சாமான்யனும் பக்தி செய்வது எப்படி?

கதைகள்!

உலகத்தின் நிலையும் அப்படித்தானுள்ளது. தாங்களே நீந்திக் கொண்டு தாங்களே உழன்று கொண்டு இந்த உலகத்தில் நீர்ச்சுழலில் சிக்கித் தவிக்கிறார்களே தவிர, கரையிலே காத்துக் கொண்டிருக்கும் பகவானிடத்தில் என்னைக் கரையேத்தி விடு என்று யாருமே கதற முற்படுவதில்லை. நம்மைக் கரையேத்தி விடத் தயாராக பகவான் காத்துக் கொண்டிருக்கும் போது, நாம் யாருமே கரையேற நினைப்பதில்லை. சம்சார சாகரத்திலே சிக்குண்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

ஹே பகவானே! என்னை இந்த சம்சார சாகரத்திலிருந்து காப்பாற்றிக் கரையேற்றி விடு என்று நாமும் ஆசைப்படணும்… கை குடுக்கிறவனை எதிர்பார்க்கணும். ஏனென்றால், நம்மிடத்திலே பாராமுகமோ, பிடிக்காத தனமோ, கோபமோ இருந்தால்தானே நாம் கவலைப்படணும்? நம்மிடத்திலே பரிவும், கருணையும், கரையேத்தி விடணும் என்கிற எண்ணமும் கொண்டவனாக பகவான் இருக்கும் போது நாம் என்ன செய்யணும்? நாம் செய்ய வேண்டியதெல்லாம் நான் கரையேத்தி விடறேன் என்று சொல்கின்ற பகவானிடத்திலே பிடிவாதம் பிடிக்காமல் இருந்தால் போதும், அதற்கு அனுகூலமாயிருந்தால் போதும்!

அப்படி அதற்கு அனுகூலமாயிருந்தால், அங்க திரும்பினால் பஜனை, இங்க போனால் சத்சங்கம், கோயில், பெரியவா என்று அவனே கொண்டு போய் விடுவான். யார் யாரோடெல்லாம் சேரவிடணுமோ அவர்களிடத்தில் சேர்த்துவிட்டு, யார் யாரோடெல்லாம் சேரக்கூடாதோ அவர்கள் கிட்டே கூட நெருங்கவிடாது அவனே பண்ணிவிடுவான். அதுக்காக மூட்டை தூக்கிக்கொண்டு போகிற மாதிரி தூக்கிக் கொண்டு போக மாட்டான். அதனால் என்னைத் தூக்கிக் கொண்டு போகலையே என்று நாம் யோசிக்கக் கூடாது… ருக்மிணியைத் தூக்கிக் கொண்டு போனது வேறு விஷயம்… அப்படியல்லாது, வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொண்டு செல்வது… நவஜீவனம்! நாமும் தப்ப முடியாது அவனும் தப்ப விடமாட்டான்.

நாம் சின்னக் குழந்தை போன்று இருந்தாலே போதும்! வீணான எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கணும் & அப்பா இருக்கார். அம்மா இருக்கார் என்று அதுபாட்டுக்கு விளையாடிக் கொண்டிருக்கிற மாதிரி… சாப்பிடணும்னா இழுத்துப் பிடித்துச் சாப்பிட உட்கார வைக்கிற மாதிரி இருக்கணுமாம் நம்ம நிலை! நம்மைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. சாப்பாட்டைப் பத்தியும் கவலைப்படக் கூடாது.

ஜடவரதருக்கு வாயில் வைத்து திணித்த மாதிரி, பகவான் வந்து வாயில் ஊட்டணும். உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று நாம் இருக்கணும். நமக்கு என்ன தேவையோ அதை அவன் செய்யணும்.

இது எல்லாருக்கும் ஆகிவிடுமோ? தன்னைச் சேர்ந்தவர்கள் என்று சிலரை எடுத்துக் கொண்டு, அவர்களை நிர்வகித்துக் கொண்டு செல்வதாலே, இது அவர்கள் தர்மமாகப் போனதாலே இது சாது தர்மம் என்று ஆகிவிடுகிறது. லோகாயத வாழ்க்கையிலிருந்து விலகி விட்டவர்கள் தர்மம் இது.

இவர்கள் தர்மமும் சாமான்யர்கள் தர்மமும் வேறு வேறல்லவா? இருவருடைய தர்மமும் ஒன்று போலிராது.

இப்படிப்பட்டவர்களுக்கான தர்மத்தைச் சொல்ல வேணும் என்று வசுதேவர் நாரதரைப் பிரார்த்தித்துக் கொண்டார். உடனே நாரதர் தாமாக அதைச் சொல்லாதபடி, ரிஷப யோகீஸ்வரர் புத்திரர்கள் கவி, ஹரி, அந்தரிக்ஷர், பிரபுத்தர், பிபலாயர், ஆபிர்ஹோத்ரர், த்ருமிலர், சமசர், கரபாஜனர் என்ற ஒன்பது சித்த புருஷர்கள் மூலம் வெளியிடச் செய்தார். அவர்கள் திடீரெனத் தோன்றுவார்கள். திடீரென மறைவார்கள். எல்லா லோகங்களுக்கும் சஞ்சாரம் செய்வார்கள். மஹாபுருஷர்கள், பரம பாகவதர்கள் அவர்களை விஷ்ணு பூதம் என்று சொல்கிறார் சுகப்ரம்ஹ ரிஷி.

இந்த ஒன்பது மஹாபுருஷர்களும் மிதிலாபுரியில் அரசாட்சி செய்த ஜனக மஹாராஜன் வம்சத்தில் வந்த விதேக நாட்டு அரசன் நிமி மஹாராஜனுக்குப் ப்ரத்யக்ஷமாகச் சொன்னார்கள்.

குருவினிடத்தில் நாம் சரீர விஷயமாகக் கேட்காமல் ஆத்ம விஷயமாகக் கேட்கணும்… நான் கடைத்தேற ஏதாவது வழியுண்டா? எனக்குக் கொஞ்சமாகவேனும் பக்தி வருமா? எனக்குக் கனவிலாவது பகவான் காட்சி கொடுப்பாரா என்று குருநாதரிடம் கேட்டுக் கொள்ளணுமாம். தப்பித் தவறி அவர் “ஓ கிடைக்குமே’ என்று சொல்லிவிட்டால் நிச்சயமாகக் கிடைச்சுடும்.

நிமி மஹாராஜா அந்த ஒன்பது சித்த புருஷர்களிடமும் இப்படி இதைத்தான் கேட்கணும் என்று கேட்க, அந்த ஒன்பது பேரும் ஒவ்வொருத்தராக வரிசையாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அதில் முதலில் சொல்லக்கூடிய யோகீஸ்வரர் கவி என்பவர்.

குடும்ப வாழ்க்கையிலிருந்து கொண்டு எப்படி பக்தி பண்ணுவது என்பதைச் சொல்கிறார். லௌகீகத்திலிருப்பவர்கள் செய்யும் செயல்கள் இப்படித்தான் இருக்கும் என்று நமக்குத் தெரியும். அவர்கள் சாப்பிட்டால் தங்கள் உடலுக்கு புஷ்டியாக இருக்க வேண்டும் என்று சாப்பிடுவார்கள். கருத்து அதில்தான் இருக்கும். ரிட்டயர்டு ஆனால் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு, காபி குடித்துக் கொண்டு காலம் போக்குவார்கள்.

ஆனால் பாகவதாள் என்றால் காலை எழும்போதே கிருஷ்ணனுக்கு சுப்ரபாதம் பண்ணலாம். குளிக்கும் போதே பகவானுக்குப் பூஜை பண்ணலாம் என்று நினைப்பார்கள்.

இவர்கள் கல்யாணம் பண்ணிண்டாலும் இல்லத்துக்கு சாதுக்கள் வந்தால் நைவேத்யம் வைக்கிறதுக்கு சாதம் போடறதுக்கு ஒருத்தி வேணுமே என்று நினைப்பார்கள். உத்யோகம் பார்த்தாலும், பகவானுக்கு சூடன் சாம்பிராணி வாங்கணுமே என்ற சிந்தை இருக்கும். ஒரு வீடு கட்டினாலும் திவ்ய நாமத்துக்கு, பஜனைகளுக்கு ஓர் இடம் பிரத்யேகமாக ஒதுக்குவார்கள். பத்து பாகவதாள் இருக்கறதுக்கு இடம் வேணுமே என்று நினைப்பார்கள்.

எதைச் செய்தாலும் பகவானுக்கு பகவானுக்கு என்று செய்வார்கள். வாழ்க்கையையே பகவானுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால் பிறகு குளிக்கிறது, சாப்பிடறது எல்லாமே பகவானுக்கே ஆகிவிடுகிறது இல்லையா?
சில பேர் நாம ஜபம் பண்ணுகிறார்கள். நாமத்தை எழுதுகிறார்கள்… இதிலெல்லாம் ஆரம்பத்தில் ருசி இருக்காது. அதை ஒரு விரதம் மாதிரிதான் செய்யணும். அநவரதமும் “கிருஷ்ணா’ “வாசுதேவா’ என்று அவனுடைய நாமத்தையே ஜபிக்கணும். துர்வாசனைகள் வேறு பக்கம் இழுத்துக் கொண்டே போகும். இதற்கு அடங்கிப் போகாது. ப்ரேம வாசனைக்கு ஆட்படாது பகவத் விஷயத்தில் கருத்தாக இருக்கணும். ஹோமமோ ஜெபமோ எது பண்ணினாலும் போரடிக்கிறது என்று சொல்ல வருமா? வரவும் கூடாது. ஹரிஸ்மரணத்தோடு எந்தக் காரியம் பண்ணினாலும் அது அலுக்காது…

எங்கு பார்த்தாலும் பகவானாகவே தெரியணும். ராசக் கிரீடையில் கோபிகைகளுக்கு எங்கு திரும்பினாலும் கிருஷ்ண மயமாகவே தோன்றியதாம். யசோதைக்கு மண்ணைப் பார்த்தாலும் கிருஷ்ணன், ஒவ்வோர் அண்டம் ஒவ்வொரு கோகுலம் ஒவ்வொரு கிருஷ்ணன் என்று கிருஷ்ண மயமாகத் தோன்றியதாம். ப்ரஹ்லாதனுக்கு மலையில் பார்த்தால் பகவான். கடலில் பார்த்தால் பகவான். ஆகாசத்தைப் பார்த்தால் பகவான். எங்கும் எல்லாமும் பகவானாகவே தோன்றியதாம். ஓர் இடத்தில் எப்போதோ ஒரு சாக்ஷாத்காரம் என்று இல்லாமல் எங்கும் எல்லாமும் அவனே என்கின்ற சாக்ஷாத்காரத்தைச் சொல்கிறார்…

அந்த யோகீஸ்வரர் சொல்கிறார்… பகவானைத் தன்னிடத்திலே பார்க்கிறான். பகவானிடத்திலே தன்னைப் பார்க்கிறான். பகவானில்லாது தானில்லை, தானில்லாது பகவானில்லை, இரண்டு பேரும் பிரிஞ்சிக்க முடியாது என்பதை அனுபவித்துக் கொண்டேயிருக்கிறான். அவனே பாகவதன்.

சிலபேர் தியானம் பண்ணறேன். தியானம் பண்ணறேன் என்கிறார்கள்… ஏதோ சமையல் பண்ணறேன் என்பது மாதிரி! துருவன் இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறான். “”அதெப்படி தியானம் பண்ண முடியும்? மறந்தாலன்றோ அவனை மீண்டும் நினைத்துக் கொள்வதற்கு? மறந்தாலல்லவோ கொஞ்சம் இருங்கோ அவனைத் தியானம் பண்ணிக்கிறேன் என்பதற்கு? அதெப்படி அவனை மறக்க முடியும்? எப்படித்தான் மறக்கிறார்களோ” என்று கேட்கிறான் துருவன்.

அவனுடைய நினைவுதானே இதயத்தில் எப்போதும் இருக்கும். அப்படி இருக்கும்போது எதற்கு தியானம் என்று ஒன்றைத் தனியாகப் பண்ணணும்? எவருடைய இதயத்தைவிட்டு பகவான் பிரியவேயில்லையோ அவனே பரம பாகவதோத்தமன். கோபிகையர் எல்லாம் க்ஷணப் பொழுதும் க்ருஷ்ணனுடைய நினைவை விட்டு சற்றும் அகலாது இருந்தனர் & ஹரி என்ற யோகீஸ்வரர் இப்படி பாகவத லட்சணத்தைச் சொல்கிறார்.

இதற்கு அடுத்தபடியாக மாயை என்பதன் லக்ஷணத்தைச் சொல்கிறார் அந்தரிக்ஷர் என்பவர். மாயை என்றால் என்ன என்பதையும் சொல்கிறார். சில நேரம் அழுகை, சில நேரம் சிரிப்பு, கோபம், வருத்தம் என்று எல்லாவிதமான குணங்களையும் மனிதன் காட்டுகிறானல்லவா அதெல்லாம் மாயை!

ப்ரும்மத்தை ஆச்ரயித்த குருவை ஆச்ரயித்தால் மாயையை விலக்க வைத்துவிடுவார். குருவே எனது இஷ்ட தெய்வம் என்று இருக்கணும். குருவை ஆச்ரயித்தால் மாயை இருக்காது என்று பிரபுத்தர் என்கிற யோகீஸ்வரர் சொல்கிறார்.

பிபலாயர் சொல்கிறார்… நாராயணன் என்று சொன்னால் கண்ணைத் திறந்து கொண்டு பார்க்கக்கூடிய ஒரு வஸ்து இல்லை. கண்ணை மூடிக் கொண்டு பார்க்க வேண்டிய ஒரு பொருள். மனசாலே பார்க்கக்கூடிய பொருள் இல்லை. மனசு அடங்கி பார்க்கக்கூடிய ஒரு பொருள். கண் பார்த்தது; ஆனால் மனசு பார்க்கவில்லை. அப்படியில்லாது கண், மனசு இரண்டும் சேர்த்து பார்த்தாலும் கூடப் பார்க்க முடியாத பர வஸ்துவை கண்ணையும் மூடிக் கொண்டு, மனசையும் அடக்கிக் கொண்டு பார்த்தால் தான் அந்த வஸ்து இதயத்தில் தெரியும் என்று சொல்கிறார். இதுதான் நாராயண ஸ்வரூபம்.

ஆபிர்ஹோத்ரர்,  “”நாம் பண்ண வேண்டிய தர்மங்களை எல்லாம் பண்ணிவிட்டு பலனை நாம் கருதாதபடி, ஈஸ்வரார்ப்பணமாக அதைப் பண்ணணும்” என்று அவர் சொல்கிறார்.

பிறகு த்ருமிலர் என்பவர் பகவானுடைய குணங்களைச் சொல்கிறார். “”பகவானுடைய குணங்களை எல்லாம் சொல்கிறேன் என்று ஒருவன் சொன்னான் என்றால் எத்தனை காலத்துக்கு அதைச் சொல்லணும்… சொல்லி முடியாது! பகவானுடைய குணங்களைத்தான் அளந்துட முடியுமா” என்று கேட்கிறார் த்ருமிலர்.

சமசர் என்கிற யோகீஸ்வரர் சொல்கிறார்… “”இவ்வளவு சுலபமான பகவத் நாம சங்கீர்த்தன கதாச்ரவனாதி பக்தி இருக்கும் போது வேறு என்ன வேண்டும்” என்கிறார். “”இவ்வளவு சுலபமான வழியை விட்டுவிட்டு, வேறு எதையோ ஏன் எதிர்பார்த்துக் கிடக்க வேண்டும்” என்று சொல்கிறார் அவர்.

பக்தியிலே எது முக்யம் என்பதை கரபாஜனர் சொல்கிறார். “”பூஜை செய்வதும் பக்திதான். கதை கேட்பது, பாராயணம் பண்ணுவது, ஸ்நானம் பண்ணுவது எல்லாமும் பக்திதான். எல்லாவற்றையும்விட எது பக்தி என்று கேட்டால், யக்ஞத்தைக் காட்டிலும் சங்கீர்த்தனம் உசத்தி.”
ஸ்வர சுத்தமாக ரெண்டே ரெண்டு கீர்த்தனம் பாடிட்டா அதனாலேயே பகவான் ப்ரசன்ன மாயிடறார். கோபிகைகள் எல்லாம் அதைத்தான் செய்வாளாம். கீர்த்தனம் பாடித்தான் பகவானைக் கொண்டிருந்தார்களாம்.

அவர்களுடைய கானத்துக்கு மயங்கித்தான் பகவான் அவர்கள் மத்தியிலே தோன்றினான். அதனாலே லோகத்தை மறக்கடிக்கணுமானால் நாம சங்கீர்த்தனம் வேண்டும்.

எங்கு நாம சங்கீர்த்தனம் இருக்கிறதோ அங்கு பகவான் இருக்கிறார். எங்கு பாகவதாள் இருக்கிறார்களோ அதுதான் க்ஷேத்ரம்.

அதனால்தான் சொல்கிறார்கள்…

பண்டரீபுரத்திற்குச் சமானமான க்ஷேத்ரம் கிடையாது.

விட்டலனுக்குச் சமானமான தெய்வம் கிடையாது.

துக்காராமுக்கு சமானமான சத்குரு கிடையாது.

பகவந்நாமத்துக்கென்று ஒரு க்ஷேத்ரம் – பண்டரீபுரம்.

பகவந்நாமாவைச் சொல்லு என்று சொன்ன சத்குரு துக்காராம்.

கோவிந்த கோவிந்த கோவிந்த!

ஸ்வாமியின் உபந்யாசத்திலிருந்து

தொகுப்பு: ஸ்ரீ .ஸ்ரீ…

Leave a Reply