அட்சய திருதியை நாளில்தான், குபேரனுக்கு பகவான் கிருஷ்ணரால் ஐஸ்வர்ய யோகம் கிடைத்தது என்கிறது புராணம்.
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வருகிற மூன்றாம் நாள், திருதியை திதியில்தான் குபேர யோகம் தந்தருளினார் பகவான் கிருஷ்ண பரமாத்மா.
கிருஷ்ணர் ஒரு பிடி அவலை எடுத்துச் சாப்பிடும்போது, ‘அடசய’ என்று சொன்ன ஒற்றை வார்த்தை, குசேலருக்கு குபேர யோகத்தைத் தந்தது என்கிறது புராணம்.
இப்படியொரு அற்புதம் மிக்க ஐஸ்வர்யங்கள் நிறைந்த நன்னாள், அட்சய திருதியை நாளில்தான்!
அட்சய திருதியை என்றால் தங்கம் வாங்கவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
அட்சயம் என்றால் பூரணமானது, நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். ‘வளருதல்’ என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம்..
ஆதிசங்கரர் திருமகளைத் துதித்து, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, ஏழை அந்தணப் பெண்ணுக்கு செல்வ மழையைப் பொழியச் செய்ததும் இந்த நன்னாளில்தான்!
பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை.
திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.
கிருத யுகத்தில், ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார் என்கிறது பிரம்மபுராணம்.
செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை!
திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான் என்கிறது புராணம்!
வனவாசத்தின்போது தவம் மேற்கொண்ட தர்மருக்கு திருக்காட்சி தந்த சூரிய பகவான், அன்ன வளம் குன்றாத, பெருகிக் கொண்டே இருக்கிற அட்சயப் பாத்திரத்தை அவருக்கு அளித்தார். அதுவும் இப்படியொரு அட்சய திருதியை நாளில்தான்!
கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான்.
இந்தப் புண்ணிய நாளில்தான் பரசுராம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதைத்தான் ஸ்ரீபரசுராம ஜயந்தி என்று கேரளாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்னபூரணியான அம்பிகையிடம், பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்த சிவபெருமான், பிட்சை பெற்ற திருநாளும் இதுதான்.
இப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின என்கிறது சிவபுராணம்.
தங்கம் வாங்குங்கள் என்று எதிலும் குறிப்பிடவே இல்லை. மாறாக, ஒரு குந்துமணி அளவேனும் தங்கத்தை தானம் வழங்குவது மிகுந்த புண்ணியம் என்கிறது தர்மசாஸ்திரம்.
அதேபோல், புண்ணியம் நிறைந்த நன்னாளில், முடிந்த வரை தானம் செய்யுங்கள். ஆடை வழங்குங்கள். இயலாதவர்களுக்கு போர்வை வழங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள். ஒரு ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
உங்கள் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமி வருவாள்; ஐஸ்வர்யம் உங்கள் இல்லத்தில் என்றைக்கும் குடியிருக்கும்.
முக்கியமாக, உப்பு, சர்க்கரை என வெள்ளை நிற பொருட்கள் வாங்குவதும் தானமாகக் கொடுப்பதும் தரித்திரங்களையெல்லாம் போக்கும்
பதினாறு வகையான தானங்கள் மிக மிக உயர்ந்தவை. தங்கம், வெள்ளி, உத்திராட்சம், குடை, விசிறி, ஆடை, நீர், மோர், பானகம், காலணி, மல்லிகைப் பூ, புத்தகம், பேனா, பென்சில், நோட்டு, தயிர் சாதம், போர்வை அல்லது படுக்கை விரிப்பு முதலான பொருட்களை வாழ்வில் ஒருமுறையேனும் தானம் வழங்கச் சொல்கிறது தர்ம சாஸ்திரம்.
அட்சய திருதியை நன்னாளில் இந்தப் பொருட்களை முடிந்த அளவுக்கு தானமாக வழங்குங்கள். இதனால் பல மடங்கு புண்ணியத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்
அட்சய திருதியை நாளில் எது செய்தாலும் அது பன்மடங்கு உயரும். அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் சரி… எனவே கெட்டது செய்யாமல் கவனமாக இருங்கள்.
வழிபடுதல், நாம ஸ்மரணை மற்றும் எளியவர்களுக்கு இயன்ற அளவுக்கு தானம் செய்தல். நாம் ஜெபம் பன்மடங்காக பெருகும்.
தண்ணீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வம் பெறலாம்.
நோயால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவ உதவியும், கிழிந்த ஆடை அணிந்தவர்களுக்கு நல்ல ஆடையையும் அளிக்கலாம்.
தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும்.
இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும்.
அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள்- அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.
அட்சய திரிதியை அன்று அன்னதானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும்.
கால்நடைகளுக்குத் தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்
இன்றைய நாளில் பித்ருக்கள் காரியம் மிகுந்த சிறப்பான ஒன்றாகும். தவிர, அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்த பின், பசுக்களுக்கு வாழைப் பழம் கொடுப்பது சிறப்பு. அட்சய திரிதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.
கிராமத்தில் இருந்த வியாபாரி ஒருவன், அட்சய திரிதியை அன்று கங்கையில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, ஏழை மக்களுக்குத் தானியங்களை தானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதனால் அடுத்தப் பிறவியில் ராஜ யோகம் பெற்றார். அரசனான பிறகும் அட்சய திரிதியையில் முற்பிறவியில் செய்த புண்ணிய காரியங்களைச் செய்ததால், வைகுண்டம் அடைந்தார். எனவே அமாவாசை அன்று திதி கொடுக்காதவர்கள் கூட அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்யலாம்.
அட்சய திருதியை நாளில் செய்யக்கூடிய காரியங்கள்.
குழந்தைக்கு அன்னப் பிராசனம்
சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது.
சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம், தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.
நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.
வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ளலாம்.
இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள்.