தத்வஞானத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான யோகதர்சனம் நம் மனத்தை முழுவசியப்படுத்துவதற்கு வழிகளையும் விதிமுறைகளையும் எடுத்துக்கூறுகிறது.
மனதை வென்றால் மட்டுமே பரமஞான ஒளியை காண தகுதி ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மேலும் யோக சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள வழிகளை மிக ஒழுங்காக கடைப்பற்றினால் நாம் ஸித்திகளை அடைவோம்.
உபநிஷத்துக்களிலும் பகவத் கீதையிலும் அனேக இடங்களில் இந்த யோக மார்க்கத்தைப் பற்றி சூட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதற்கு பதஞ்சலி எழுதின யோகதர்சனமே சிறப்பான மூலாதாரம்.
ஆதி சங்கர பகவத்பாதர் யோக மார்க்கத்தில் பெரும் வல்லமையும் கொண்டிருந்தார். அவர் பல ஸித்திகளை முழுமையாக பெற்றிருந்ததை அவருடைய வாழ்க்கை சரித்திரம் நமக்கு தெரிவிக்கிறது. இதை சித்தரிக்க அனேக உதாரணங்கள் உள்ளன.
மண்டனமிஸ்ரரின் வீட்டினுள் ஆகாயத்திலிருந்து திடீரென்று அவர் இறங்கியது ஒரு உதாரணம். அமரூக அரசர் இறந்த பின் அவருடைய உடலுக்குள் ஒரு விசேஷ யோகாப்யாஸத்தின் மூலம் அவர் புகுந்து கொண்டார்.
அவர் சிருங்கேரியில் வசித்து வந்த போதிலும் அவருடைய தாயார் பரலோகப்ராப்தி அடைவதற்கு முன் தெரிவித்த கோரிக்கையை ஏற்று உடனே காலடியிலேயே அவர் முன் தோற்றமளித்தார்.
ஆதிசங்கரர் இயற்றிய யோகதாராவளி அவருடைய மற்ற நூல்களை நோக்கின் சற்று முக்யத்வத்தில் குறைந்திருப்பினும், அதில் யோக சாஸ்திரத்தின் அனேக ரகஸ்யங்கள் வெளிப்படுகின்றன.
பதஞ்சலியின் யோக ஸுத்திரங்களை பற்றிய வேதவ்யாஸரின் உரைக்கு சங்கரர் வியாக்யானம் எழுதியிருப்பதும் யாவரும் அறிந்ததே. அப்பேர்பட்ட பரம யோகீஸ்வரர் சங்கரரை நாம் நினைவிலிருத்தி க்ஷேமம் அடைவோமாக.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்