அனுமன் ஜெயந்தி
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர். ஏதேனும் ஒரு நல்ல காரியம் நிறைவேற வேண்டும் என்று அனுமனைப் பிரார்த்திக்க வேண்டும்.
ராம நாமத்தைக் கூறியவாறே வாலின் தொடக்கத்தில் ஒரு குங்குமப் பொட்டை இட வேண்டும். தினமும் இவ்வாறே தொடர்ச்சியாக, இட்டுக் கொண்டு வந்தால், குங்குமப் பொட்டு வரிசை வாலின் நுனிப் பகுதியை அடைவதற்கு முன்னால், அனுமனின் பேரருளால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.
அனுமனை வழிபடுகின்றவர்களுக்கு அவர் புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை ஆகியவற்றை அருளுகின்றார்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்.”
—இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப்பாடல்
இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான லங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான் என்பது இதன் பொருள்.
ஆஞ்சநேயராகிய அனுமனை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள். அந்த வகையில் தினமும் ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்ச பூதங்களையும் வழிபட்டவர்களாவர். எனவே இனி அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான அஞ்சிலே பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!
ஆண் மூலம் அரசாளும் என்பார்கள், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேயர் அயோத்தியை ஆண்ட ராமனின் நெஞ்சத்தையே ஆண்ட பெருமைக்குறியவர். வீரத்தின் விளை நிலமாய், விஸ்வரூபமாய் நின்றவரை அவரது அவதார நாளில் போற்றி வணங்குவது சிறப்பாகும்.
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். ஸ்ரீ ராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். எங்கெல்லாம் ஆஞ்சநேயர் இருக்கின்றாரே அங்கே வெற்றியைத் தவிர வேறொன்றும் இராது என்பது நம்பிக்கையாகும்.
புராணங்களில் அஞ்சனை மைந்தன்: அஞ்சனை மைந்தன் என்றும் வாயு புத்ரன் என்றும் அழைக்கப்படும் ஆஞ்சநேயர், ராமாயணத்தில் ராமனுக்கு தொண்டனாய் இருந்தவர்.
கடல் கடந்து சென்று சீதையை அடையாளம் காட்டியவர். கானகத்தில் இருந்து நாடு திரும்பிய ராமன், அரியணையில் அமர்ந்த போது பாதம் தொட்டு பணிந்தவர் அனுமன்.
சைவத்தில்_சிவனானவர்: அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர் என்கின்றனர். ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர்.
இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்கின்றன புராணங்கள்.
எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் இணைந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
எல்லோரையும் கலங்கச்செய்யும் சனி பகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு.
ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வடமாநிலங்களில் அனுமன் ஜெயந்தி சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, போன்ற தென் மாநிலங்களில் மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அவதார நாள் கொண்டாடப்படுகிறது.
சிரஞ்சீவியான அனுமார் இன்றும் நம்முடன் இருக்கிறார். எனவே அவரது அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.
அத்துடன் அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. ஸ்ரீ ராம ஜெயம் இன்று நாள் முழுவதும் ஜெபிப்பதும் நன்மை தரும். ராம நாமம் ஜெபிப்போம் அனுமன் அருள் பெருவோம்.
அனுமனின் மகிமைகள் எண்ணிலடங்காதவை.
அஞ்சனை என்னும் கந்தர்வப் பெண்ணிடம் வாயுவின் அனுக்கிரகத்தால் உதித்ததால் ஆஞ்சநேயர் எனப் பெயர் பெற்றார்.
அவருக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.
இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும்போது சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது ஆசியைப் பெறலாம்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் குழந்தை பாக்கியமும், துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.
வாழ்வில் பல இன்னல்களையும் சிக்கலான தருணங்களிலும் மீண்டு வர மனோபலமே முக்கியம். அந்த மன தைரியம் ஹனுமனை பிரார்த்திப்பவர்களுக்கு அளித்து காப்பான்.
ஹனுமன் ஜெயந்தி நாளில் அனைவருக்கும் நல் வாழ்வினை தந்திடுவான் ராம தூதன்