திருப்புகழ்க் கதைகள் 257
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
மருமலரினன் – பழநி
மனிதனின் பிறப்புத் தத்துவம்
இத்திருப்புகழில் இடம்பெறும் மருமலரினன் துரந்து விட எனத் தொடங்கும் தொடக்க வரிகளில் அருணகிரியார் மனிதனின் பிறப்புத் தத்துவத்தைக் கூறுகிறார். ஒவ்வொருவரும் புரிந்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிரமதேவர் விதி தன்னை அவரவர் தலையில் எழுதி கருவில் விடுகின்றார்.
வறியவர்க்கு அன்னம் வழங்கிய ஒருவனை நிலபுலம் உள்ளவனுக்கு மகனாகவும், பொன் பொருள் வழங்கியவனைப் பெருந் தனவந்தனுக்கு மகனாகவும், ஏழை மாவணவர்கட்குப் புத்தகமும் பொன்னும் தந்து படிக்க உதவி செய்த ஒருவனை கல்விமானுக்கு மகனாக்கி கலைஞனாகவும், ஏழைகட்கு வீடுகட்டி உதவியோனைப் பல மாடமாளிகை உடையோன் மகனாகவும் பிறக்க வைப்பார் எனக் கருதப்படுகிறது.
பெருஞ்செல்வத்தைப் படைத்திருந்தும் ஏழைகட்கு உதவாத ஒருவனைப் பெரும் வறுமையாளனாகவும், ஏழைகள் மனத்தை நோவ வைத்தவனை நோயாளியாகவும், பெரியோர் மனத்தைப் புண்படுத்திய ஒருவனை உடம்பெல்லாம் அழுகிய தொழுநோயாளனாகவும், பிறன் மனைவியை விரும்பிப் பார்த்த ஒருவனைப் பிறவிக் குருடனாகவும்,
தெய்வம் இல்லை என்ற ஒருவனை ஊமையாகவும், இங்ஙனம் அவரவர் நல்வினை தீவினைகட்கு ஏற்ப அவரவர் தலைகளில் எழுதி பிரமதேவர் பிறப்பிக்கின்றனர். எழுதாக் குறைக்கு அழுதால் வருமா?, அன்று எழுதினவன் அழித்து எழுதப் போகிறானா? எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியெழுதி மேற் செல்லும் என்ற பழமொழிகள் இது குறித்து எழுந்தன. இதனைப் பாடும் போது வடலூர் வள்ளலார்,
தாதாதா தாதாதா தாக்குறைக்கு என் செய்குதும், யாம்
தாதாதா என்று உலகில் தான் அலைந்தோம் – போதாதா
என்று பாடுகின்றார். முதல் வரியில் ஏழு தா உள்ளது. இதனை எழுதா எனக் கொள்ள வேண்டும். எழுதாக்குறைக்கு என் செய்வேன்! தாதா – வள்ளலே! தா-கொடு என்று அலைந்தேன் என்பது இப்பாடற்பகுதியின் முழுப்பொருள்.
முன் செய்த வினைகளை நுகரும் பொருட்டு இந்தப் பிறவியை இறைவன் தந்துள்ளான். இந்த உடம்பு கொண்டு நுகரும் வினை பிராரப்த கர்மம் எனப்படும். பிராரப்த கர்மம் மூன்று வழியால் வரும்; ஆத்யான் மிகம், ஆதிதைவிகம், ஆதி பௌதிகம்.
(1) தன்னாலும் பிறராலும் விலங்கு, அரவம், தேள், எறும்பு, செல், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலிய உயிர்களாலும் வரும் நலம் தீங்கு முதலியன ஆதியான்மிகம்.
தன்னால் பிறரால் தனக்குவருந் தீங்குநலம்
இன்னா விலங்கரவம் தேளறும்பு-சென்முதனீர்
அட்டையல வன்முதலை மீனரவ மாதியினாங்
கட்டமுமிங் காண்மிகமே காண்.
என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு நல்ல படுக்கையை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கினார். ஆனால் அவரால் அந்தப் படுக்கையில் படுத்து உறங்க முடியவில்லை. அவர் படுக்கையில் படுத்ததும் எங்கிருந்தோ வந்து எறும்புகள் கடிக்கும். எனவே கீழே இறங்கிப் படுத்துவிடுவார். தினமும் படுக்கையில் எறும்புக்கொல்லி மருந்து அடித்தாலும் தொல்லை போகவில்லை. தன் விதியை நொந்துகொண்டு அந்தப் படுக்கையில் படுக்காமல் இருந்தார். பின்னர் குறைநீங்கி அப்படுக்கையில் படுத்து உறங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
(2) கருவிலே ஏற்படும் துன்பமும், பிறக்கும்போது ஏற்படும் துன்பமும், திரை, நரை, மூப்பு, மரணம் இவற்றால் எய்தும் இடர்ப்பாடும், சுவர்க்க நரகங்களில் ஏற்படும் இன்பதுன்பங்களும், செல்வம் வறுமை முதலியவற்றால் வரும் இன்ப துன்பங்களும் ஆதிதைவிகம்.
கருவிற் றுயர் செனிக்குங் காலைத் துயர் செய்
திரைநரைமுப் பிற்றிளைத்துச் செத்து-நரகத்தி
னாழுந் துயர் புவியை யாளின்ப மாதியெலாம்
ஊழுதவு தைவிகம் என்றோர்.
(3) பனி, இடி, வாடை, தென்றல், நீர், நெருப்பு இவற்றால் ஏற்படும் இன்ப துன்பங்கள் ஆதி பௌதிகம்.
பனியா லிடியால் படர்வா டையினாலும்
துனிதென் றலினால் சுகமும்-தனையனைய
நீரினாம் இன்பின் னலுநெறுப் பினாந்துயரின்
போரிற் பவுதிக மாகும்.
இத்தகைய துன்பங்கள் தீர முருகப்பெருமானை வழிபடுதல் வேண்டும். நெற்றி நிறைய நீறணிந்து தத்தம் வீட்டருகே உள்ள முருகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று நாள்தோறும் வழிபடுங்கள்.