e0af8d-e0aeaae0aea4e0af8de0aea4.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 58
அனிச்சம் கார்முகம் (திருச்செந்தூர்) திருப்புகழ்
திருப்புகழ் இராமாயணம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
திருப்புகழின் முதல் பாடலிலேயே முத்தைத்தரு என ஆரம்பித்த அருணகிரிநாதர், ‘பத்துத் தலை தத்தக் கணை தொடு என்று தொடங்கி, ராமாயணத்தை விவரிக்கிறார். முதலில் ராமரின் திரு அவதாரம். ராவணனின் கொடுமை தாங்காத தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தசரதருக்கு மகனாக வந்து உதிக்கிறார் மஹாவிஷ்ணு. இதை அருணகிரிநாதர்,
மேலை வானொருரைத் தசரற்கொரு
பாலனாகி யுதித்து – (ஆலகால படப்பை) திருப்புகழ் 597, திருச்செங்கோடு என அழகுபடச் சொல்கிறார்.
ராமரை, கோசலாதேவி மிகுந்த அன்புடன் வளர்த்து வருகிறாள். ராமர் தளர் நடையிட்டு, நடக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. கோசலை, ஒரு நாள் ராமரை பால் குடிக்க அழைத்தாள். அன்று என்னவாயிற்றோ… ராமர் பால் குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிப் போய் நின்று, அங்கிருந்தபடி கோசலையைப் பார்த்தார். இந்தக் கட்டத்தை அருணகிரி நாதர் வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்!
எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனதாருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசேவருக முலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவி னொடுகோசலை புகல வருமாயன்
- (தொந்தி சரிய) திருப்புகழ், 68, திருச்செந்தூர்
பால் குடிக்க கோசலை, ராமரை அழைக்கும் இந்த வர்ணனையில் பலவிதக் கருத்துகள் அடங்கியுள்ளன. இதிலுள்ள ஆன்மிகமும் அருந்தமிழின் பெருமையும் அருணகிரிநாதரின் தமிழ் வன்மையும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியவை.
திருமால் ஸ்ரீராமனாகப் பிறக்கும்போது தேவர்கள் வானரர்களாகப் பிறந்து அவருக்கு உதவியாய் இருக்க வேண்டும் என ஸ்ரீவிஷ்ணு பணிக்கிறார். அதனால் தேவர்கள் மண்ணில் வானரர்களாகப் பிறக்கின்றனர். இதனை அருணகிரியார் கருவடைந்து (திருப்புகழ் 9, திருப்பர்ங்குன்றம்) என்றத் திருப்புகழில் பாடியுள்ள்தை முன்னரே பார்த்தோம். ராமரின் இளமைப் பருவத்தில் ஒப்பற்ற தவசியான விஸ்வாமித்திர முனிவர் வந்தார். அவரது யாகத்தைக் காக்க, ராம-லட்சுமணர் அவருடன் காட்டுக்குக் கிளம்பினர். இதை இரண்டே வரிகளில் அருணகிரிநாதர் சொல்லும் அழகைப் பாருங்கள்:
மேலை வானொருரைத் தசரற்கொரு
பால னாகியுதித்தொர் முனிக்கொரு
வேள்விக்காவல் நடத்தி – (ஆலகால படப்பை) திருப்புகழ் 597,
திருச்செங்கோடு ராமர், விஸ்வாமித்திரருடன் நடந்து வருவதற்குள் விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்தில் உள்ள முனிவர்களைப் பற்றி அருணகிரிநாதர் வர்ணிக்கும் திருப்புகழைப் பார்ப்போம்.
அங்குள்ள முனிவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரிய நமஸ்காரமும் காயத்ரி ஜபமும் செய்வர். அவர்களுக்கும் யாக சாலைக்கும் தீங்கு செய்யும் தாடகையை வதம் செய்வதற் காக, கிருபைக் கடலான ராமர் வருகிறார். இந்தக் கருத்தைச் சொல்லும் திருப்புகழ்:
காலைக்கே முழுகிக் குணதிக்கினில்
ஆதித்யாய எனப் பகர்தர்ப்பண
காயத்ரீ செப மர்ச் சனையைச்செயு முனிவோர்கள்
கானத் தா சிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய ளித்தல்பொருட்டெதிர்
காதத் தாடகையைக் கொல் க்ருபைக் கடல் – (வேலைப்போல்விழி) திருப்புகழ் 366, திவானைக்காவல்
விஸ்வாமித்திரருடன் ராமர் காட்டுக்குள் நுழைந்த தும் நடந்த முக்கியமான நிகழ்ச்சி தாடகை வதம். கடும் கோபத்துடன் துடிக்கும் புருவங்கள். பிறைச் சந்திரன் போல வளைந்து நீண்ட பற்கள். குகை போன்ற வாய். அதர்மமே வடிவம் கொண்டு வந்ததோ எனும்படியான கறுத்த உருவம். வடவைத்தீ (கடலில் உண்டாகும் ஒருவிதமான தீ) போல விழிக்கும் கண்கள் ஆகியவற்றுடன் தாடகை வருகிறாள். இதனை அருணகிரிநாதர்
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் …… மருகோனே – (தொடுத்தவாளென) திருப்புகழ் 649, கதிர்காமம்
இந்த வரிகளையும், சொல்லிப் பாருங்கள்! தாடகையின் கோபம், அவளைக் கொல்ல ராமர் எய்த அம்பின் வேகம், யாகத்தை ராமர் கட்டிக் காத்த வேகம்- ஆகியவற் றுடன் வில்லை வளைத்த ராமரின் வலிமையும் தெரியும். இப்படி தாடகை வதம் முதல், சீதா கல்யாணத்துக்காக வில் வளைத்தது வரையிலான நிகழ்ச்சிகளை மூன்றே வரிகளில் பதிவு செய்திருக்கும் அருணகிரிநாதரின் அருந்தமிழ் வல்லமை புரியும்.
இனி அருணகிரியார் மொழியில் இராமாயணத்தின் தொடர்ச்சியை நாலைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: பத்துத் தலை தத்தக் கணை தொடு..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.