எமது தேவனே! கணவன் பார்வைக்கு இனியவளாய், இன்மொழி யுடையவளாய், திருமகளைப் போலச் சாலவும் அழகியாய், வெறுக்கத்தக்க கோபம் இல்லாதவளாய், நோயும் இழிவும் இல்லாத ஒப்பற்ற மரபிலே பிறந்தவளாய், புகழத்தக்க நான்கு பண்புகளும் பொருந்திய நல்லொழுக்கமுடையவளாய், மாமிக்கும் மாமனுக்கும் நலம் புரிபவளாய், வாயிலில் வரும் விருந்தினரை ஆதரிப்பவளாய், ஒப்பற்ற கணவன் மொழிப்படி நடப்பவளாய், மலடியெனும் பெயரில்லாதவளாய், இரதியைப்போல இன்பக்கலவி செய்பவளாய், மற்றவருடைய வீட்டுவழி செல்லாதவளாய், அழகிய அணிகலன்களையுடைய ஒரு மங்கை இருந்தால், அவள் கற்புடையவள் எனப்படுவாள்.
மற்றையபண்புகள் பெண்களுக்குப் பொதுவானவை. நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்பவை பெண்களின் இயல்புக்குக் காவலான படைகள்.
புகழேந்தியாரும், ‘நாற்குணமும் நாற்படையா’ என்று கூறுதலைக் காண்க. பெரும்பான்மையும் ஒழுக்கங் கூறுதலின் சிறுபான்மையான நோய் பழியில்லாமையும் கூறப்பட்டது. நோய் பழியிலாமை நோயற்ற வாழ்வுக்காகக் கூறப்பட்டது.
இரதி, மதன் எனப்படுவோர் காமத் தெய்வங்கள். கலையைக் கலைமகளாகவும், திருவைத் திருமகளாகவும், கொற்றத்தைக் (வெற்றியை) கொற்றவையாகவும் வழிபடுதல் போலக் காமத்தையும் இரதி, காமன் என வழிபடுதல் நம் நாட்டு வழக்கு.
சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற காவியங்களிற் காமக் கோட்டமும் அங்குச் சென்று வழிபடுதலும் இருத்தலைக் காண்க. இங்குக் கூறப்பட்டவை கற்புடைய பெண்ணின் பண்புகள்.