சிவராத்திரி ஸ்பெஷல் :: சிவராத்திரி மகிமை

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

இரவு முழுதும் கண் விழித்து சிவபெருமானை தியானம் புரிய வேண்டும். ஐந்தெழுத்து ஓதுதல், சிவ தோத்திரங்கள் கூறல், திருமுறைப் பாராயணம், கூட்டு வழிபாடு ஆகியவற்றைச் செய்ய வேண்டும். அன்று சிவன் திருக்கோயில்களில் நான்கு யாமங்களிலும் நடைபெறும் திருமஞ்சனம், ஆராதனைகளிலும் மனம் தோய்ந்து ஈடுபட வேண்டும்.
அன்றைய தினம் சிவாலயங்களில் “பஞ்ச கவ்யம்’ (ஆனைந்து) பால், தயிர், நெய், கோசலம், கோமயம் அபிஷேகம் (இவற்றுள் கோசலம், கோமயம் ஆகியன நேரடியாக அபிஷேகத்தில் வராது.

அவையிரண்டால் செய்யப்படும் விபூதி அபிஷேகத்தை அச்சொற்கள் குறிக்கும்) செய்வார்கள். பின்னர் சுவாமிக்கு எட்டு நாண் மலர் (அஷ்ட புஷ்பம்) சாற்றுவார்கள். பெரிய தும்பை, மந்தாரம், சங்கு புஷ்பம், வெள்ளைப் பாதிரி, வழுதுணை, பொன் ஊமத்தை, புலி நகக் கொன்றை, வன்னி ஆகிய மலர்களையே சம்பிரதாயத்தில் “அஷ்ட புஷ்பம்’ என்பார்கள்.

முறையாக ஒவ்வொரு யாமத்திலும் நிகழும் இந்த சிவபூஜைகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வில்வம், வன்னி பத்திரங்கள் வழங்கியும், அடியார்களுக்கு அன்னதானம், உத்தரீயதானம் முதலியன செய்தும் அன்பர்கள் சிவகிருபையைப் பெற வேண்டும்.
சாதாரண நாள்களில் செய்யும் தானத்தைவிட, சிவராத்திரி புண்ணிய காலத்தில் செய்யும் தான தர்மங்கள், வானளவு பயன்களைத் தந்து வாழ்விக்கும் எனச் சான்றோர் மொழிவர்.

சிவராத்திரி பூஜைகள் நிகழும் நான்கு யாமங்களிலும் சிவ பரம்பொருளின் நான்கு மூர்த்திகள் அன்பர்களைக் காத்து அருள்பாலிக்கின்றனர் என்று “சிவ கவசம்’ என்னும் நூல் செப்புகிறது.
“”வரு பவன் முதல் யாமத்து! மகேசன் பின் இரண்டாம் யாமம்! பொருவரு வாமதேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்! செருமலி மழுவாள் அங்கை த்ரியம்பகன் நாலாம் யாமம்! பெருவலி இடப ஊர்தி பிணி அற இனிது காக்க” (வரதுங்க ராம பாண்டியர் அருளியது; பாட்டு எண்:12)

“வேதங்களில் வழங்கப்படுகிற “பவன்’ என்னும் திருப் பெயருள்ள மூர்த்தியானவர் முதற் சாமத்திலும், “மகேசுவரன்’ இரண்டாம் சாமத்தும், ஒப்பில்லாத “வாமதேவர்’ மூன்றாம் சாமத்தும், போருக்கேற்ற மழுவாயுதம் ஏந்திய திருக்கையுடைய “த்ரியம்பகர்’ நான்காம் சாமத்தும் அடியேனை நோய் நொடிகள் வந்து சாராதபடி, ரிஷப வாகன மூர்த்தியுமாகத் தனித் தனிக் காக்கக் கடவர்” என்பது இதன் பொருள்.
இயல்பாக இரவில் நம்மை அறியாமல் உறக்கம் வந்துவிடும். அந்த உறக்கத்தை வென்று, கண்விழித்த வண்ணம் சிவபரம் பொருளை கவனமாகத் தியானிக்க வேண்டும்.

மனித குலத்தை வாழ்விக்கும் இந்தப் புனித சிவராத்திரி பற்றிய சில இனிய கதைகள் நம் இதயத்தை நனி மகிழ்விக்கின்றன.
ஒரு சமயம் திருக்கயிலையில் உமாதேவி விளையாட்டாக பின்புறமாக வந்து தன் கமலக் கைகளால் நிமலனின் கண்களைப் பொத்தினாள். இதனால் வையகமெல்லாம் பேரிருள் சூழ்ந்தது; உயிர்கள் வாட்டமுற்றன. அம்பிகை அஞ்சி கைகளை எடுத்தாள். சிவபிரான் நெற்றிக் கண்ணின்றும் பேரொளி தோன்றி உயிர்களை வாழ்வித்தது. அம்பிகையின் பயத்தைப் போக்க நெருப்பொளியையே நிலவொளியாக வீசும்படி அலகிலா விளையாட்டுடைய சிவபெருமான் அருள் கூர்ந்தார். அந்நாளே சிவராத்திரி என்பர். “”கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட̷ 0;” (திருவாசகம்- சிவபுராணம்) எனும் மணிவாக்கின் வண்ணம் சிவபிரான் நெற்றிக்கண், அன்பர்கள் வரையில், கருணையின் இருப்பிடமன்றோ!

“திருமாலும், பிரம்மதேவனும் தங்களுக்குள் யார் பெரியவர்?’ எனப் போட்டியிட்டனர். அவர்கள் ஆணவத்தை அகற்றத் திருவுளம் கொண்ட சிவபெருமான், பெருஞ்ஜோதியாக நின்றார். தன் அடியைக் கண்டு வர திருமாலையும், தன் முடியைக் கண்டு வர பிரம்மதேவனையும் பணித்தார். “யார் முதலில் கண்டு வருகிறாரோ, அவரே பெரியவர்’ என மொழிந்தருளினார். முறையே இருவரும் முயன்றும் அடிமுடி காணாமல் தவித்தனர்.

சிவபெருமானார் அவர்கள் கர்வத்தை அறவே போக்கி, தானே “ஊழி முதல்வன்’ என்பதை நிறுவினார். பின்னர், “”அன்பினாலே என்னைக் காணுங்கள்; பக்தியினாலே என்னைப் பாருங்கள்; சாந்தத்தாலே என்னைத் தரிசியுங்கள்” என்று சொல்லாமல் சொல்லி, ஆதியும் அந்தமுமில்லா அருட் பெருஞ் ஜோதியாக, அண்டமெல்லாம் தொழ அனைவருக்கும் தரிசனம் அருளினார். இத்திருவிளையாடல் நிகழ்ந்த தலம், திருவண்ணாமலையாகும். அந்த நாளே சிவராத்திரி தினமாகும்.
பாற்கடல் கடைந்தபோது முதலில் அமுதத்துக்குப் பதிலாக நஞ்சு வந்தது. அதைக் கண்டு தேவர்கள் பயந்து ஓடினர்.

சிவபெருமானை சரணடைந்தனர். சிவபெருமான் “”அஞ்சாதீர்” என்று அபயமளித்து அருள்புரிந்தார். தானே ஆலமென்ற நஞ்சையுண்டு நீலகண்டனாக ஆனார். காலமெல்லாம் ஞாலம் அனவரதமும் துதி செய்யும் மகா தியாகியாக, மகோன்னத புருஷனாகத் திகழ்ந்தார். அந்தத் தியாகத் திருநாளே மகா சிவராத்திரி நாளாகும் என மொழிவர்.
ஒரு காலத்தில் மகா பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவபிரானிடத்தே ஒடுங்கின. அண்டங்கள் அனைத்தும் அசைவின்றி இருந்தன. அவைகள் இயங்கும் பொருட்டு பார்வதி தேவி பரமசிவனை குறித்து இடைவிடாது தவம் புரிந்தாள்.

அம்பிகையின் தவத்துக்கு இரங்கிய அண்ணலார், தன்னுள் ஒடுங்கியிருந்த உலகங்களை மீண்டும் உண்டாக்கி, உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது தேவி சிவபெருமானை வணங்கி, “”நாதா! அடியேன் தங்களைப் போற்றிப் பணிந்த நாள் “சிவராத்திரி’ என்ற திருப்பெயர் பெற்றுச் சிறக்க வேண்டும். அந்நன்னாளில் விரதத்தை நெறியுடன் கடைபிடிப்பவர்கள் இகபர சௌபாக்கியங்கள் பெற்று நிறைவில் முக்தி அடைய வேண்டும்” எனப் பிரார்த்தித்தாள். “”அப்படியே ஆகுக” என சிவபெருமான் கருணை புரிந்த திருநாளே சிவராத்திரி என்றொரு மரபுண்டு.

இப்படி மேலும் சில சம்பவங்களும் சிவராத்திரியோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன. எனினும் இவற்றுள், “திருவண்ணாமலை நிகழ்வே’ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
1. “”சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை, சித்திக்கு மிஞ்சிய நூலில்லை”
2. “”அவனே அவனே என்பதைவிட சிவனே சிவனே என்பது மேல்”
3. “”படிப்பது திருவாசகம் எடுப்பது சிவன் கோயில்”
4. “”சிவனே என்றிரு”
5. “”சக்திக்கு நவராத்திரி சிவனுக்கு சிவராத்திரி” -இத்தகு இனிய பழமொழிகள் சிவபெருமான் மகிமைகளையும், அவரைத் தியானம் புரிவதால் நாம் பெறும் ஞானத்தையும் தெரிவிக்கின்றன.

“சிவன்’ என்ற சொல்லுக்கு “மங்கலங்கள் நல்குபவன்’, “நன்மைகள் புரிபவன்’ என்ற பொருள்கள் உண்டு. “சிவந்த திருமேனி வண்ணம் கொண்டவன்’ என்ற பொருளில் “”சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் அடிகள் பாடுகிறார்.
சமையுடையவன் சிவன். சமையாவது மேலான இன்பமுடைமையும், நிர்விகாரத் தன்மையுமாம்.
சிவ: நல்லோரின் மனத்திற்கு இருப்பிடமானவன்
சிவ: நல்லோர் மனத்தில் சயனித்திருப்பவன்
சிவ: சுபத்துடன் கூடியவன்
சிவ: சிவத்தைக் கொடுப்பவன். அதாவது மங்கலங்களையே அருள்பவன்; இதற்கும் மேலாகத் தன்னையே தன் அடியார்க்கு வழங்குபவன். “நாமலிங்காநு சாசனம், லிங்கப்பட்டீய’ உரையில் இது போன்ற விவரங்களைக் காணலாம்.

சிவன் என்பதற்கு “அழகன்’ என்றும் பொருளுண்டு. (அருமையில் எளிய அழகே போற்றி! கரு முகிலாகிய கண்ணே போற்றி! சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி என வரும் திருவாசக மணிவாக்குகள் காண்க)
“”சிவத்தைப் பேணின் தவத்துக்கு அழகு” என ஒüவையாரும் கொன்றை வேந்தனில் அருளியுள்ளார். “”சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை” என்னும் திருவாசகச் சிந்தனை கொண்டு சிவராத்திரி திருநாளில் சிவபெருமானை வழிபட்டு அக அழகும், புற அழகும் பெறுவோம்.

எல்லா சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா நடைபெற்றாலும் சிதம்பரம், காளஹஸ்தி, திரு அண்ணாமலை ஆலயங்களில் நிகழும் சிவராத்திரி விழா தனிச் சிறப்பு உடையவை.

“”ஞானத் தபோதனரை வா என்றழைக்கும்” அண்ணாமலையில் அருள் வாழ்க்கை நடத்திய அற்புத ஞானி ரமண முனிவர். இவர் மகா சிவராத்திரி திருநாளில் சந்திர சேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் திருவுலா வரும்போது ஒரு அரிய பாடலை அருளியிருக்கிறார். அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு லிங்கோத்பவருக்கு நிகழும் விசேஷ அபிஷேக பூஜைகளையும் தரிசித்திருக்கிறார்.

“”ஆதி அருணாசலப்பேர் அற்புத லிங்கத்துருக்கொள்
ஆதி நாள் மார்கழியில் ஆதிரையச் -சோதி எழும்
ஈசனை மால் முன் அமரர் ஏத்தி வழிபட்ட நாள்
மாசி சிவராத்திரியாமற்று.” என்பதே அந்த இனிய பாடல்.

சிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை அன்புடன் வழிபட்டால், உடல் நலம் சிறக்கும்! மனவளம் செழிக்கும்! எல்லாவற்றுக்கும் மேலாக “உங்கள் கண்களுக்கு ஒரு தோழன் கிடைப்பான்’ என ஞானியர் மொழிவர். உங்கள் கண்கள் இரண்டு; ஒரு தோழன் கிடைத்தால் உங்கள் கண்கள் மூன்று. ஆம்.. நீங்களே சிவ சாரூப்யம் பெறலாம். இதனினும் வேறு சிறப்புண்டோ? அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொள்ள வல்லதும் – பின் அவற்றை படைத்து, காத்து, முக்தியில் இடுவதும் சிவ பரம் பொருளே! எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி அருள்வதே சிவலிங்க தத்துவம். சிவலிங்க வழிபாடே அனைத்தையும்விட மேலானது. சிவராத்திரியன்று லிங்கத் திருமேனியை தரிசிப்பதும், தியானிப்பதும் தீவினைகளை ஓட வைக்கும்! திருவருளை நாட வைக்கும்!

கட்டுரை: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=381983

Leave a Reply