682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை விருதுநகர் மாவட்டங்களை இணைத்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா மிக முக்கிய திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.
இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்களுக்கு பக்தர்கள் மலை ஏறி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் , மதுரை ,சென்னை ,திருச்சி ,கோவை , நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகாலை முதலிலே பக்தர்கள் கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,11 காவல் துணை கண்காணிப்பாளர்கள் ,25 காவல் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள் உட்பட 1420 காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்றச்சம்பங் வகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அடிவாரப் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுத்தப்பட்டது.
தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து 60 பேரிடர் மீட்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமிக்கும் சந்தன மகாலிங்க சுவாமிக்கும் சுந்தரமூர்த்தி மற்றும் பிலாவடி கருப்பசாமி ஆகியோருக்கு அமாவாசை பூஜைகள் மாலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து நடந்தது. பக்தர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.