிய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல்வாங்கும் விழா நடைபெறும்.

தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சுவாமி அடிவாரம் வந்தடைவார்.  மாலை 5.30 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு மலைக்கோயிலில் சம்ப்ரோட்சண பூஜை நடத்தப்பட்டு அர்த்தஜாம பூஜை நடைபெறும். நவம்பர் 12-ம் தேதியன்று, மலைக்கோயிலில் சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும்.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை தொடங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான வேல்வாங்கும் நிகழ்ச்சி வரும் 10-ம் தேதி இரவு நடைபெறுகிறது. நவம்பர் 11-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹாரம் நடைபெறும்.

விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியாக 12-ம் தேதி காலை 8 மணிக்கு சிறிய சட்டத் தேரோட்டமும், மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும், 4.30 மணிக்கு மூலவருக்கு தங்கக் கவச அலங்காரமும் நடைபெறும்.

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி மற்றும் லட்சார்ச்சனைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. சனிக்கிழமை, உற்சவர் முருகனுக்கு தேன், சந்தனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது.

https://dinamani.com/edition/story.aspx?artid=328695

Leave a Reply