விஷ்ணு அவதாரம் ஒவ்வொன்றிலும் சொல்லப்பட்ட கருத்துகள்
பொதுவாக பகவான் விஷ்ணு மூன்று காரணங்களுக்காக அவதரிக்கிறார். இவை மூன்று தனிப்பட்ட காரணங்கள் அல்ல – ஒன்றோடொன்று தொடர்புடையவையே. அவையாவன:
நல்லோரை காத்தல்
(அவர்களுக்கு இன்னல் விளைவிக்கும்) தீயோரை தண்டித்தல்
(இவ்விரண்டின் மூலம்) அறத்தை நிலைநாட்டுதல்
அனைத்து அவதாரங்களிலும் இம்மூன்றை காணலாம். ஒவ்வொரு அவதாரத்தின் நோக்கமும், அதிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினைகளும்.
மீன்: வேதங்களை மீட்டல்.ஒவ்வொரு பிரளயத்தின் பொழுதும் பகவானே நமக்கு தேவையான அறிவை அளிக்கிறார்.
ஆமை: துர்வாசரின் சாபத்தால் துன்புற்ற தேவர்களை காத்த அவதாரம். தேவர்களே ஆயினும், பெரியோரை (துர்வாசரை) அவமதித்தால் துன்புற நேரிடும். வாழ்க்கையில் அமிர்தமும் நஞ்சும் ஒன்றாகவே இருக்கின்றன. நாம்தான் தெய்வத்தின் துணையோடு அவற்றை பிரித்துணர வேண்டும்
பன்றி: பாசி தூர்த்துக் கிடந்த பூமாதேவியை மீட்டார். நாம் இருக்க இடம் அளித்தார். வராஹ புராணத்தில் பகவான் பூமாதேவிக்கு உபதேசித்ததை, பூமாதேவி நமக்கு ஆண்டாளாக அவதரித்து, திருப்பாவை 5ஆம் பாடலில், “வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, தூமலர் தூவி தொழுது” என்று பகவானை வணங்க எளிய முறையை உபதேசித்தார்.
நரசிம்மர்: பிரஹ்லாதனைக் காத்து, இரணியனை அழித்தார். தூய அன்புடன் அழைத்தால், தூணிலிருந்தும் நம்மை காக்க வருவார்
வாமனர்: ஒரு அவதாரத்தில் தாம் அளித்த வாக்கை, எத்தனை காலமானாலும் காக்கும் இயல்புடையவர் பகவான். பிரகலாதனுக்கு அவன் வம்சத்தில் எவரையும் கொல்ல மாட்டேன் என்று நரசிம்ம அவதாரத்தில் கொடுத்த வாக்கை காக்கும் வண்ணம், அவனது பெயரனான மகாபலியை பாதாள லோகத்தின் மன்னராக்கினார்.
பரசுராமர்: மூவேழ் தலைமுறை அரசர்களை அழித்து அறவழி ஆட்சி நடக்க வழிவகுத்தார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது பரசுராம அவதாரத்திலிருந்து அறியலாம்
இராமர்: எதிலும் பற்றின்றி அரச பதவியை துறந்து கானகமேகினார். தகாத ஆசை அழிவை தரும் என்பது இராமாயணத்தின் மூல கருத்தாகும்
பலராமர்: பிரலம்பன், பல்வலன் போன்றோரை அழித்தார். அண்ணனாக இருப்பினும், தம்பி கிருஷ்ணனை மீறி அவர் ஒரு செயலும் செய்யவில்லை.
கிருஷ்ணர்: தர்மத்தை நிலைநாட்டினார். பகவத் கீதையை அருளினார். பகவான் கிருஷ்ணரின் பெருமைகளை ஒன்றிரண்டு வரிகளில் கூறிவிட முடியாது
கல்கி: எதிர்கால அவதாரம். தர்மத்தை நிலைநாட்டுவார்.
இதை தவிர குறிப்பிட்ட அவதாரங்களுக்கு (அவற்றின் வரிசைக்கு) பெரியோர்கள் பரிணாம வளர்ச்சியை குறிப்பதாக கீழ்கண்ட காரணங்கள் உரைக்கின்றனர்:
மீன்: நீர்வாழ் உயிரினம்
ஆமை: நீர் மற்றும் நிலத்தில் வாழ்வது
பன்றி: நீர் வற்றத் தொடங்கிய பின்னர் உள்ள சேற்றில் வாழ்வது
நரசிங்கம்: மிருகத்திற்கும், மனிதனுக்கும் இடைப்பட்ட (இரண்டும் கலந்த) உயிரினம்
வாமனர்: குள்ள மனிதன் (இன்றைக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் இவ்வாறான குள்ள மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன)
பரசுராமர்: கையில் கோடரியுடன் இருப்பவர் (ஆதி மனிதனின் முதல் ஆயுதம் கோடரியே)
ராமர்: வில்லேந்தியவர் (வேட்டையாட தகுந்த ஆயுதம் வில்)
பரசுராமர்: கலப்பை ஏந்தியவர் (விவசாயத்தை குறிக்கும்)
கிருஷ்ணர்: ஆடு மாடு மேய்த்தல் மற்றும் நகரம் அமைத்தல் (துவாரகையை அமைத்தவர்)
கல்கி: எதிர்காலத்தில் தோன்றக்கூடிய மனித ரூப அவதாரம். அநீதி வழியில் ஆட்சி நடத்தி இந்துக்களை வதைப்பவர்களை அழித்து அறத்தை நிலைநிறுத்துதல்.