நம்முள் இருக்கும் தயை வளர வேண்டும்!
பகவான் வைகுண்டத்திலிருந்து கீழிறங்கிப் பலவிதமான அவதாரங்களை எடுத்துக் கொண்டது அவரைப் பொறுத்த வரையில் தேவையே இல்லையென்றாலும், சிரமப்படும் மக்களுக்கு நன்மை தரவேண்டும் என்ற ஓரே எண்ணத்துடன், கருணையினால் அவதாரம் எடுத்தார்.
பகவான் நமக்கு, மற்றவர் துன்புறும்போது அதனைத் தீர்க்கக் கூடிய சக்தியைக் கொடுத்திருக்கிறார். நாம் அந்தச் சக்தியை நமக்கு ‘தயை’ அல்லது கருணை இருந்தால்தான் உபயோகப்படுத்துவோம்.
தயை என்றால் என்ன? மற்றவர் துன்பப்படும்போது அதை நீக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றினால் அதுவே தயை. வேறு விதமாக இருந்தால் அவனை ‘தயையில்லாதவன்’ என்று சொல்வர். மனிதனுடைய சிறந்த பண்பு தயை, அப்படிப்பட்ட தயையாகிய கருணையை நம்மிடத்தே அதிகப் படுத்த வேண்டும். சிலருக்கு இயற்கையாகவே விசேஷமாகக் கருணை இருக்கும். சில பேருக்கு நல்ல மனிதர்களுடைய ஸஹவாசத்தினால் அவர்களைப் போல் தாமும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானால் தயை உண்டாகும். அதனால் நாம் தயையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
– தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு
ஸ்ரீ ஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்
குரு முகமாய்ப் பெற்றால்தான் மதிப்பு!
இந்த குரு சிஷ்யன் என்கிற சம்பிரதாயம் அனாதி காலமாக வந்திருக்கிறது. முதல் குரு பகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி. அவர் நாராயணனுக்கு உபதேசம் செய்தார். அவர் பிரஹ்மாவிற்கு செய்தார். அவர் வசிஷ்டருக்கு செய்தார். அவர் சக்திக்கு செய்தார். அவர் பராசரருக்கு செய்தார். அவர் வேத வியாஸருக்கு.. என்றபடி ஒரு குரு சிஷ்ய பரம்பரை (இருந்து வந்தது) .
இந்த பரம்பரையில் இருக்கின்ற விசேஷம் என்னவென்றால் சிஷ்யனுக்கு குருவின் விஷயத்திலே அசாதாரணமான பக்தியும், குருவிற்கு சிஷ்யன் விஷயத்திலே அசாதாரணமான அன்பும் இருக்கும். ஆதிசங்கர பகவத்பாதர் ஸாக்ஷாத் பரமசிவ அவதாரம் என்று எல்லோருக்கும் தெரியும். அவரும் கூட கோவிந்த பகவத்பாதர் சன்னிதியை அடைந்து அவரிடம் பயின்று வேதாந்த தத்வ ஞானத்தை அடைந்தார் என்கிறது சங்கர திக்விஜயம்.
சிலருக்கு ஒரு கேள்வி! “ஆதிசங்கரர் பகவான் பரமேஸ்வரரின் அவதாரம் என்கிறீர்களே, அவருக்கும் குருவிடம் போகவேண்டி இருந்ததா? அவர் தெரியாமல் போனாரா; தெரிந்தே போனாரா? அல்லது அவர் கோவிந்த பகவத்பாதரை பரீக்ஷிக்க போனாரா? அவர் கோவிந்த பகவத்பாதரை பரீக்ஷிப்பதற்காக போகவில்லை. ரொம்ப விநயத்துடன்தான் போனார். அப்போது, தெரியாமல் போனாரா, தெரிந்தே போனாரா என்று கேட்டால், “தெரியுமோ தெரியாதோ, குருவிடம் இருந்து வந்ததால்தான் அதற்கு ஒரு மதிப்பு!
ராமர் வசிஷ்டரின் சன்னிதியில் தத்துவத்தை கிரஹித்துக் கொண்டார் என்று ராமாயணம் சொல்கிறது. ராமர் சாக்ஷாத் பரமாத்மாவின் அவதாரம் அல்லவா? அவருக்கு வஸிஷ்டர் சொல்ல வேண்டி இருந்ததா? கிருஷ்ண பரமாத்மா ஸந்தீபனி மஹரிஷியிடமிருந்து வித்தைகளை கிரஹித்துக் கொண்டார் என்று பாகவதம் சொல்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் ஸந்தீபனி மஹரிஷியிடம் பாடம் கற்றுக் கொள்வதற்காக செல்ல வேண்டுமா என்று கேட்டால் அது ஒரு சம்பிரதாயம். குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும், ஸபலமாகும் என்று உபநிஷத் கூறுகிறது.
குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது. “அங்கு என்ன வித்தியாசம்? குரு சொன்னால் என்ன? சொல்லாவிட்டால் என்ன?” என்று கேட்டால் வித்தியாசம் வெளியில் பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது. உள்ளார்ந்த ஒரு வித்தியாசம் இருக்கும்.
–தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு
ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்