இடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

 

வேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தது போல் வேதங்களில் கரை கண்டவர். அவர் ஒரு சமயம், தன் மனைவி மக்களுடன் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். உணவிற்கு வழியில்லை. மனைவி மக்களின் வருத்தத்தைப் பார்த்த வேதபட்டர் மனம் வருந்தி சிவபெருமானைத் துதித்தார். அவர் கனவில் பரமசிவனார் எழுந்தருளி, ” வேதபட்டரே ! யாம் இருக்கும் வேணுவனத்திகு வந்தால், உம் துயரங்கள் நீங்கும். ” என்று நல்வாக்குச் செய்தருளினார்.

வேதபட்டருக்குக் கனவு கலைந்தது. ” வேதப்பொருளே ! நீ சொன்ன வேணுவனத்திற்கு இதோ வருகிறேன் ” எனச் சொல்லி குடும்பத்தோடு பொருணை நதியில் நீராடி, கோவிலுக்கும் சென்று சிவன் சந்நிதியில் நின்று தரிசித்து, சிந்தை உருக வழிபட்டார். அதன் பயனாக அவருக்குச் சிவனருளால் அனைத்துச் செல்வமும் வாய்த்தது. வேதபட்டர், செல்வங்கள் சேர்ந்ததும் சிவனை மறக்கவில்லை. தினந்தோறும் செந்நெல் அறுத்துச் சிவபெருமானுக்கு அமுதாக்கி, வழிபட்டார்.

சில காலம் கழித்து ஒரு சமயம் எதிர்பாராமல் மழை பொய்த்ததும் நாடெங்கும் பஞ்சமானது. அப்போது, சிவபெருமான் தேவபட்டரின் பக்தியைச் சோதனை செய்து, அவர்தம் பெருமையை உலகறியச் செய்ய விரும்பினார்.

அவ்வளவுதான் ! நாளாக நாளாக வேதபட்டரின் செல்வங்கள் குறைந்தன. அந்நிலையிலும் வேதபட்டர் தன் வழிபாட்டை நிறுத்தவில்லை. வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்று கிடைத்த நெல்லை அமுதாக்கி, ஆலாலம் ( ஆலம் + ஆலம் ) உண்டவனுக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தார். ஒரு நாள் இறைவனுக்கான நெல்லை இல்லம் தோறும் சென்று பெற்று வந்த வேதபட்டர் அதை இறைவனின் சந்நதி முன்னால் காயவைத்துப் பின் நீராடச் சென்றார். அப்போது

அதற்காகவே காத்திருந்ததுபோல மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

வேதபட்டர் திடுக்கிட்டார். ” சிவபெருமானே ! உனக்கு அமுது படைப்பதற்கான நெல்லை உன் சந்நதியிலே காயப்போட்டு வந்தேன், இப்போது மழை பெய்கிறது. அந்த நெல்லும் போய்விட்டால், உனக்கு அமுது படைக்க வேறு நெல்லுக்கும் வழி கிடைக்காதே ! என்ன செய்வேன் ? என்று புலம்பிப் பதறியபடி கோவிலை நோக்கி ஓடினார். அங்கு போனதும் வேதபட்டரின் பதற்றம் மறைந்தது. மாறாக ஆச்சரியம் ஏற்பட்டது. சந்நதியிலே காயப்போட்டு வந்த நெல்லைச் சுற்றி, அணைகட்டியது போல மழை நீர் நின்றிருந்தது.ஒரு துளி மழைநீர் கூட நெல்லின் மேல் படவில்லை. அதற்கும் மேலாக நெற்களின் மேல் மட்டும் பளிச்சென்று வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது, வேலி போட்டது போல !

வேதபட்டர் ஆண்டவனின் அருளை நினைத்து வியந்து, அங்கிருந்து ஓடிப்போய் அரசனிடம் நடந்த விவரத்தைக் கூறினார். அரசனும் வேதபட்டரின் அழைப்பின்படி ஆலயம் சென்று அவர் கூறியதை நேரில் கண்டு, சிவபெருமான் திருவருளை வியந்தபடி வேணுவனநாதரின் சந்நதியில் வணங்கி வழிபட்டான். சிவனார் தம் பகதர்கள் மேல் கொண்டுள்ள அளவிலா அன்பை எண்ணி வியந்த அரசன், ஈசனை வணங்கி, ” அலைகடலில் விளைந்த விடத்தை உண்டு அனைவரையும் காத்த இறைவா ! உலகிற்காக மழை பொழிந்து, உத்தம பக்தரான வேதபட்டரின் நெல் மட்டும் நனையாமல் வேலியிட்டுக்காத்த வேணுவனநாதா ! இதன் காரணமாக உங்கள் திருநாமம், இன்று முதல் ‘ நெல்வேலிநாதர் ‘ என வழங்கப்பட அருள் புரியவும் ” என வேண்டினான்.

அரசன் வேண்டுகோளை அப்போதே நிறைவேற்றினான் இறைவன். அன்றுமுதல் வேணுவனம், திருநெல்வேலி என்றும், வேணுவனநாதர் ( திரு ) நெல்வேலிநாதர் எனவும் அழைக்கப்படலாதனர். நெல்லுக்கு வேலியிட்டு இறைவன் காத்த இந்நிகழ்ச்சி, தைப்பூசத் திருவிழாவின்போது, திருநெல்வேலியில் இன்றும் திருவிளையாடலாக நிகழ்கிறது.

தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே
என்று திருமந்திரம் கூறுவதுபோல், பார்க்கின்றவற்றைப் புரிந்துகொள்ளும்போது அவை நம் கருத்துக்களோடு ஒருங்கிணைவது போல் ஆன்மாவைப் புரிந்துகொள்ளும்போது அது இறைவனோடு ஒருங்கிணைகிறது. அவ்வாறு புரிந்துகொள்ளலே ஞானம் ஆகும். அத்தகைய ஞானத்தின் முதல்படி இறைவனிடம் நாம் வைக்கும் அன்பும் நம்பிக்கையும் ஆகும். அவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மேல் நாம் நம்பிக்கை வைப்பதற்கு நிகர். ஆண்டவன் மேல் நாம் செலுத்தும் பக்தியும் அன்பும், இடரில் நமக்கு வேலியாக நின்று நம்மைக் காக்கும்.

|| திருநெல்வேலிநாதர் கமலபாதம் சரணம் ||

Leave a Reply