திருவடிசூலம் :: மருத்துவ வல்லுநர்

செய்திகள்

மலைகளுக்கிடையில் அமைந்த காட்டினுள் இந்த ஆலயம் அமைந்துள்ளதால், “இடைச்சுரம்’ எனப்பெயர் பெற்றது. இந்நாளில் அது மருவி “திருவடிசூலம்’ எனப்படுகிறது.

புராண வரலாறு

முன்னொரு காலத்தில், வில்வ வனமாக இருந்த இந்த திருவிடைச்சுரத்தில், காராம் பசுவாக மாறிய அன்னை பார்வதி, நாள்தோறும் புதரில் மறைந்திருந்த சிவலிங்கத்தின் மீது பால் பொழிந்து வழிபட்டு வந்தாள். மாட்டின் உரிமையாளர் இடையனை சந்தேகித்தார்.

அவர்கள் இருவரும் அப்பசுவை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அவர்களுக்கு உண்மை புலப்பட்டது. பால் பொழியப்பட்ட புதரைக் கிளறியபோது அங்கே சிவலிங்கம் வெளிப்பட்டது. அன்று முதல் அவ்வூர் மக்கள் அந்த இறைவனை வழிபட்டுவரத் தொடங்கினர்.

அம்பிகையே பசு வடிவில் வந்து, பால் பொழிந்து பூஜை செய்ததால் இந்த அன்னைக்கு “கோவர்த்தனாம்பிகை’ (கோ = பசு) என்ற பெயர் வழங்கப்படுகின்றது. சிலர் “கோபரத்னாம்பிகை’ என்றும், “இமய மடக்கொடி’ எனவும் இந்தத் தேவியைப் போற்றுகின்றனர்.

இடைச்சுர நாதரை கௌதமர், சனத்குமாரர், பிருங்கி முனிவர் முதலியோர் வணங்கிப் பேறு பெற்றுள்ளனர்.

ஆலய அமைப்பு

இவ்வாலயம் 140 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்டு, 82 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் 27ஆவது தலமாக இது திகழ்கின்றது.

இவ்வாலயத்தின் தலைவாயில் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. ராஜகோபுரமில்லை. ஆலயத்தின் உள்ளே தெற்கு மற்றும் கிழக்கு வாயில்கள் உள்ளன. வெளி பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், முருகன் சந்நிதியும் தனித்தனியே அமைந்துள்ளன.

இவை தவிர கருவறைக் கோட்டத்தில் விநாயகர், திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோர் திருவுருவங்கள் அமைந்துள்ளன.

மேற்கு நோக்கிய பிரம்மாண்டேஸ்வரர், மற்றும் தெற்கு நோக்கிய பிரம்மாண்டேஸ்வரி சந்நிதிகளும் இவ்வாலயத்தில் தரிசனமாகின்றன.

இந்தக் கோயிலில் கிடைக்கும் புற்றுமண், நோய் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது. ஆலயத்தின் கிழக்குப் புறத்தில் திருக்குளம் அமைந்துள்ளது.

இடைச்சுர நாதர்

கிழக்கு நோக்கிய வாயிலில் நந்தி தேவர் வீற்றிருக்கிறார். கருவறையில் சேவை சாதிக்கும் மூலவரான இடைச்சுர நாதர், சதுர வடிவ ஆவுடையாரின் மேல் கம்பீரமாக அமர்ந்துள்ளார். தீப ஆராதனையின்போது லிங்கத் திருமேனியில் தீப ஒளி தெளிவாகத் தெரிவது, இவர் திருமேனியின் சிறப்பாகும்.

இமயமடக்கொடி அம்மை

தெற்கு நோக்கிய வாயிலின் வழியே அன்னை “இமய மடக்கொடி அம்மை’ நின்ற கோலத்தில் அற்புதக் காட்சி தருகின்றாள்.

இந்த அன்னையை, “திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார்’ என கி.பி. 1254ஆம் ஆண்டு விஜயகண்ட கோபால தேவன், தனது கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்திருப்பெயர், இவ்வாலயத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டீஸ்வரியை குறிப்பது என்று கூறுவோரும் உண்டு.

இலக்கியங்கள்

திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமாக இது திகழ்கிறது. மேலும், சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் இத்தலம் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது. மூலவரின் கரும் பச்சை வண்ணத் திருமேனியை ஞானசம்பந்தர், தான் இங்கு பாடிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிடுகிறார். மேலும் அப்பாடல்களில் ஐந்திணை சார்ந்த மக்களையும் இங்கு ஐக்கியப்படுத்தும் வகையில், சேற்றன மிளிர்வன கயல் இளவானை என மருதத் திணையினையும், கானமும், சுடலையும், கற்படு நிலனும் என்று முல்லை, பாலை, குறிஞ்சித் திணைகளையும், கடல்தனில் உறைவார் என நெய்தலையும் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல்கள் சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

கல்வெட்டுகள்

இக்கோயில், முதலாம் பரமேசுவரப் பல்லவன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது இவ்வூர், ஜெயங்கொண்ட சோழ வளநாட்டின் களத்தூர்க் கோட்டத்து வல்ல நாட்டிலுள்ள ஊராகத் திகழ்ந்துள்ளது.

இவ்வாலயத்தில் பல கல்வெட்டுகள் உள்ளன. கி.பி.1086 மற்றும் கி.பி.1117ஆம் ஆண்டுகளில் இக்கோயிலில் முதலாம் குலோத்துங்க மன்னன், விளக்கெரிக்க ஏற்பாடு செய்த செய்திகள், மூன்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கி.பி.1128ல் விக்ரம சோழன் காலத்திய இரு கல்வெட்டுகள், இன்றைய பல்லாவரத்தைச் சேர்ந்த ஒருவர், ஆலயத்துக்கு நிலம் அளித்துள்ளதையும், வேறொருவர் விளக்கெரித்திட தானமளித்ததையும் கூறுகின்றன.

கி.பி. 1254ல் விஜயகண்ட கோபால மன்னர், இக்கோயிலைப் பராமரித்துள்ளதை நான்கு கல்வெட்டுகள் விவரிக்கின்றன.

கி.பி. 1256ல் கோப்பெருஞ்சிங்கன் விளக்கெரிக்க அளித்த தானம் பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது. கி.பி. 13 40ஆம் ஆண்டில் ராஜ நாராயண சம்புவராய மன்னர், ஆடி மாதம் முதல் வழிபாடு உற்சவம் நடத்த ஆணையிட்டுள்ளார். இத்துடன் இம்மன்னர், கோவர்த்தனம்பாள் சந்நிதியை புதுப்பிள்ளது பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.

கி.பி. 1390ல் விஜயநகர மன்னரான விருப்பண்ணன், கி.பி. 1401 ஆம் ஆண்டில் இரண்டாம் புக்கன், கி.பி. 1409ல் குமார விஜய உடையார், கி.பி. 1533ல் அச்சுதராயர் ஆகியோர் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்து பராமரித்துள்ளனர் என்பதையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

தலமரம்

இக்கோயிலின் தலமரமாக பாதிரி மரம் திகழ்கிறது. இது தவிர இவ்வாலயத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்றும் இணைந்து வளர்ந்துள்ளன. இவை சிவன், அம்பாள், விநாயகரை குறிப்பதாகக் கூறப்படுகின்றன. அதனால் இம்மரங்களை வணங்குவதால் பிரிந்தவர் கூடுவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. இவ்வாலயத்திற்குள் ஏழு, ஒன்பது மற்றும் பதினோரு இலைகள் கொண்ட மகாவில்வ மரம் செழித்தோங்கி நிற்கின்றது.

தீர்த்தம்

தலத் தீர்த்தமாக ஆலயத்தின் எதிரே “மதுரா தீர்த்தம்’ திகழ்கின்றது. இங்குதான் இறைவன் சம்பந்தருக்கு வழிகாட்டி மறைந்ததாக, ஒரு கர்ண பரம்பரைக் கதை கூறப்படுகிறது. அதையொட்டி இக்குளத்திற்குக் “காட்சிக் குளம்’ என்ற பெயரும் உண்டு.

மகா மருத்துவர்

இவ்வாலயம் நாடி சாஸ்திரங்களில் குறிப்பிடப்படும் தலமாகத் திகழ்கின்றது. அதன்படி தீராத நோயுள்ளவர்கள் இறைவனுக்குத் தேன் அபிஷேகம் செய்து, தயிர் அன்னம் படைத்தால் நோய்கள் தீருமென்பது ஐதீகம்.

அதனால் இவரை “மருத்துவ வல்லுநர்’ என்றும், “மகா மருத்துவர்’ எனவும் மக்கள் புகழ்கின்றனர். நோய் வாய்ப்பட்டோர் இங்கு நேரில் வரவேண்டுமென்பதுகூட இல்லை. அவருடைய சுற்றமோ, நட்போகூட இந்தப் பரிகாரத்தைச் செய்யலாம். நோயாளியாய் உள்ளோர், வியாதி தீர்ந்தபின் சுரநாதரை வணங்கலாம்.

விழாக்கள்

பிரதோஷம், சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், தீபாவளி, கார்த்திகை தீபம் ஆகியவை இவ்வாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தரிசன நேரம்

இவ்வாலயம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

“திருவடிசூலம்’ என்றழைக்கப்படும் திருவிடைச்சுரம், காஞ்சிபுரம் மாவட்டம்-செங்கல்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது. திருப்போரூருக்கும், செங்கல்பட்டிற்கும் இடையே இவ்வூர் இருக்கின்றது. சென்னையிலிருந்து தென்கிழக்கே 70 கி.மீ., திருப்போரூரிலிருந்து 18 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 9 கி.மீ. தொலைவில் திருவடிசூலம் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்தும், திருப்போரூரிலிருந்தும் தனியார் பேருந்துகளும், நகரப் பேருந்தும் திருவடிசூலம் வழியாகச் செல்கின்றன. சிற்றுந்துகளிலும் பேருந்துகளிலும் செல்வோர், ஆலய வாயில் வரை செல்ல வழியுள்ளது.

Leave a Reply