லெளகிகமாக எவ்வளவு முன்னேறினாலும் அந்த பகவத் கிருபையை அடையவில்லை என்று சொன்னால் நம் ஜீவனம் ஸார்த்தகமாகது.
பணம் சம்பாதித்ததாலோ, பெரிய படிப்பு படித்தாலோ நான் பெரிய மனிதன் ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.
அந்த பகவத் சன்னிதியிலே அவ்யாஜமான பக்தியோடு இருந்த கண்ணப்பநாயனாருக்கு எப்படி ஒரு பகவத் கிருபை கிடைத்ததோ அதில் ஆயிரத்திலே ஒரு பங்கு கிருபை நமக்கு கிடைத்தாலும் நம் ஜீவனம் தன்யமாகிவிடும்.
கண்ணப்பநாயனார் என்ன படிப்பு படித்தார்? என்ன பணத்தை சம்பாதித்தார்? என்ன அதிகாரம் இருந்தது அவருக்கு? பார்ப்பதற்கு அழகாக இருந்தாரா? ரொம்ப ஆசாரமாக இருந்தாரா? ஒன்றும் கிடையாது!
அதைத்தான் பகவத்பாதர், “பக்தி என்ற ஒன்று இருந்துவிட்டால் பிறகு வேறு என்ன வேண்டும்?” என்று சொன்னார், ஒன்றும் தெரியாத, ஒன்றும் படிக்காத ஒரு வேடன் கேவலம் பக்தியினால் பகவானுடைய பரம கிருபைக்கு உயர்ந்தான் என்று சொன்னால், எது உயர்ந்தது? பக்திதான்!
அப்பேற்பட்ட பக்தியை நமது மனதிலே நாம் எப்போதும் வைத்துக்கொண்டு பகவானை நினைத்துக்கொண்டே இருந்தால் அதுதான் நம்முடைய ஜென்மம் ஸார்த்தகமாவதற்குக் காரணமாகும்.