தேய்பிறை அஷ்டமி ஸ்பெஷல் ! பயன் தரும் பைரவர் வழிபாடு!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

கயிலைக்கண்ணன் வெங்கட்ராமன்

 

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம்.

ஸ்வானத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ; பைரவ ப்ரசோதயாத்:

விரித்த பல் கதிர் கொள் சூலம்
வெடிபடு தமருகம் கை தரித்ததோர்
கோல கால வைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச்செல்வனாரே!̷ 0; – திருநாவுக்கரசர்.

  • தலம் திருச்சேறை ( நான்காம் திருமுறை. திருப்பதிக எண் : 73/6 )
    தேவாரத்தில் வைரவரின் திருப்பெயர் பயின்று வரும் ஒரே திருப்பாடல் இது…

”பற்பலவாய் விரிந்து எங்கும் பரவும் ஒளிக் கதிர்கள் பொருந்திய சூலத்தினையும் வெடியென முழங்கும் உடுக்கையையும் தம் திருக்கரங்களில் ஏந்திய திருக்கோலத்துடன் கால வைரவன் எனத் தோன்றி – தாருகாவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து தம் மீது ஏவி விட்ட யானையைப் பிடித்து அதன் தோலை உரித்து, அந்தத் தோலையும் தம் மீதே போர்த்திக் கொண்ட அருஞ்செயலைக் கண்டு, அச்சம் கொண்ட உமையவளை நோக்கி ஒளி பொருந்திய பெருஞ் சிரிப்புடன் அருள் செய்தாரே!… அந்த சிவபெருமான் செந்நெறிச் செல்வனாக இங்கே, திருச்சேறை எனும் இந்தத் திருத்தலத்தில் உறைந்து நமக்கும் புன்னகையுடன் அருள் புரிகின்றார் ” – என்பது திருக்குறிப்பு.

தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு உரிய நன்னாளில், அவரை வணங்கிட மனதில் இருக்கிற தேவையற்ற பயமெல்லாம் விலகிவிடும். இந்தநாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்! மேலும் பைரவருக்கு மிளகு கலந்தசாதம் நைவேத்திய மாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகளை தவிடுபொடி யாக்கும் .

பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் (சிவபுராணம்). பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.

தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அன்றைய தினம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும் .அன்றைய தினம் செல்வம் கொழிக்க செய்யும் சொர்ணபைரவர் அஷ்டகத்தை படிப்பது நலம் பயக்கும். வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார்.

பைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும்.

Leave a Reply