திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்..

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
FB IMG 1680338303869

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்‌.ஆரூரா.. தியாகேசா.. கோஷம் விண்ணை பிளந்தது

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா கடந்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று காலை நடந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட விழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம். மேலும், பல்வேறு பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும்.

images 2023 04 01T134327295

இதன் மொத்த எடை 300 டன். தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேரோட்டம் நடைபெற்றது. அடுத்ததாக, காலை 7.30 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது. கலெக்டர் சாருஸ்ரீ, செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.

அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன் ஆரூரா.. தியாகேசா… என விண்ணை பிளக்க முழக்கமிட்டபடி லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். திருவாரூர் நிலையடியில் இருந்து புறப்பட்ட தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது. இந்த அழகை காண திருவாரூர், தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரின் அழகை கண்டு ரசித்தனர்.

இதனைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடந்தது. இன்று மாலையில் ஆழித்தேர் மீண்டும் நிலையை வந்தடையும். தேரோட்டத்தை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழு தேரை பின்தொடர்ந்து சென்றது. பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழித்தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

Leave a Reply