
- சதுரகிரிமலையில் பக்தர்கள் குவிந்தனர்…
- வைகாசி மாத அமாவாசை சிறப்பு பூஜைகள்…..
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்.
இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்கு வருகை தந்துள்ளனர். மலைப் பகுதியில் கடுமையான வெட்கையான நிலை இருப்பதால், பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மலைக் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம் சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விருதுநகர், மதுரை, தென்காசி மாவட்டங்களிலிருந்து சதுரகிரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாளையும் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர், கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.