சபரிமலையில் நடைபெற்ற பங்குனி உத்திர ஆராட்டு வைபவம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சபரிமலையில் 10 நாள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, ஐயப்பனுக்கு பம்பை நதியில் ஆராட்டு வைபவம் இன்று பகலில் பக்தர்கள் சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஏப் 2 செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் உற்சவபலி பூஜை, இரவு ஸ்ரீ பூதபலி நடைபெற்றது. தினமும் சுவாமி ஐயப்பன் விக்ரகத்தை சுமந்தபடி யானை கோயில் வலம் வந்தது.

முக்கிய நிகழ்வாக நேற்று வியாழக்கிழமை ஐயப்பன் பள்ளி வேட்டை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இரவு சுவாமி ஐயப்பனுக்கு மகா தீபாரதனை வழிபாடு அத்தாழ பூஜை நடத்தி, சுவாமி ஐயப்பன் 18 படி வழி கீழ் இறங்கி நெற்றி பட்டம் கட்டிய யானை மீது அமர்ந்து பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு புறப்பட்டார்.

சரங்குத்தியில் சம்பிரதாய முறைப்படி ஐயப்பன் வனவிலங்குகளை வேட்டையாடும் பள்ளிவேட்டை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு முடிந்ததும் சுவாமி திரும்பி நடைபந்தலுக்கு வந்ததும் தீப ஆர்த்தி வழிபாடு நடைபெற்றது. பின்னர் அசுத்தப்பட்டிருப்பதால் கோவில் வெளிப்பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி பள்ளி உறக்கம் வைக்கப்பட்டு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோவில் நடை திறந்ததும், கணபதி ஹோமம் உட்பட முக்கிய பூஜைகள் தொடங்கின. காலை 7:30க்கு பூஜை நடந்ததும் சுவாமி பம்பைக்கு ஆராட்டு விழாவுக்கு புறப்படும் நிகழ்வுகள் தொடங்கின.

18 படி வழியாக சுவாமி ஐயப்பன் விக்ரகம் மேல் சாந்தியால் கொண்டு வரப்பட்டு யானை மீது அமர்த்தி சுவாமி யானை மீது அமர்ந்து பம்பை நதிக்கு சரங்குத்தி வழியாகப் புறப்பட்டார்.

பம்பை வந்த ஐயப்பனுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பம்பை கணபதி கோவிலில் இருந்து சுவாமி ஐயப்பன் பம்பை நதியில் உள்ள பாராட்டுக்கடைவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு எண்ணெய் மஞ்சள் நெய் போன்ற அஷ்ட திரவிய பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை திரளான பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

சபரிமலை வனப்பகுதியில் திடீரென அவ்வப்போது பெய்துவரும் மழையால் பம்பை நதியில் தண்ணீர் அதிகம் வருவதால் இந்த ஆண்டு ஆராட்டு வைபோகம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் கோடை வெயில் காலத்தில் இதமான குளியல் போட்டு மலையேற்றம் சென்றனர்.

இன்று ஆராட்டு முடிந்ததும் சுவாமி பம்பை கணபதி கோவில் வளாகத்தில் ஆராட்டு தரிசனம் பக்தர்களுக்கு வழங்கிய பின். பம்பையில் இருந்து சபரிமலை சென்று 18 படி வழியாக சன்னிதானம் சென்று கோவில் பிராகாரத்துக்குச் சென்றடைந்ததும் கோவில் கொடி மரத்தில் உள்ள கொடிப்பட்டம் இறக்கப்பட்டு, திருவிழா நிறைவு செய்யப்படும்.

பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த ஏப் 1 திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டது. செவ்வாய் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கின.

காலை 9:00 மணிக்கு பிம்ப சுத்தி பூஜைகளை தொடர்ந்து கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடி பட்டத்திற்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

தொடர்ந்து கொடிப் பட்டம் கோயிலைச் சுற்றி வலம் வந்து கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்டது. அங்கு பூஜைகளுக்கு பின்னர் 10:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். அன்று முதல் ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக உற்சவபலி நடைபெற்றது. ஏப். 10- இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்தியில் எழுந்தருளினார். இன்று ஏப். 11 காலை நடை திறந்த பின்னர் உஷ பூஜை நிறைவு பெற்றதும் யானை மீது சுவாமி பம்பைக்கு எழுந்தருளி மதியம் ஒரு மணிக்கு சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது. இந்தப் பத்து நாட்கள் திருவிழா நிகழ்வுகளை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

மதியம் 2:00 மணிக்கு பம்பை கணபதி கோயில் வளாகத்தில் ஆராட்டு தரிசனம் முடித்து சுவாமி சன்னிதானத்துக்கு திரும்பும்போது சுவாமிக்கு பக்தர்கள் பம்பை சபரிமலை நடைபாதை இரு பக்கமும் தீபம் ஏற்றி வரவேற்பு அளிக்கப்பட்டு இரவு கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திர ஆராட்டு விழா நிறைவு பெறும்.

தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் ஏப்.14 சித்திரை விஷு பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும். ஏப்.18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு ஐயப்பன் சன்னிதானம் முன்பு சுந்தரி கண்டறாரு ராஜீவ்ரு மேல் சாந்தி அருண்குமார் காய்கறிகள் கொன்றை மலர்கள் பாத்திரம் நிறைய வெள்ளி காசுகள் வைத்து கோவில் நடை அடைக்கப்படும். ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறந்ததும் சித்திரை விசு கனி காணும் நிகழ்வும் பக்தர்களுக்கு விசு கனி பிரசாதம் கைநீட்டமாக வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

மழையினால் பம்பை நதி மட்டுமல்லாது, வடசேரிக்கரை நதி மற்றும் எருமேலி மணிமாலா நதியிலும் தண்ணீர் வருகிறது. மழையால் எங்கும் பசுமையான வனப் பகுதிகள், மலைகளில் இருந்து இரைச்சலுடன் கொட்டும் அருவிகள் என, பக்தர்களின் கண்களுக்கு இயற்கை விருந்து படைக்கிறது!



Leave a Reply