மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்

செய்திகள்

பக்தர்கள் மட்டுமின்றி கோயிலின் கலை அழகைக் காண்பதற்காக வெளிமாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தினமும் நூற்றுக்கணக்கில் வந்துசெல்கின்றனர். இதையடுத்து திருக்கோயில் நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கோயில்வளாகம் தற்போது பசுமை நிறைந்ததாகவும், நவீன கற்கள் பதிக்கப்பட்டதாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வரும் நிலையில் அவர்களுக்கான சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து தந்துள்ளது. இதையடுத்து திருக்கோயில் வளாகத்தின் சுகாதாரம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுக்கு கோயில் நிர்வாகம் விண்ணப்பித்திருப்பதை இந்து அமைப்புகள் எதிர்த்தன. இதையடுத்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று தேவையற்றது என்று தர ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவினரிடம் பக்தர்கள் சார்பில் மனுக்களும் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு திருக்கோயிலில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கான வசதிகள், திருக்கோயில் யானை உள்ளிட்டவற்றைப் பராமரிக்கும் இடங்கள், கோயில் சுகாதாரம், குடிநீர் வசதிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் அடிப்படையில் தற்போது மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. தரச்சான்றானது ஐ.எஸ்.ஓ. மூலம் திருக்கோயில் நிர்வாக அலுவலர் ஆர்.பத்மநாபனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply