கல்பனா தன் குடும்ப நிலைமை குறித்து தன் தோழி ரேகாவிடம் கூறினாள், என் தாய்- தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை முனுசாமி பள்ளிக்கூட ஆசிரியர்.
அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்தோம்
நான் ஐந்தாவது பெண். “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்பது பழமொழி. என் தந்தை தமிழ் ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமல்லாது, நண்பர்களும் கவலைப்பட்டார்கள்.
என் முதல் அக்கா பானுமதிக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்; போனார்கள். “அக்கா விற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார்- பணம் வேண்டாமா’ என்று அனைவரும் கவலைப்பட்டோம்.
திடீரென்று ஒருநாள், வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார்.
“அவ்வளவு வசதியும், பெரிய வேலையிலிருக்கும் பிள்ளைக்கு அதிக வரதட்ச ணையும், நகைகளும் கேட்க மாட்டார்களா- நம்மால் எப்படி முடியும்’ என்று நினைத்த போதே, பிள்ளையைப் பெற்ற தாயும் தந்தையும், “எங்களுக்கு நிறைய பணமும், நகைகளும் இருக்கு. வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்களால் முடிந்த அளவிற்கு திருமணத்தை நடத்தினால் போதும்’ என்றார்கள்.
எங்களுக்கோ வியப்பு. ஆனால் அந்த வரனே முடிந்தது. இப்படியே ஒவ்வொரு பெண்ணிற்கும் நல்ல இடமாய், பெரிய உத்தியோகத்திலிருக்கும் மாப்பிள்ளைகளே கிடைத்தார்கள்.
எனக்கும் அப்படியே அமைந்தது. இன்று ஐந்து பெண்களும் அமோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து வயதை எட்டிவிட்ட என் அப்பாவிடம் நான், “இது எப்படியப்பா சாத்தியமாயிற்று’ என்று கேட்டேன்.
அவர் சொன்னார்: “நான், என்னுடைய பதினைந்தாவது வயதில் என் நண்பன் சிவா மூலமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். இதோ, எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது.
இன்றுவரை ஒருநாள்கூட சஹஸ்ர நாம பாராயணத்தை நான் நிறுத்தியதில்லை. என் அன்பு செல்லங்களே….உங்கள் ஐந்து பேருடைய கல்யாணத்தையும் அமோகமாக நடத்தியவன் இந்த ஏழை வாத்தியார் இல்லையம்மா. சாக்ஷாத் அந்த எம்பெருமான் நாராயணனே நடத்தி வைத்தான்!’ என்றார்.
என்ன அற்புதம் பாருங்கள். ஓர் ஏழை ஆசிரியரின் ஐந்து பெண்களுக்கும் பெரிய இடத்திலிருந்து பிள்ளைகள் வந்து, அவர்களாகவே விரும்பி திருமணம் செய்து கொண்டு அமோக வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் உண்மையான இறை நம்பிக்கையே.
அதனினும் பெரிய உண்மை
விஷ்ணுசஹஸ்ரநாமத்தின்
மகிமையே! ஸ்ரீ மந் நாராயணன் மீது கொண்ட நம் நம்பிக்கை ஒரு சிறிய விதைதான்… ஆனால் ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு பெரிய மரம் உள்ளது தானே….