682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததும், புராண சிறப்பு மிக்க இந்த சிவன் கோவிலில், கடந்த ஒரு வருடமாக புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீநடராஜர், பைரவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சந்நதிகளும் முழுமையாக, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மகா கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. கடந்த 5 நாட்களாக மகா யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
இன்று அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி சந்நதி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் சந்நதி, பரிவார தெய்வங்களின் சந்நதிகள் மற்றும் கோவில் நுழைவு வாயில் கோபுரங்களில் உள்ள கலசங்களில் சிவச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாாரப் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.