தவம், பிராயச்சித்தம்
புவிமகள் வராகபகவானிடம் மனிதன் தன் பாவங்களுக்குப் பரிகாரம் (அ) பிராயச்சித்தம் பெறுதல் எவ்வாறு? என்று கேட்க, வராக மூர்த்தி நியமிக்கப்பட்ட வழியில் என்னைப் பூசிப்பதன் மூலம் பெறலாம் என்றார்.
நியமிக்கப்பட்ட வழிமுறை : புறத்தூய்மையை நீரால் பெறுதல், விளக்கேற்றுதல், புனித மந்திரங்களை ஜபித்தல்.
பசுஞ்சாணியால் தரையை மெழுகுதல், விஷ்ணுவின் பிரதிமைக்கு நெய் அபிஷேகம் செய்தல், மலர்கள், மலர் மாலைகள், தூபம், தானியம், பால் நிவேதனம் செய்தல். ஆனால், இவை அனைத்தையும் விடச் சிறப்பாக தூய உள்ளத்துடன் செய்யும் பக்தியை விஷ்ணு விரும்புகிறார்.
நன்னெறியில் நின்று, விரதங்கள் அனுஷ்டித்து, பெற்றோர்களைக் கவுரவமுடன் ஆதரித்தல் போன்றவை மறுபிறப்பு உண்டாகாமலிருக்க உதவும். கோகமுகம் என்னும் தீர்த்தத்தில் மரித்தவர் மறுபடியும் பறவையாகவோ, விலங்காகவோ பிறக்கமாட்டார். அதை நிரூபிக்க ஒரு கதை காண்பீர்.
பழங்காலத்தில் ஒரு ராஜாளி, மீனவரிடமிருந்து ஒரு மீனை கவ்விக் கொண்டு விண்ணில் செல்ல அதனால் மீனின் பளுவைத் தாங்கமுடியவில்லை. அது கீழே விழுந்து மடிந்தது, மீனும் மடிந்தது.
பின்னர் அந்த மீன் அனந்தபுரம் என்ற நாட்டில் இளவரசனாகப் பிறந்தது. ராஜாளியும் ஓர் அழகிய அரசகுமாரியாகப் பிறந்து இந்த இளவரசனை மணந்து சில நாட்கள் கழிய இளவரசன் பயங்கர தலைவலியால் அவதிப்பட்டான்.
அவர்கள் பெற்றோர்களின் அனுமதி பெற்று கோகமுகத் தலத்தை அடைந்தனர். அவர்கள் அங்கு விஷ்ணுவைத் துதித்தனர்.
அவர் அருளால் அவர்களின் முற்பிறவி விஷயங்களை அறிந்தனர். இளவரசன் முற்பிறவியில் மீனாக இருந்து விண்ணிலிருந்து கீழே விழுந்து தலை மீது மோதப்பட்டதால் இப்போது தலைவலியால் அவதிப்படுகிறார்.
விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்து இருவரும் முக்தி அடைந்தனர். அதனாலே கோகமுகத் தீர்த்தம் புகழ்பெற்ற தலம் ஆயிற்று.
பாவங்களுக்கான பரிகாரங்கள்
தூய்மையற்ற வாயால் விஷ்ணுவைப் பூசித்தால் அதுவரையில் பெற்றிருந்த புண்ணியமும் போய்விடும். குளிர் இரவில் கட்டாந்தரையில் போர்வையின்றி தொடர்ந்து ஏழு நாட்கள் தூங்கினால் அதுவே அதற்கான பிராயச்சித்தமாகும்.
சவத்தைத் தொட்டபின் (அ) மயானத்திலிருந்து திரும்பி வந்த பிறகு விஷ்ணுவைப் பூசித்தால் உண்ணா நோன்பிருந்து அந்தப் பாவத்தை நீக்கிக் கொள்ளலாம்.
நியமித சமயச் சடங்குகள் செய்யாமல் விஷ்ணு விக்கிரகத்தைத் தொட்டால் விஷ்ணுவின் அதிருப்தியைப் பெறுவர். இதற்குப் பரிகாரமாகக் கிழக்கு நோக்கி நின்று, கை கால்களை மண்ணால் தூய்மை செய்து தூய்மை ஆகி தியானம் செய்ய வேண்டும்.
மன்னன் கொடுக்கும் அரிசியை ஏற்பது பாவம். மன்னன் கோயில் கட்டினால், விஷ்ணு விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தால், தக்க தூய கலத்தில் சோறு ஆக்கி விஷ்ணுவுக்கு நிவேதனம் செய்தால் அவற்றை அனைவரும் அன்னதானமாக ஏற்கலாம்.
பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் உணவு உண்டால், தொடர்ந்து ஆறு இரவுகள் உண்ணா நோன்பு அனுசரிக்க வேண்டும். அதற்குப் பதிலாக மூன்று நாட்கள் நீர், பால், நெய் உட்கொண்டு ஒருநாள் உபவாசம் இருப்பதும் தக்க பரிகாரமாகும்.
சிவப்பு நிற ஆடை, கருப்புத்துணி, அழுக்குத்துணி அணிந்து விஷ்ணுவைப் பூசித்தால் உபவாசம் தக்க பரிகாரமாகும்.
மயானம் சென்று வந்து தூய்மையின்றி இருந்தால் திறந்த வெளியில், முள் புல்மேல் ஒரு வாரம் உறங்கி, தன் உணவில் கால் பங்கு மட்டுமே உண்பது விதியாகும்.