திருப்புகழ்க் கதைகள் 242
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நெற்றி வெயர்த்துளி – பழநி
கற்பநகர் களிறு அளித்த மாது
ஒருமுறை, சிவனாரின் ஆனந்த நடனத்தில் லயித்து இன்புற்றிருந்த திருமாலின் கண்களில் ஆனந்த நீர் பெருகியது. திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம் கொண்டன. விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களைத் தங்களின் மகள்களாக ஏற்று அமுதவல்லி, சுந்தரவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி, அந்தப் பெண்கள் திருமுருகனை நோக்கித் தவம் செய்தனர். அதனால் மகிழ்ந்த முருகன், அவர்கள் முன் தோன்றி ஆசியளித்து, அவர்களது விருப்பப்படி அவர்களைத் திருமணம் செய்துகொள்வதாக வரம் அளித்தார். அமுதவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை மண்ணுலகிலும் பிறக்கும்படி கூறினார்.
அமுதவல்லி தேவ உலகில் நீலோற்பல மலர்ப் பொய்கையில் குழந்தையாய்த் தோன்றினாள். தேவேந்திரனும் இந்திராணியும் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து, மகளாக வரித்தனர். அங்கு அவளைச் சீராட்டி வளர்த்தது, தேவலோகத்து ஐராவதம் எனும் யானை. அதனால் தெய்வயானை (தெய்வானை) எனும் பெயர் பெற்றாள் அமுதவல்லி. இந்த நிலையில், தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை வென்று தேவர்களை சிறை விடுத்தார் முருகப்பெருமான். அதனால் தேவேந்திரன் மகிழ்ந்து, தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
இடி, குலிசாயுதம், ஐராவதம் (வெள்ளை யானை), பொன்னுலகம் ஆகியவற்றுக்குச் சொந்தக்காரியானவள் தெய்வானை. இவள் ‘முத்திமாது’- முத்தியைத் தருபவள் என்றும் அழைக்கப்பட்டாள். இவளுக்குக் ‘கேவலி’ என்றும் பெயர் உண்டு. ‘கேவலம்’ என்றால், கைவல்யத்தைத் தருபவள்; அதாவது, மேலான மோட்சத்தைத் தருபவள் என்று பொருள். முத்தியை அளிக்கவல்ல தெய்வானைக்கு முத்துமாலையும், இச்சையை நிறைவேற்றும் வள்ளிக்கு கடப்பமாலையும் அளிக்கிறான் முருகன் என்று போற்றுகிறார் அருணகிரியார்.
கிரியாசக்தியின் வடிவமானவள் தெய்வானை. செயலாற்றும் திறன்மிக்கவர்கள் புகழ் விரும்பாமல் அடக்கமாக இருத்தல்போல, தெய்வானையின் சிறப்பு, சான்றோர்களால் தனியாக நூல்களில் எடுத்துக் கூறப்பெறவில்லை. வடமொழியில் ‘தேவசேனா’ என்றழைப்பர். ‘சேனா’ என்ற சொல்லுக்குக் காப்பது என்பது பொருள். தேவர் குலத்தைக் காக்க வந்தவள் ஆதலால் தேவசேனா என்று பெயர் பெற்றாள்.
திருப்பரங்குன்றம்
முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் திருப்பரங்குன்றம். இங்கு தெய்வானைக்கு மட்டுமே உலாத் திருமேனி (உற்சவ விக்ரஹம்) உண்டு. தெய்வானைத் திருக்கல்யாணம் பங்குனி உத்திர விழாவில் 11ஆம் நாள் நடைபெறுகிறது. முருகனையும் தெய்வானையையும் பீடத்தில் அமர்த்திவைத்து நிகழும் பட்டாபிஷேகம், இங்கு மட்டுமே காணக்கூடிய நிகழ்ச்சியாகும். அதேபோல், கார்த்திகை மாதம் நடைபெறும் விழாவில் 8ஆம் நாளன்றும் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வானை கல்யாணக் காட்சியைக் கண்டு மகிழலாம். இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார். இங்கு, மாசி மாதத்தில் தெய்வானை பிராட்டியாருக்கு எண்ணெய்க்காப்பு உற்சவம் ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது.
திருச்செந்தூர்
முருகனை மணக்க திருச்செந்தூரில் தெய்வானை வழிபட்ட சக்தி லிங்கமே பின்னாளில் ஜகந்நாதர் என்று பெயர் பெற்றது. சூரனை வெல்ல முருகன் இங்கு வந்தபோது, இந்த லிங்கத்தை பூஜித்தார். திருச்செந்தூரில், ஐப்பசி மாத கந்த சஷ்டி விழாவில், குமாரவிடங்கர் (மாப்பிள்ளை சுவாமி) தெய்வானை அம்மையுடன் எழுந்தருள, தெய்வானை திருமணம் நடைபெறுகிறது.
பழநி
இங்கே, கந்த சஷ்டிக்கு மறுநாள் காலையில், மலைக்கோயிலில் ஆறுமுக சுவாமிக்கும் தெய்வானைக்கும் திருமண விழா நடைபெறும். மாலையில், ஊரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமியுடன் தெய்வானை கல்யாணம். இப்படி, ஒரே நாளில் இரண்டு முறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கந்தன்குடி
பேரளத்திலிருந்து திருநள்ளாறு செல்லும் வழியில் இந்தத் திருத்தலம் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு அருகில் மெயின் ரோடில் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த இரு கோயில்களும் அம்பரன், அம்பன் என்ற இரு அசுரர்களின் வதத்தோடு தொடர்புடையவை. கந்தன்குடி தலத்திலுள்ள முருகன் கோயிலிலும் தெய்வானைக்கு முக மண்டபம், மகா மண்டபம், கருவறை ஆகிய அமைப்புகள் உள்ள தனிச் சந்நிதியைக் காண முடிகிறது.
திருப்போரூர்
சென்னைக்கு அருகில் உள்ள திருப்போரூரில் தெய்வானைக்கு மட்டுமே தனிச் சந்நிதி உண்டு. இங்கு தெய்வானை (மூலவர்) நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். மேல் வலக்கையில் நீலோற்பல மலரும், இடக் கையில் தாமரை மலரும் ஏந்தியிருக்க, வலது முன் கரம் அபய முத்திரையுடனும், இடக் கரம் இடுப்பில் வைத்த நிலையிலும் திகழ்கின்றன. இதேபோன்ற, நான்கு கரங்கள் கொண்ட தெய்வானை வடிவத்தை, சென்னை குயப்பேட்டை கந்தசாமி கோயில், கந்த கோட்டம் ஆகிய கோயில்களிலும் காணலாம். திருப்போரூரில் கந்த சஷ்டிக்கு மறுநாள் தெய்வானை திருமணம் நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் மயூரவர்கள் காட்சி விழாவில், தெய்வானை தங்க மயிலில் பவனி வருவாள். திருத்தணிகையில், சித்திரை விழாவில் தெய்வானை திருமணம் நடைபெறுகிறது.