திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்ராபௌர்ணமி விழா இன்றும் நாளையும் சிறப்பாக நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி விழாவினை (ஏப்.15 மற்றும் 16-ந் தேதிகளில்) முன்னிட்டு கிரிவலத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவல பக்தர்களுக்கு இலவச பஸ்: மாவட்ட நிர்வாகம் தகவல்
நகரை சுற்றி அமைக்கப்பெறும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து முக்கியமான இடங்களுக்கு செல்ல 50 கட்டணமில்லா தனியார் பஸ் சேவை இயக்கப்படும். சித்ரா பவுர்ணமி விழா வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவண்ணாமலை நகருக்குள் பஸ் போக்கவரத்து இருக்காது என்பதால் பக்தர்களின் நலன் கருதி ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.
ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு: இதற்கான தனி நபர் கட்டணம் மாவட்ட நிர்வாகத்தினால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஆட்டோ ரிக்சா செல்லும் வழித்தடத்தின் தொலைவை பொறுத்து ரூ.50 மற்றும் ரூ.30 தனி நபர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆட்டோக்களில் எந்தெந்த வழிதடத்திற்கு எவ்வளவு தனி நபர் கட்டணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
விதிகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்களை தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்கள் கட்டணம் பற்றி விவரங்கள் டிஜிட்டல் பேனர் மூலம் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் தென்படும் வகையில் வைக்கப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04175-232266 என்ற எண்ணிற்கு தெரியப்படுத்தலாம். இது குறித்தும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும்.
கட்டணமில்லா பஸ் வசதி: கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் கட்டணமில்லா பஸ்களை இயக்க முன்வந்து உள்ளனர்.
இதன் மூலம் நகரை சுற்றி அமைக்கப்பெறும் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து முக்கியமான இடங்களுக்கு செல்ல 50 கட்டணமில்லா தனியார் பஸ் சேவை மற்றும் 16 கட்டணமில்லா தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அளித்த பேட்டியில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், எனவே அதிக கூட்டம் இருக்கும். சித்திரை பௌர்ணமி திருவிழாவின் போது 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே சரியாகக் கண்காணித்து நிலைமையை நிர்வகித்து வருகிறோம்.
தனிப்படைகள் அமைப்பு : மேலும் பக்தர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கோயிலுக்குச் செல்லும் பாதையில் 20 உதவி மையங்களும் அமைக்கப்படும். குற்றச்செயல்கள் நடைபெறாத வகையில், கண்காணிக்க 19 தனிப்படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் பிரச்னைகளை சமாளிக்க 10 தற்காலிக பேருந்து நிலையங்களும், 35 கார் பார்க்கிங் பகுதிகளும் அமைக்கப்படும். மேலும், அனைத்து எல்லை சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளாக சித்திரா பௌர்ணமி திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர் என்று எஸ்.பி. தெரிவித்தார்.