வைகாசி பௌர்ணமி: சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

செய்திகள்
#image_title
sathuragiri devotees

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், வைகாசி மாத பௌர்ணமி தரிசனத்திற்காக நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

நேற்று, வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, வைகாசி விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீசுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரிமலையில் குவிந்துள்ளனர். காலை 6 மணியிலிருந்து, நன்பகல் 12 மணி வரை மட்டுமே அடிவாரப் பகுதியில் இருந்து மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதி நுழைவு வாசல் முன்பு திரண்டிருந்தனர். நாளை, மிகப்பிரசித்தி பெற்ற வைகாசி மாத பெளர்ணமி நாளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்துள்ளன.

Leave a Reply