பொன்னேரி – கரிகிருஷ்ணப் பெருமாள் மரத்தேர் வெள்ளோட்டம்

செய்திகள்

இக்கோயிலில் உள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் ஒரு கையில் சாட்டையுடன் மறு கையை இடுப்பில் வைத்தபடியும் மாடு மேய்க்கும் ஆயர் கோலத்துடன் தலையில் பால் செம்பை சுமந்தபடி சௌந்தர்யவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
ஆண்டுதோறும் இக்கோயில் பிரம்மோற்சவ விழா, சித்திரை மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும்.

அத்துடன் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாள் கும்மமுனிமங்களம் பகுதியில் இருக்கும் அகத்தீஸ்வரரும், கரிகிருஷ்ணப் பெருமாளும் அங்குள்ள ஹரிஹரன் கடைவீதியில் சந்திக்கும் சந்திப்பு திருவிழா பிரசித்தி பெற்ற விழாவாகும்.

பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள் தேர்த் திருவிழாவில் கரிகிருஷ்ணப் பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார்.
பராமரிப்பின்றி வீணாய் போன தேர்… இக்கோயிலுக்கு சொந்தமாக இருந்த மரத்தேர்  பராமரிப்பு இன்றி சிதிலமடைந்ததால் 1969-ம் ஆண்டு தேர்த் திருவிழா நின்று போனது. இதன் பின்னர் கோயிலும் மிகவும் பாழடைந்து போனதன் காரணமாக கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா, 1983-ம் ஆண்டு முதல் நடைபெறாமல் நின்று போனது.

இதையடுத்து இக்கோயிலை சீரமைத்து பிரம்மோற்சவ விழா நடத்த 2002-ம் ஆண்டு அப்போதைய பொன்னேரி பேரூராட்சித் தலைவர் பா.சங்கர் தலைமையில் கோயில் திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு அதன் பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.

இக்கோயிலுக்கு சொந்தமான பழமைவாய்ந்த மரத்தேர் சிதிலமடைந்து வீணாய் போனதன் காரணமாக தற்போது பூந்தேரில் தேரோட்ட விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு இக்கோயிலுக்கு புதிதாக மரத்தேர் செய்ய திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

சேலம் மாவட்டம் தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி ஸ்தபதி தலைமையில் நடைபெற்று வந்த தேர் வடிவமைக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் தேரின் உயரம் 36 அடியும், மூன்று நிலைகள் மற்றும் கலை நயத்துடன் கூடிய 200-க்கும் மேற்பட்ட மரசிற்பங்கள் ஆகியவை தேரில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தேர் சக்கரங்கள் பாரத் எவி எலக்ட்ரிகல் நிறுவனத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் (ஹைட்ராலிக் பிரேக் தொழில்நுட்பம்) செய்யப்பட்டுள்ளன. தற்போது தேர் வடிவமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயை எட்டியதன் காரணமாக (நாளை) புதிய திருத்தேரின் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது.தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் எம்.எல்.ஏ. சிவாஜி தலைமை வகிக்கிறார். திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பாஸ்கர்சுந்தரம், முன்னிலை வகிக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.இதில் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி, திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால்,  பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுனியம் பலராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

தேர் வெள்ளோட்டத்துக்கான ஏற்பாடுகளை கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், தேர் திருப்பணிக் குழுத் தலைவர் தசரதநாயுடு, கோயில் செயல் அலுவலர் வள்ளுவன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேர் திருப்பணிக் குழு உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

செய்தி: https://www.dinamani.com/edition/Story.aspx?artid=373538

Leave a Reply