காவிரிக் கரைகளில்… ஆடிப்பெருக்கு வைபவம் கோலாகலம்!

செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

தமிழகத்தில், காவிரி ஆறு உள்ளிட்ட ஆறுகள் பாயும் கரையோரங்களிலும், புனித நீர்நிலைகளிலும், ஆடிப் பெருக்கு விழா வெகு உத்ஸாகமாக நடைபெற்று வருகிறது.

இன்று ஆடி மாதம் 18ம் நாள். இன்றைய தினம் ஆடிப் பெருக்கு என்று நீர் நிலைகளில் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி18ம் பெருக்கு விழாவும் ஒன்று. பொங்கி வரும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வழிய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் தமிழரின் தனிச் சிறப்பு மிக்க வழிபாடு!

இந்தாண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்கு விழா களைகட்டியது. முக்கியமாக, திருச்சி திருவரங்கம் காவிரிக் கரை அம்மா மண்டபம் பகுதியில் பெண்கள் பலர் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டபத் துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், கன்னிப்பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்து வழிபாடு மேற்கொண்டனர். புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர்.

கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையோரங்களிலும், மயிலாடுதுறை துலாக்கட்டம் என, கல்லணை முதல் பூம்புகார் வரையிலான காவிரிப் பாசன மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை உத்ஸாகமாகக் கொண்டாடினர்.

ஈரோடு மாவட்டம் பவானி நகரில் உள்ள கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் பகுதியில் வழக்கம் போல் ஏராளமான பக்தர்கள் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு குவிந்தார்கள். இங்கே, வேதநாயகி சமேத சங்கமேஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளை வழிபட்டு, கோவிலுக்கு பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சந்நிதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குத் தென்படாத அமுது நதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் பகுதியில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். திருமணமான புதுமண தம்பதிகள் ஏராளமானோர் கூடுதுறைக்கு அதிகாலை முதலே வந்து மூன்று நதிகள் சங்கமிக்கும் பகுதியில் புனித நீராடி தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். பலர் புது தாலி மாற்றிக் கொண்டனர்.

பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பவானிக்கு வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் முதலியவை செய்து, பரிகார பூஜைகள் மேற்கொண்டு முன்னோர் வழிபாட்டை நடத்தினர்.

கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். ஆடிப் பெருக்கை முன்னிட்டு, ஈரோட்டில் பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

Leave a Reply