ஆத்மார்த்தமான செயல்பாடு.. இறைவனுக்கான வழிபாடு..!

செய்திகள்
krishnar 1 - Dhinasari Tamil

கௌடிய பரம்பரையில் சிறந்த வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான ஸ்ரீ மாதவேந்திர பூரி விருந்தாவனத்தில் வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்ரீ கோபால் அவரது கனவில் தோன்றி அவர் மறைந்திருக்கும் இடத்தை வெளிப்படுத்தி நான் உங்கள் பரிபூரண தூய பக்தியின் அன்பை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

நான் தற்போது மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளிகொணர்ந்து, கோவர்த்தன மலையின் உச்சியில் மீண்டும் நிறுவுங்கள் என உத்தரவிட்டார்.

ஸ்ரீ கோபால் கனவில் கூறியவாரே, அந்த இடத்தில் மறைந்திருந்த விக்ரகத்தை வெளிக்கொணர்ந்த பின் அற்புதமான அபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு இருந்த கோவிந்த குளம் நீரால் எண்ணற்ற குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் கோவர்த்தன மலையில் நிறுவப்பட்டார்.

அங்கு ஒரு அழகான கோயில் எழுப்பப்பட்டு சாஸ்திர விதிகளின்படி சிறப்பான முறையில் தெய்வ ஆராதனை தொடங்கப்பட்டது.

அனைவரும் பக்தி கொண்டு, சிரத்தையுடன் வணங்க ஸ்ரீ கோபால் தனது பக்தர்களை பாதுகாக்க கோவர்த்தன மலையைத் தூக்கியவாறு கைகளை உயர்த்தி நிற்கிறார்.

ஒரு சமயம் அவர் மாதவேந்திர பூரிக்கு காட்சியளித்து, நான் வெகு காலம் புதரில் இருந்ததால், கோடையின் வெப்பம் வாட்டுகிறது. புனித நீரால் அபிஷேகம் செய்திருந்தாலும், நான் இன்னும் வெக்கையாக உணர்கிறேன்.

என் முழு உடலையும் சந்தனம் மற்றும் கற்பூரம் கொண்டு நன்றாக பூசுவதே என்னை குளிர்விக்கும் என கூறினார்.

அந்நாட்களில் ஜகநாத பூரிக்கு அருகிலுள்ள மலையன் காடுகளே அரிய வகை சந்தனம் வாங்க ஒரே இடம். இறைவனின் ஆணைக்கிணங்க, அவரை மகிழ்விக்க அந்த காடுகளில் இருந்து சந்தனம் பெற மாதவேந்திர பூரி உறுதி கொண்டார்.

தான் பயணம் செய்யும் காலத்தில் ஆலயத்தில் நித்ய தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள தனது சீடர்கள் சிலருக்கு பயிற்சி அளித்தார். மாதவேந்திர பூரி விருந்தாவனிலிருந்து ஒரிசாவுக்கு சில ஆயிரம் கிலோமீட்டர் வெற்று கால்களில் நடந்தே பயணப்பட்டார்.

அவர் ஜகநாத பூரிக்கு வந்தடைந்த சமயம், அவரை போற்றி கொண்டாடினர்.
இதன் பொருட்டு, கோவில் பூசாரிகள் பெரிய அளவிலான சந்தனம் மற்றும் கற்பூரத்தைப் பெற அவருக்கு உதவினர். அவர் மிகவும் விலைமதிப்பற்ற, அரிதான சந்தன சுமையை மிகுந்த சிரமத்துடன் சுமந்து விருந்தாவனத்திற்கு திரும்பிச் செல்லத் தொடங்கினார்.

அவர் விலைமதிப்பற்ற சந்தன பொக்கிஷத்தை சுமந்து நடந்து பயணப்பட வேண்டிய பாதை அடர் காடுகள் நிறைந்ததாகவும் இந்துக்களை வெறுத்து வழிப்பறிக்கும் கும்பல் மிகுந்ததாக இருந்தது.

இத்தகைய ஆபத்தான நிலத்தின் வழியாக பல ஆயிரம் மைல் கடந்து அவர் எவ்வாறு கொண்டு வருவார்? ஆனால் அவர் கவலைப்படவில்லை.

பகவான் கோபாலருக்கு மகிழ்ச்சி அளிக்க தனது உயிரைப் பணயம் வைக்க எந்நேரமும் அவர் தயாராக இருந்தார். இது அவரது பக்தியின் சிறப்பியல்பு.

ஸ்ரீ கோபாலரின் வெப்பத்தின் வெம்மையை தணிக்க அவர் தனது உயிரைப் பணயம் வைக்கவும் தயாராக இருந்தார். அந்த வெப்பத்திலிருந்து அவரை குளிர்விக்க ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து சென்றார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த பக்தர் அவர். வழியில் கோபாலர் அவருக்குத் தோன்றி,
ரெமுனா கோவிலில் இருந்த கோபிநாதர் மீது நீங்கள் சந்தனம் பூசுங்கள் நான் இன்பத்தை அனுபவிப்பேன் என்று சொன்னார்.

எனவே, இந்த அற்புதமான நிகழ்வின் மூலம், தெய்வ வழிபாடு என்பது வெறும் ஒரு சடங்கு அல்ல; ஆத்மார்த்தமான புரிதல் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

Leave a Reply