சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்

ஆன்மிக கட்டுரைகள்

Sri Sriram

சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்
-முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்
சஹஸ்ரநாமத்தைக் கூட சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும் என்று ஆசாரம். பிராதஹ் காலத்திலும் சொல்லலாம். மத்தியானத்திலும் சொல்லலாம். ஆனால் சாயங்காலம் தான் விசேஷம். ஏனென்றால் சாயங்கால வேளை தான் மனிதனைக் கெடுக்கக் கூடிய வேளை.

சந்தியா காலத்தை நாம் ரொம்ப ஜாக்கிரதையாக உபயோகப்படுத்த வேண்டும். கொஞ்சம் கோணல் வழியில் திருப்பி விட்டோமானால் அதல பாதாளத்தில் கொண்டு போய்த் தள்ளிவிடும். அப்படிப் போகாமலிருக்க வேறு இடத்தில் மனத்தை வைக்காமலிருக்க சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்வது நல்லது. அப்போது ஓர் அரைமணி நேரம் உட்கார்ந்திருக்க வேண்டுமில்லையா? ஆகையினால் அந்த நேரத்தில் மனம் வேறான வழிக்குப் போகாது.

நாலு பசுக்கள் மேயப் போகின்றன. ஒரு பசு மட்டும் திருட்டுப் பசு. அது புல்லையே மேயாது. பயிரைத்தான் மேயும். போய்க் கொண்டேயிருக்கிற பசு, வயலில் இறங்கி கதிர் விட்டிருக்கிற பயிர்களையெல்லாம் மேயும்! அந்த விவசாயி அதைப் போடு அடிப்பான். அந்த உதையைப் பட்டுக் கொண்டு மறுபடியும் வரும் அது!

அந்தப் பசுவை உடையவனுக்கு ரொம்ப வருத்தம். ‘இப்படி நித்யம் அடிபடுகிறதே. என்ன பண்ணுவது? என்று பார்த்தான். அதன் கழுத்திலே ஒரு கயிற்றைக் கட்டி, அதில் ஒரு கட்டையைக் கட்டித் தொங்கவிட்டான். பெரிய மரக்கட்டை!

கட்டையைக் கட்டிவிட்டவுடனே அந்தப் பசு வேகமாகப் போனபோதெல்லாம் இந்த முட்டிக்கும் அந்த முட்டிக்கும் இடித்தது. ஒரேடியாக வலி. அதிலிருந்து அந்தப் பசு பயிரை மேயாமல் மற்ற பசுக்களோடயே இருந்தது.

சாயங்காலம் என்கிற பொழுது நம்மை வேறான பாதையிலே இழுத்துச் செல்லாமலிருக்க சஹஸ்ரநாமம் என்கிற தடி கட்டப் பட்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் நாம் வேறு விஷயத்தில் ஈடுபடுவோமில்லையா?

இந்த்ரியங்களாகிற திருட்டுப் பசு கோணல் வழியிலே போகாமலிருக்க எல்லோரும் ஒரே விஷயத்தை நினைக்கும் படி செய்ய ஏற்பட்டது தான் இந்த சஹஸ்ரநாமம்.

அந்த மாதிரி பகவான் நாமாவைச் சொல்லி, சாயங்கால வேளையிலே நம் மனது பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரு முகப்படுத்தி, அவன் திருவடியிலே செலுத்தி விட்டோமானால், அந்த சாயங்கால வேளையை நாம் ஜெயித்து விடலாம். எல்லா காலத்தையும் ஜெயித்து விடலாம். அதனால் தான் சாயங்காலத்தில் தனியாக உட்கார்ந்து சஹஸ்ரநாமத்தைச் சொல் என்றது. இல்லையானால் பல மஹான்களை வைத்துக் கொண்டு பாராயணம் பண்ணு என்றது. அதுவும் இல்லையானால் ஒவ்வொரு கிருஹத்தில் ஒவ்வொரு நாள் பாராயணம் பண்ணு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

பல இடங்களில் பல நகரங்களில் இப்படி நடக்கிறது. ஆகையினால் சஹஸ்ரநாமம் சகல க்ஷேமத்தையும் உண்டு பண்ணக் கூடியது. புத்துயிர் ஊட்டுவது. மரணப் படுக்கையிலே இருப்பவரை பிராண வியோகத்திலிருந்து மீட்கக் கூடியது. அப்படியே அவருக்குப் பிராண வியோகம் விதிக்கப்பட்டிருந்ததானால், அதைக் கேட்டுக் கொண்டே உயிர்நீப்பவர் பரமபதத்தை அடையச் செய்யக் கூடியது.

ஆகையினால் எம்பெருமானின் திருநாமம் ஒவ்வொன்றும் உயர்ந்ததாகிறது.

Email

Leave a Reply