பரமன் நடந்து சென்ற பாதையில் ஒரு பயணம்

செய்திகள்

மும்மூர்த்திகளில் ஒருவரான படைக்கும் கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம், “தான்’ என்ற கர்வம் தலைக்கேறிவிட்டது. அனைத்து உயிர்களையும் படைப்பதனால், “தானே முதல்வன்’ என எண்ணிக் கொண்டார். அதனால் ஆணவம் கொண்டார். அதனை அடக்கும் வாய்ப்பு முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது.

கைலாயத்தில் தேவாதி தேவர்கள் அனைவரும் கூடிய ஒரு சந்தர்பத்தில், “பாலகன்தானே’ என்று முருகப் பெருமானிடம் அலட்சியம் காட்டினார் நான்முகன். இதை அறிந்த முருகன், பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு பணித்தார். பிரம்மனால் உரிய வகையில் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மனின் தலையில் குட்டி, அவரை சிறையில் தள்ளினார். இதனால் படைக்கும் தொழில் பாதிப்படைந்தது.

புதிய திருவிளையாடல்

தேவர்கள் அனைவரும் சென்று பிரம்மன் விடுதலையாக வேண்டியதன் அவசியத்தை சிவபெருமானிடம் எடுத்துக் கூறினர். அதையெல்லாம் அறியாதவரா பரம்பொருள்? எத்தனையோ திருவிளையாடல்களை நடத்திய தனக்கு, “இது முருகப்பெருமான் மூலம் வரும் ஒரு புதிய திருவிளையாடல்’ என்பதை அறிந்தவர்தானே அவர்? எனவே முருகனிடம், பிரம்மனை விடுதலை செய்யும்படிக் கூறினார். “பிரணம் எனப்படும் ஓம்காரத்தின் உட் பொருள் தெரியாத பிரம்மனுக்கு படைப்புத் தொழில் எதற்கு?’ என எதிர்க்கேள்வி போட்டார் முருகப் பெருமான்.

“பிரம்மனுக்கு தெரியாத பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?’ என முருகனிடம் சிவபெருமான் கேட்க, “எனக்குத் தெரியும்’ என்றார் முருகப் பெருமான். “அப்படியென்றால் சொல்’ என்றார் பரமேஸ்வரன். “தத்துவ உபதேசத்தை அப்படி நினைத்த மாத்திரத்தில் சொல்ல முடியாது. குரு இருக்கும் இடம் தேடிச் சென்றுதான் தத்துவ உபதேசம் பெற வேண்டும். தாங்கள் விரும்பினால் நான் இருக்கும் இடமான சுவாமி மலைக்கு வந்து விளக்கம் பெற்றுச் செல்லுங்கள்’ என்று திருவிளையாடலின் தீவிரத்தை அதிகரித்தார் முருகப் பெருமான். ஆட்டத்தின் உச்ச கட்டம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் சிவபெருமான்.

கண்டறியாதன கண்டேன்

திருவையாறு, ஐந்து நதிகள் பாயும் அற்புதப் பிரதேசம். இங்கு “ஐயாறப்பர்’ என்ற திருநாமத்துடன் சிவபெருமானும், “அறம் வளர்த்த நாயகி’ என்னும் பெயரோடு அம்பிகையும் கோயில் கொண்டுள்ளனர். இறைவன் தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட புண்ணிய பூமி இது. சுசரிதன் என்னும் சிறுவனுக்காக இறைவன் காலனைக் காலால் மிதித்துக் காப்பாற்றியது இங்குதான். அப்பருக்கு கயிலை காட்சியை காண்பித்து அவர், “கண்டறியாதன கண்டேன்’ என்று கண் கலங்கிய ஊர். தேவார நால்வர்கள் மட்டுமல்லாது ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்றவர்களாலும் பாடப் பெற்ற ஸ்தலம். சம்பந்தப் பெருமான் திருவையாற்றை தன் பாடல்களில் “”வளநகரம் திருவையாறு” என்றும் “”வண் திருவையாறு” என்றும் அழைக்கின்றனர். இது திருவையாற்றின் செழிப்பினையும், சிறப்பினையும் குறிப்பது மட்டுமல்லாமல் அந்நாளிலேயே திருவையாறு நகரமாக விளங்கியதையும் தெளிவாகக் காட்டுகின்றது. இத்தகைய சிறப்பு மிக்க திருவையாற்றில் இருந்துதான் பரமனின் பயணம் தொடங்கியது.

அது ஒரு அற்புதமான ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் கூடிய நன்னாள். அன்றைய தினம் சக்தி, கணபதி உட்பட தன் படைபரிவாரங்களுடன் கைலாயத்திலிருந்து, “தென் கயிலாயம்’ எனப் போற்றப்படும் திருவையாற்றில் இறங்கினார் சிவபெருமான். அங்கிருந்து சுவாமி மலைக்கு நந்தியெம்பெருமானை தூது அனுப்பி, “உபதேசம் பெற எப்போது வரலாம்?’ என முருகனிடம் கேட்டு வரச் சொன்னார். அதற்கு முருகன், “தத்துவ உபதேசம் பெற படை, பரிவாரங்கள் தடையாக இருக்கும். எனவே பரமசிவன் மட்டும் சீடனின் மனநிலையோடு தனித்து வந்தால் உபதேசம் செய்ய நான் தயார்!’ என்று கூறினார்.

நடந்ததை நந்தியிடம் கேட்டறிந்த சிவபெருமான், மனம் மகிழ்ந்தார். ஆதிகுருவான தட்சிணாமூர்த்தியாக இருந்து, சனகாதி முனிவர்கள் உட்பட உலகிற்கெல்லாம் குருவாக இருந்து உபதேசம் செய்த தனக்கு, தன் மகனே குருவாக இருந்து உபதேசம் செய்யப் போகும் “விளையாட்டை’ எண்ணி உவகை கொண்டார்.

பரமன் நடந்த பாதை

திருவையாற்றில் தன் பரிவாரங்களுடன் வந்து இறங்கிய சிவபெருமான் தன்னுடன் வந்தவர்களை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு யோசனை செய்தார். கங்கையில் புனிதமான காவிரி ஆற்றின் வடகரையோரமாக அமைந்த சோலைகளின் நடுவே தனது பயணத்தைத் துவக்கினார். முதலில் தன் சிரசில் இருந்த சந்திரனை இறக்கினார். திருவையாற்றுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் அவரை இருக்கச் செய்தார். திங்கள் எனும் சந்திரன் அமர்ந்ததால் அவ்வூர் “திங்களூர்’ ஆயிற்று. அது முதல் இத்தலம் “சந்திர பரிகாரத் தலமாக’ விளங்கி வருகிறது. பைரவரை அடுத்த கிராமத்தில் நிறுத்தினார். அது பைரவ ஷேத்திரமாக மாறி இன்று “வைரவன் கோயில்’ என்று விளங்கி வருகிறது. சிஷ்யனாக செல்ல வேண்டி இருந்ததால் தன்னிடம் இருந்து ஈஸ்வர அம்சத்தை அடுத்த கிராமத்தில் நிலை நிறுத்தினார். ஈசனின் அம்சம் குடி கொண்ட அத்தலம் தற்போது “ஈச்சங்குடி’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து புறப்பட்டு சாலையிலிருந்து சற்றே விலகி கொள்ளிடக்கரை நோக்கி வடக்கே நடந்தார். சோமாஸ்கந்தரை “சோமேஸ்வரபுரத்தில்’ இருக்கச் செய்தார். தம்பதி சமேதராக தன்னுடன் வந்த நவகிரகங்களை அடுத்த கிராமத்திலுள்ள “வஜ்ரகண்டீஸ்வரர்’ ஆலயத்தில் இருக்கச் செய்தார். தன்னுடன் வந்த வீரர்களையும் அவர்கள் பாதுகாப்புக்கு அங்கு நிறுத்தி வைத்தார். அது முதல் அத்தலம் “வீரமாங்குடி’ என அழைக்கப்பட்டு, நவக்கிரகப் பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

வீரமாங்குடியில் இருந்து புறப்பட்டு தேவர்களை தேவங்குடியிலும், மாரியம்மனை மணலூரிலும், நந்தியை இலுப்பக்கோரையிலும், கணபதியை, கணபதி அக்ரகாரத்திலும் இருக்கச் செய்தார்.

அங்கிருந்து புறப்பட்டு மேட்டுத் தெருவில் காளிகாதேவியையும், கருப்பூரில் காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியையும், உமையவளை உமையாள்புரத்திலும், கங்கையை கங்காதரபுரத்திலும் இருக்கச் செய்தார்.

தன்னுடன் வந்த படை பரிவாரங்கள் அனைத்தையும் மேற்கண்ட இடங்களில் நிலை நிறுத்திய பிறகு தனியனாக, தனயனிடம் உபதேசம் பெற சுவாமி மலைக்குச் சென்றார் சிவபெருமான். ஈசனே ஆனாலும் ஒரு குருவிடம் உபதேசம் பெற எப்படிச் செல்ல வேண்டும் என்பதைக் காட்ட சிவபெருமான் நடத்திய இணையற்ற திருவிளையாடலே இது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதன்பிறகு பிரம்மன் விடுதலை பெற்றது தனிக்கதை.

பரமன் நடந்து வந்த பாதையில் நீங்களும் பயணித்து இறையருளைப் பெற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

;"> பயண வழிக் குறிப்புகள்

தஞ்சையிலிருந்து திருவையாறு (13கி.மீ.) சென்று, அங்கு ஐயாறப்பரையும், 32 அறங்களையும் காத்து ரட்சித்து வரும் அம்பாள் அறம் வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்ய வேண்டும்.

பின் திங்களூர் (4 கி.மீ.) சென்று அங்கு எழுந்தருளியுள்ள கைலாசநாதரையும், பெரிய நாயகி அம்மனையும், சிறப்பு மூர்த்தியான சந்திர பகவானையும் தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் திங்களூரில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில், சாலை ஓரம் அமைந்துள்ள வைரவன் கோயில் வைரவரை தரிசனம் செய்ய வேண்டும். அங்கிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈச்சங்குடி தலத்தை தரிசிக்க வேண்டும். ஈச்சங்குடியில் இருந்து புறப்பட்டு 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள சோமேஸ்வரபுரம் கிராமக் கோயில்களைத் தரிசனம் செய்ய வேண்டும். அங்கிருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள நவக்கிரக தோஷ பரிகார ஸ்தலமாக விளங்கி வரும் வீரமாங்குடி வஜ்ஜிரகண்டீஸ்வரரையும் அம்பாளையும் தரிசனம் செய்து அக்கோயிலில் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் நவக்கிரகங்களை வணங்க வேண்டும். அங்கிருந்து 2 கி.மீட்டரில் உள்ள தேவன்குடி வழியாக மணலூர் சென்று மகா மாரியம்மனை கும்பிடுவது மரபு. பின் 1 கி.மீட்டர் தொலைவில் சாலையோரம் காவிரிக் கரையில் மதகின் மீது அமர்ந்துள்ள நந்தியெம்பெருமானை தரிசனம் செய்துவிட்டு, அடுத்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள “கணபதி அக்ரகாரம்’ கிராமத்திலுள்ள கணபதி கோயிலை வழிபட வேண்டும். பின்னர் அங்கிருந்து நான்கு கி.மீட்டர் தூரத்தில் உள்ள மேட்டுத் தெருவில் இருக்கும் மகாகாளியம்மனை வழிபட்டு, அருகிலுள்ள கருப்பூர் கிராமத்தில் காவல்தெய்வம் கருப்பண்ண சாமியைக் கும்பிட்டு, அங்கிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உமையாள்புரம் கிராமத்தில் குங்கும சுந்தரியாக எழுந்தருளி அருள் பாலிக்கும் உமையவளையும் காசி விஸ்வநாதரையும் தரிசனம் செய்ய வேண்டும்.

உமையாள்புரத்தில் இருந்து புறப்பட்டு 2 கி.மீட்டர் தொலைவில் கங்காதரபுரம் செல்ல வேண்டும். அங்கு கங்கைக்கு கோயில் எதுவும் கிடையாது. எனினும் காவிரி நதியை கங்கையாய் பாவித்து வணங்க வேண்டும். அங்கிருந்து 1 கி.மீட்டர் சென்று சுவாமி மலையில் தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமி நாதனை தரிசனம் செய்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும்.

உங்கள் பயணம் எப்போது?

பரமன் பாதம் பட்ட புண்ணிய பூமியில் நீங்களும் ஒரு முறை பயணம் செய்துதான் பாருங்களேன். அது உங்களுக்கு ஒரு சிறந்த ஆன்மீக அனுபவமாக இருக்கும். காவிரிக்கு கரை எழுப்பியபோது கரிகாலன் ஒரு அற்புதமான ராஜபாட்டையை கல்லணையில் இருந்து பூம்புகார் வரை அமைத்தான். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ராஜபாட்டையில்தான் பரமன் நிலை நிறுத்திய அத்தனைத் தெய்வங்களின் ஆலயங்கள் உள்ளன. பரமனைப் போலவே, இவ்வாலயங்களும் எளிமையாக அமைந்துள்ளன. இதற்காக நீங்கள் ஒரு நாள் ஒதுக்கினால் போதும். பிரதோஷம் அல்லது பெüர்ணமி நாட்களில் உங்கள் பயணத்தை வைத்துக் கொள்வது நல்லது. நடக்க முடிந்தவர்கள் நடந்து செல்லலாம். இரு சக்கர வாகனம், கார் வசதி உள்ளவர்கள் அதில் பயணிக்கலாம். ஒரு வேளை நீங்கள் செல்லும் நேரத்தில் சில ஆலயங்கள் மூடி இருக்கலாம். அதனால் பாதகமில்லை. எளிமையான இக்கோயில்களை வெளியில் இருந்து தரிசனம் செய்தாலே அளவற்ற புண்ணியம் உண்டாகும். ஆலயங்களை விட பரமனார் பாதம் பட்ட இந்தப் பாதைதான் முக்கியமானது. இந்த யாத்திரையைச் செய்வதால் எல்லா நலன்களும் உண்டாகும். குழுவாக வருபவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால்இக்கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளலாம்

டி. கோவிந்தராஜு, எம்.ஏ., செயல் அலுவலர், தஞ்சாவூர்

https://www.dinamani.com/edition/story.aspx?artid=321551

 

Leave a Reply