அறப்ளீஸ்வர சதகம்: எப்படி இருந்தாலும் பயன் இல்லை!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

இருநிலையினும் பயனற்றவை

குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?
குட்டநோய் கொண்டு மென்ன?
குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன ? சுரவாது
கொஞ்சமாய்ப் போகில் என்ன?
மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?
மலராது போகில் என்ன?
மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?
மாவெண்மை யாகில் என்ன?
உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன? படரா
துலர்ந்துதான் போகி லென்ன?
உதவாத பேர்க்குவெகு வாழ்வுவந் தாலென்ன?
ஓங்கும்மிடி வரில்என் னகாண்?
அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அழகான புதிய கொன்றைமாலையை அணிகலனாகக் கொண்டவனே!,
முதல்வனே!, அருமை தேவனே!, நல்ல குணம் இல்லாத பேய்
முருங்கை தழைத்தால் என்ன பயன்?,
குட்டநோய் அடைந்தாலும் என்ன பயன்?, குரைக்கும் நாயின் மடியிற் (பால்) சுரந்தால் என்ன
பயன்?, பெருகாமற் கொஞ்சமாக
இருந்தால்தான் என்ன பயன்?, மணமில்லாத செம்முருக்கின் மலர் நன்கு மலர்ந்து
என்ன பயன்?, மலராமற் குவிந்திருந்தால்தான் என்ன பயன்?, சுவையில்லா உப்புக்கடலின் நீர்
கருநிறமாக இருந்தால் என்ன பயன்?, தூய
வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?, உண்ணத்தகாத பேய்ச்சுரைக்கொடி படர்ந்து என்ன
பயன்?, படராமல்
காய்ந்துபோனால்தான் என்ன பயன்?, பிறர்க்குப்பயன்படாதவர்கட்குச் சிறந்த வாழ்வு வந்தால்
என்ன பயன்?, பெரிய வறுமை
வந்தால்தான் என்ன பயன்?

மற்றவர்க்குப் பயன்படாப் பொருளின் வாழ்வினும் தாழ்வினும் எப்பயனும் பிறர்க்கு இல்லை.

Leave a Reply