உத்யோகம், பதவி உயர்வுக்கு வழிபட இந்த ஆலயம்!

செய்திகள்

புண்ணியம் தந்து, இழந்ததை மீட்டுத் தரும் புன்னைநல்லூர் கோதண்டராமர் ஆலயம்

தஞ்சாவூர் அருகில் உள்ள புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மன், உலகப் பிரசித்தம். இதே புன்னைநல்லூரில், மாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே, பின்னே அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலுக்குப் போயிருக்கிறீர்களா?

அழகும் அற்புதமும் நிறைந்தவர் என்று புன்னைநல்லூர் ராமரைக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.

தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு ஆலயங்கள் குறைவுதான். தஞ்சை தேசத்தில், புன்னைநல்லூரில் மாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்து உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலை அறிவீர்களா?

தஞ்சாவூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம், கோதண்டராமர் திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர்.

இங்கே புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. புன்னைநல்லூர் மாரியம்மனின் சாந்நித்தியத்தை உணர்ந்து, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

அப்படியே பெருமாள் கோயிலையும் அறிந்து அங்கு வந்து தரிசனம் செய்து, கோதண்டராமரை வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

புராதனமான ஆலயம்தான். அழகிய பிராகாரமும் கோபுரமும் கொண்டு காட்சி தருகிறது ஆலயம். மூலவர் சாளக்ராம ராமராக, சீதை மற்றும் லட்சுமணருடன் அமைந்திருப்பது விசேஷம். தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னர் காலத்தில் இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு, ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டது.

சரபோஜிகளிடையே பெண் எடுக்கும் திருமண வீட்டில் இருந்து, அதாவது மாமனார் வீட்டில் இருந்து சாளக்ராமம் எனும் புண்ணியம் மிக்க கல்லை வழங்கி ஆசிர்வதிப்பார்கள். அந்தக் கல்லைக் கொண்டு மூலவர் திருமேனியை உருவாக்கி, பிரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.

இங்கே, புதன்கிழமைகளில் ஸ்ரீராமருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள், வாரந்தோறும் புதன்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீகோதண்டராமரை துளசிமாலை சார்த்தி வணங்கிச் செல்கிறார்கள்.

தொடர்ந்து ஒன்பது புதன்கிழமை அல்லது ஒன்பது சனிக்கிழமை வந்து தரிசித்தால், இழந்ததை மீட்கலாம். உத்தியோகம் சிறக்கும், பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Leave a Reply