திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் இரண்டாவது மாற்று மலைப்பாதை

செய்திகள்

ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ரூ.25 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தங்க விமானக் குடமுழுக்கு விழா, திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து தணிகை இல்ல அலுவலக வளாகத்தில் ரூ. 3 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திருவள்ளூர் மாவட்ட உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது.

முருகன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மு. ஈஸ்வரப்பன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ.,இ.ஏ.பி. சிவாஜி முன்னிலை வகித்தார். கோயில் இணைய ஆணையர் மா. கவிதா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணைஅமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன், ரூ.35 லட்சம் மதிப்பில் உலோக திருமேனிகள் கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் முருகன் கோயிலுக்கு ரூ. 5 கோடி செலவில் இரண்டாவது மாற்று மலைப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியது: “திருத்தணி முருகன் கோயிலில் ரூ.25 கோடி செலவில் தங்க விமானக் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாற்று மலைப்பாதை வேண்டும் என்ற அவா பக்தர்களிடையே இருந்து வந்தது. இதையடுத்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து தற்போது அனுமதி பெற்று ரூ. 4 கோடியே 85 லட்சம் செலவில் மாற்று மலைப்பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.

இச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த மாற்று மலைப்பாதையால் திருத்தணி நகருக்குள் இனி போக்குவரத்து நெரிசல் குறையும் என அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ், தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் அறநிலையங்கள் அரசு செயலர் ரா.சிவக்குமார், அறநிலையத்துறை ஆணையர் ப.ரா.சம்பத், வேலூர் மண்டல இணைய ஆணையர் கோ.பக்கிரிசாமி, திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் என்.வி. பத்மநாபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

News:https://www.dinamani.com/edition/Story.aspx?artid=373617

Leave a Reply