பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
500×300 1857068 palani3

பழனி முருகன் கோவிலில் இன்று அரோகரா கோஷம் முழங்க பங்குனி உத்திர கொடியேற்றம் பக்தர்கள் கோஷம் முழங்க நடைபெற்றது.இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் விதமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஈரோடு, கொடுமுடிக்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் எடுத்து பழனி முருகன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதற்காக முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினர். வேல், மயில், சேவல் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வந்தது. கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன்பிறகு காலை 10.45 மணிக்கு மிதுன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர். அதனை தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து மலைக்கோவிலில் உச்சிகால பூஜையில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் பங்குனிஉத்திர திருவிழாவில் தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி நாளை வெள்ளிகாமதேனு, நாளை மறுநாள் வெள்ளிஆட்டுகிடா, 3-ம் நாள் தங்கமயில், 4-ம் நாள் தங்ககுதிரை போன்ற வாகனங்களில் முருகப்பெருமான் வீதிஉலா வருகிறார்.

6-ம் நாள் திருவிழாவாக ஏப்ரல் 3-ந்தேதி மாலை 5.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து 8.30 மணிக்குமேல் வெள்ளி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 4-ந்தேதி முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும்.

ஏப்ரல் 7-ந்தேதி இரவு கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

Leave a Reply