682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல காலம் நடந்து வரும் நிலையில், பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நேர அளவின்படி முன்பதிவு வழங்கியதாக தேவசம்போர்டு கூறுகிறது. ஆனால், மூன்று நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல்லுக்கு, 10 கி.மீ., முன்பே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு இரண்டு மணி நேரம் காத்திருந்த பின் பம்பை வருகின்றனர். பம்பையிலும் நான்கு மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
அதன் பின், அப்பாச்சிமேடு, மரகூட்டம் பகுதியில் உள்ள ஷெட்டுகளில் தடுத்து நிறுத்தி, சரங்குத்தி பாதையில் ஆறு கியூ காம்ப்ளக்ஸ் கட்டடங்களில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பின், சன்னிதானம் செல்ல முடிகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தரிசன நேரத்தை அதிகரிக்க முடியுமா என்று தந்திரியிடம் கேட்டு கூறும்படி, தேவசம்போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் மறுப்பு தெரிவித்த தந்திரி மகேஷ் மோகனரரு, பின், தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு நடத்திய பின், மாலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நடை திறப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதன்படி, மதியம், 1:00 மணிக்கு அடைக்கப்படும் நடை, நேற்று முதல் மாலை, 4:00 மணிக்கு பதிலாக, 3:00 மணிக்கு திறக்கப்பட்டது. இதன் வாயிலாக தினமும், 18 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.